40 தொகுதிகளில் வென்று நாம் கை காட்டுபவரே பிரதமராக வேண்டும் – முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

அரசியல்

40 தொகுதிகளில் வென்று நாம் கை காட்டுபவரே பிரதமராக வேண்டும் – முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

40 தொகுதிகளில் வென்று நாம் கை காட்டுபவரே பிரதமராக வேண்டும் – முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீட்டை திமுக தலைமை பார்த்துக் கொள்ளும் என்றும், 40 தொகுதிகளில் வென்று நாம் கை காட்டுபவரே பிரதமராக வேண்டும்” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் நடக்க இருக்கிறது. தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்கள் எஞ்சியுள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலை சந்திப்பதற்கான பணிகளில் மும்முரமாக ஈடுபட தொடங்கியுள்ளது. தங்கள் கட்சியை பலப்படுத்துவதோடு கூட்டணியையும் உறுதி செய்து வருகின்றன.

தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகள், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதி என 40 இடங்களிலும் திமுக கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்று திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் கட்சியினருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இதற்கான பணிகளை திமுக தொடங்கி செய்து வருகிறது. அந்த வகையில் திமுக சார்பில், அனைத்து தொகுதிகளிலும் வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு, அவர்களுக்கான பயிற்சிக் கூட்டம் நடந்து முடிந்துள்ளது. மண்டல வாரியாக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு கட்சியினருக்கு அறிவுரை வழங்கினார்.

இந்த நிலையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நவம்பர் 26ம் தேதி நடைபெறும் என்று திமுக பொது செயலாளர் துரைமுருகன் அறிவித்து இருந்தார். அதன்படி திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை தி.நகரில் உள்ள அக்கார்ட் ஓட்டலில் இன்று காலை 10.30 மணியளவில் நடைபெற்றது. கூட்டத்திற்கு திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார்.  கூட்டத்தில், சேலத்தில் வருகிற டிசம்பர் 17ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ள திமுக இளைஞர் அணியின் 2வது மாநில மாநாடு தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.

இந்த மாநாட்டில் லட்சக்கணக்கானோரை பங்கேற்க செய்து இந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில் பிரமாண்டமாக நடத்துவது. மேலும் திமுக வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் (பிஎல்சி) பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

இந்த கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீட்டை திமுக தலைமை பார்த்துக் கொள்ளும். யார் வெற்றி பெறுவார்களோ அவர் தான் வேட்பாளராக இருப்பார்கள். இந்தத் தொகுதிக்கு இவர் தான் வேட்பாளர் என்ற உறுதி எதுவுமில்லை. நாம் கை காட்டுபவரே பிரதமராக வேண்டும். 40 தொகுதிகளில் வென்றால் மட்டுமே அது சாத்தியம். சேலத்தில் அடுத்த மாதம் 17ம் தேதி நடைபெற உள்ள இளைஞரணி மாநாட்டின் ஒருங்கிணைப்பாளராக கே.என்.நேரு நியமனம் செய்யப்பட்டுள்ளார். 5 லட்சம் பேர் கலந்து கொள்ளும் பிரமாண்ட மாநாடாக இருக்க வேண்டும். மகளிர் உரிமைத்தொகை போன்ற திட்டங்கள் பெண்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. இனி எந்த காலத்திலும் மகளிர் வாக்குகள் நமக்குத்தான் என்பதில் எள் முனையளவும் சந்தேகம் வேண்டியதில்லை. தேர்தல் பணிகளை முன்னெடுத்துச் செல்லுங்கள்.இவ்வாறு அவர் பேசினார்.

மாவட்ட செயலாளர் கூட்டத்திற்கு பிறகு திமுக முதன்மை செயலாளர் அமைச்சர் கே.என்.நேரு அளித்த பேட்டி: திமுக தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் இரண்டு முக்கிய முன்னெடுப்புகளுக்காக இந்த மாவட்ட செயலாளர் கூட்டத்தை கூட்டியிருந்தார். நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளை 6 மாதங்களுக்கு முன்பே திமுக சார்பில் தொடங்கி விட்டோம் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும்.

