மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி – தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

தமிழகம்

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி – தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி – தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நிதியாக ரூ.6000 வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்த தொகை அந்ததந்த பகுதிகளில் உள்ள நியாய விலை கடைகளின் மூலம் ரொக்கமாக வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும், பல்வேறு இழப்பீடுகளையும் நிவாரண உதவிகளையும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பு: மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவித் தொகை வழங்குவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம், தலைமைச் செயலகத்தில் இன்று (9-12-2023) முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் உள்ளிட்ட உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். வெள்ள சேதம் குறித்தும், வழங்கப்பட வேண்டிய நிவாரணத் தொகை குறித்தும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

இதனடிப்படையில், மிக்ஜாம் புயலால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத் தொகையாக ரூபாய் 6 ஆயிரம் வழங்கிட மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்த நிவாரணத் தொகையினை, பாதிக்கப்பட்டவர்கள் குடியிருக்கும் பகுதிகளில் உள்ள நியாய விலைக் கடைகளின் மூலம் ரொக்கமாக வழங்கிட முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

இழப்பீடுகள் விவரம்:புயல், வெள்ளத்தினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு, இழப்பீட்டுத் தொகையை ரூபாய் 4 லட்சத்திலிருந்து, 5 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கிடவும், சேதமடைந்த குடிசைகளுக்காக ஏற்கெனவே வழங்கப்படும் தொகை ரூபாய் 5 ஆயிரத்தினை, ரூபாய் 8 ஆயிரமாக உயர்த்தி வழங்கிடவும், மழையினால் பாதிக்கப்பட்ட (33 விழுக்காடு மற்றும் அதற்கு மேலாக) நெற்பயிர் உள்ளிட்ட இறவைப் பாசனப் பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.13,500/-லிருந்து, ரூபாய் 17 ஆயிரமாக உயர்த்தி வழங்கிடவும், பல்லாண்டு பயிர்கள் மற்றும் மரங்கள் (Perennial crops and trees) சேதமுற்றிருப்பின் (33 விழுக்காடு மற்றும் அதற்கு மேலாக) இழப்பீடாக ஹெக்டேர் ஒன்றுக்கு ரூபாய் 18 ஆயிரம் ரூபாயிலிருந்து, ரூபாய் 22,500/-ஆக உயர்த்தி வழங்கிடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மழையினால் பாதிக்கப்பட்ட (33 விழுக்காடு மற்றும் அதற்கு மேலாக) மானாவாரிப் பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.7,410/-லிருந்து, ரூ.8,500/-ஆக உயர்த்தி வழங்கிடவும்; எருது, பசு உள்ளிட்ட கால்நடைகளின் உயிரிழப்பு நிவாரணமாக ரூ.30,000/- என்றிருந்ததை, ரூ.37,500/-ஆக உயர்த்தி வழங்கிடவும்; வெள்ளாடு, செம்மறி ஆடு உயிரிழப்பு நிவாரணமாக ரூ.3,000/- என்றிருந்ததை, ரூ.4,000/- உயர்த்தி வழங்கிடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

·சேதமடைந்த படகுகள் மற்றும் வலைகளுக்கு நிவாரண உதவிகளைப் பொறுத்தவரையில், முழுமையாக சேதமடைந்த கட்டுமரங்களுக்கு (மீன்பிடி வலைகள் உட்பட), ரூ.32,000/-லிருந்து, ரூ.50 ஆயிரமாகவும், பகுதியாக சேதமடைந்த கட்டுமரங்களுக்கு ரூபாய் 10 ஆயிரத்திலிருந்து, ரூபாய் 15 ஆயிரமாகவும், முழுவதும் சேதமடைந்த வல்லம் வகை படகுகளுக்கு வழங்கப்படும் அதிகபட்ச மானியத் தொகை ரூபாய் 75 ஆயிரத்திலிருந்து, ரூபாய் ஒரு லட்சமாகவும், முழுவதும் சேதமடைந்த இயந்திரப் படகுகளுக்கு வழங்கப்படும் அதிகபட்ச மானியத் தொகை ரூபாய் 5 லட்சத்திலிருந்து, ரூபாய் 7.50 லட்சமாகவும் உயர்த்தி வழங்கிடவும், சேதமடைந்த வலைகளுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகை ரூபாய் 10 ஆயிரத்திலிருந்து, ரூபாய் 15 ஆயிரமாக உயர்த்தி வழங்கிடவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நிவாரணப் பணிகள் விவரம்: தமிழகத்தில் டிசம்பர் 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் வீசிய மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மாவட்டத்தில் கடுமையான மழைப்பொழிவு ஏற்பட்டது. மேலும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் குறிப்பிட்ட சில பகுதிகளிலும் வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டு, கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டன.

