காஷ்மீர் வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்கது – பிரதமர் மோடி வரவேற்பு

இந்தியா

காஷ்மீர் வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்கது – பிரதமர் மோடி வரவேற்பு

காஷ்மீர் வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்கது – பிரதமர் மோடி வரவேற்பு

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செல்லும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பிரதமர் மோடி வரவேற்பு தெரிவித்துள்ளார்.

ஜம்மு – காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், இன்று சிறப்பு அந்தஸ்து ரத்து செய்தது செல்லும் என தீர்ப்பளிக்கப்பட்டது. ஒன்றிய அரசு எடுத்த நடவடிக்கையை ரத்து செய்ய இயலாது; அரசின் நடவடிக்கைகள் சட்டப்படி செல்லும்.

அதன்படி, ஜம்மு காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து 370வது பிரிவை ஒன்றிய அரசு நீக்கியது செல்லும். அடுத்தாண்டு (2024) செப்டம்பருக்குள் காஷ்மீரில் தேர்தல் நடத்த வேண்டும் என தேர்தல் ஆணையத்தை அறிவுறுத்துகிறோம். தேர்தலை நடத்தி ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்தை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல், லடாக்கை யூனியன் பிரதேசமாக உருவாக்கியது செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

இந்நிலையில், காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செல்லும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பிரதமர் மோடி வரவேற்பு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், காஷ்மீர் வழக்கில் உச்சநீதிமன்றம் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது. ஜம்மு காஷ்மீர், லடாக்கில் உள்ள சகோதர, சகோதரிகளுக்கு உச்சநீதிமன்ற தீர்ப்பு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு சட்டப்படியானது மட்டுமல்ல; நம்பிக்கையின் ஒளியாகும் என கருத்து தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு, நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாகவும், ஒளிமயமான எதிர்காலத்துக்கான வாக்குறுதியாகும் என்றும் பிரதமர் மோடி வரவேற்பு அளித்துள்ளார். வலிமையான, ஒன்றுபட்ட இந்தியாவை உருவாக்க வேண்டும் என்ற கூட்டு முயற்சிக்கு சாட்சியாக நீதிமன்ற தீர்ப்பு விளங்குகிறது. 370வது சட்டப்பிரிவால் வஞ்சிக்கப்பட்ட விளிம்பு நிலை சமூகத்திற்கு பயன்களை கொண்டு சேர்க்க உறுதி பூண்டுள்ளோம்.

2019, ஆக.5-ம் தேதி நாடாளுமன்றம் எடுத்த முடிவு அரசியல் சட்டப்படி செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்தியர்களான நாம் உயர்த்திப் பிடிக்கும் ஒற்றுமையை உச்சநீதிமன்ற தீர்ப்பு உறுதிப்படுத்தி உள்ளதாக மோடி கருத்து தெரிவித்துள்ளார். ஜம்மு – காஷ்மீர் மற்றும் லடாக் மக்களின் ஒற்றுமை, நம்பிக்கை, வளர்ச்சியை பிரகடனப்படுத்தும் தீர்ப்பு என மோடி பாராட்டு தெரிவித்திருக்கிறார்.

Leave your comments here...