தமிழ்நாடு முழுவதும் திமுக சார்பில் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு மண்டல வாரியாக பயிற்சி பாசறை கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. 5 மண்டலங்களில் மாநாடுகளை போல கூட்டத்தை நடத்தி முடித்து இருக்கிறோம். வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள், உறுப்பினர்களின் அடுத்தக்கட்ட பணிகள் குறித்து மாவட்ட செயலாளர்களுக்கு சொல்லப்பட்டது. தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்க கூடிய அளவில் தயாராக இருக்க வேண்டும் என்று தலைவர் மு.க.ஸ்டாலின் எங்களுக்கு கட்டளையிட்டுள்ளார்.

எங்களது அடுத்தக்கட்ட முக்கியமான பணி என்பது, சேலத்தில் நடைபெறக்கூடிய இளைஞர் அணியின் மாநில மாநாட்டை சிறப்போடும், எழுச்சியோடும் நடத்தி காட்ட வேண்டும் என்பதாகும். மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை தலைவர் மு.க.ஸ்டாலின் கூட்டியதன் முக்கியமான நோக்கமே இது தான். திமுக மாநாடு நடக்கிறது என்றால், அதன் எழுச்சி பல ஆண்டுகளுக்கு இருக்கிறது. அதுவும் இது இளைஞர் அணி மாநாடு ஆகும். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இளைஞர் அணி செயலாளராக பொறுப்பேற்று கொண்ட போதில் இருந்து, ஏராளமான இளைஞர் திமுகவை நோக்கி ஈர்க்கப்பட்டு வருவதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். அவர் செல்லும் ஊர்களில் எல்லாம் புதிய, புதிய இளைஞர்கள் திமுகவை நோக்கி வருகிறார்கள். திமுக அரசும் இளைஞர்களுக்கு ஏராளமான திட்ட்ஙகளை தீட்டி வருகிறது. இதுவும் இளைஞர்களை திமுக நோக்கி வரவைத்து இருக்கிறது.

இந்த இளைஞர் பட்டாளத்தை கட்டுக்கோப்போடுடனும், திராவிட கொள்கை கொண்டவர்களாக ஆக்குவதற்காகவும் தான் இளைஞர் அணி மாநாட்டை நடத்த வேண்டும் என்று, தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இளைஞர் அணி செயலாளராக இருந்த போது 2007ம் ஆண்டு திமுக இளைஞர் அணியின் முதல் மாநாடு திருநெல்வேலியில் நடந்தது. இளைஞர் அணியின் இரண்டாவது மாநாடு வருகிற டிசம்பர் மாதம் 17ம் தேதி சேலத்தில் நடைபெற உள்ளது. இது ஒரு நாள் மாநாடாக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. மாநாடு இளைஞர் அணி செயலாளர் உதயநிதி தலைமையில் நடக்கிறது. மாநாட்டு ஒருங்கிணைப்பாளராக நான் பல்வேறு பணிகளை ஆற்றி வருகிறேன். காலை 9 மணியளவில் திமுகவின் இரு வண்ணக்கொடியை திமுக துணை பொது செயலாளர் கனிமொழி எம்பி ஏற்றி வைக்கிறார். மாணவர் அணி செயலாளர் எழிலரசன் எம்எல்ஏ மாநாட்டை தொடங்கி வைக்க உள்ளார்.

முக்கிய பேச்சாளர்கள் பல்வேறு தலைப்பில் உரையாற்றுகிறார்கள். தலைவர் மு.க.ஸ்டாலின் மாலை 6 மணிக்கு சிறப்புரையாற்றுகிறார். மாநாடு திமுக வரலாற்றில் மட்டுமல்ல, தமிழக வரலாற்றிலும், இந்திய வரலாற்றிலும் முக்கிய மாநாடாக அமைய போகிறது. அடுத்து நடக்க இருக்கின்ற நாடாளுமன்ற தேர்தல் வெற்றிக்கு சேலம் மாநாடு அடித்தளம் அமைக்கும் மாநாடாக அமைய போகிறது. கிட்டத்தட்ட 5 லட்சம் இளைஞர் அணியினர் வருவார்கள் என்று அதற்கான ஏற்பாடுகளை செய்து இருக்கிறோம். இவர்களுக்கு எழுச்சியூட்டும் மாநாடாக இது அமைய போகிறது. அனைவரையும் மாநாட்டிற்கு அழைப்பதை போல உங்களையும் அழைக்கிறேன். தேர்தலுக்கு இந்த மாநாடு முன்னோட்டமாக இருக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

Leave your comments here...