முன்னதாக, மிக்ஜாம் புயலின் தாக்கம் குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கைகளின் அடிப்படையில், தமிழ்நாடு அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்திருந்தது. முதல்வர் தலைமையில் இதுகுறித்து கள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டும், ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டிருந்தன.

மீட்புப் பணிகளை மேற்கொள்வதற்கு முன்னதாகவே திட்டமிடப்பட்டு, தேசிய பேரிடர் மீட்புப் படை, மாநில பேரிடர் மீட்புப் படை மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை ஆகிய துறைகளைச் சார்ந்த மீட்புப் படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர். மீட்புப் பணிகளுக்குத் தேவையான டீசல் மோட்டார் பம்புசெட்டுகளும், படகுகளும், ஜே.சி.பி. இயந்திரங்களும், மரம் அறுக்கும் கருவிகளும் சென்னை மாநகராட்சியின் மண்டல அலுவலகங்களில் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.

இவை புயல் மழையின் தாக்கத்திற்குப் பிறகு உடனடியாக களத்தில் மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டன. மேலும், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளைத் தீவிரப்படுத்துவதற்காக 20 அமைச்சர் பெருமக்களும், 50-க்கும் மேற்பட்ட இந்திய ஆட்சிப் பணி மற்றும் இந்திய காவல் பணி அலுவலர்களும் நியமிக்கப்பட்டு, நிவாரணப் பணிகள் முடுக்கி விடப்பட்டன.

இதுமட்டுமின்றி, 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மின் வாரியப் பணியாளர்களும், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மருத்துவப் பணியாளர்களும், ஆயிரக்கணக்கான தூய்மைப் பணியாளர்களும் இந்த மாபெரும் பணியில் இரவு, பகல் பாராமல் ஈடுபட்டனர். மழையினால் பாதிக்கப்பட்ட நான்கு மாவட்டங்களில், மக்களை மீட்க சுமார் 740 படகுகள் பயன்படுத்தப்பட்டன. இதன்மூலம், 26 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வெள்ளப் பகுதிகளிலிருந்து பாதுகாப்பான பகுதிகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள்.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு உணவு வழங்கும் பணிக்கென தனி அலுவலர்கள் நியமிக்கப்பட்டு, பெரிய அளவில் சமையல் அறைகள் நிறுவப்பட்டு, தரமான உணவு சமைக்கப்பட்டு, சென்னை மாவட்டத்தில் மட்டும் 8-12-2023 வரை, மூன்று வேளை உணவாக, மொத்தம் 47 லட்சம் உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளன. மொத்தமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் இதுவரை 51 லட்சத்திற்கும் மேற்பட்ட உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உணவு, குடிநீர், பால் ஆகிய பொருட்கள் அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மூலம் பெறப்பட்டு, முறையாக வழங்கப்பட்டு வருகின்றன. அவற்றின் விவரம் பின்வருமாறு:

  1. பால் பவுடர் 58,222 கிலோ
  2. குடிநீர் பாட்டில்கள் 9,67,000 எண்ணிக்கை
  3. பிரட் பாக்கெட் 2,65,000 எண்ணிக்கை
  4. பிஸ்கட் பாக்கெட் 10,38,175 எண்ணிக்கை

வெள்ளம் பாதித்த பகுதிகளில் மழைநீர் தற்போது வடிந்துள்ள நிலையில், அந்தப் பகுதிகளில் தற்போது 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்களை ஈடுபடுத்தி, பேரிடர் மீட்புக் குழுவினரின் உதவியுடன் போர்க்கால அடிப்படையில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், மருத்துவ முகாம்களும் தேவையான இடங்களில் நடத்தப்பட்டு வருகின்றன. இவ்வாறு பல்வேறு மீட்பு மற்றும் சீரமைப்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave your comments here...