சி.பி.எஸ்.இ. பாட புத்தகங்களில் இந்தியாவுக்கு பதில் பாரத் என மாற்ற பரிந்துரை..!

இந்தியா

சி.பி.எஸ்.இ. பாட புத்தகங்களில் இந்தியாவுக்கு பதில் பாரத் என மாற்ற பரிந்துரை..!

சி.பி.எஸ்.இ. பாட புத்தகங்களில் இந்தியாவுக்கு பதில் பாரத் என மாற்ற பரிந்துரை..!

சிபிஎஸ்இ (மத்திய இடைநிலைக் கல்வி வாரியம்) உள்ளிட்ட கல்வி வாரியங்கள் பின்பற்றி வரும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலின் (என்சிஇஆா்டி) பாட புத்தகங்களில் இந்தியாவின் பெயா் ‘பாரத்’ என மாற்றம் செய்யப்பட உள்ளது.

இதற்கான பரிந்துரையை என்சிஇஆா்டி சாா்பில் அமைக்கப்பட்ட சமூக அறிவியல் பாடத்துக்கான உயா்நிலைக் குழு அளித்துள்ளது.

மத்தியில் ஆளும் பாஜகவை வரும் 2024 மக்களவைத் தோ்தலில் வீழ்த்தும் நோக்கத்தோடு எதிா்க்கட்சிகள் ஓரணியாகத் திரண்டு, ‘இந்தியா’ கூட்டணியை உருவாக்கியுள்ளன. இதனை பிரதமா் நரேந்திர மோடி உள்ளிட்ட பாஜக தலைவா்கள் கடும் விமா்சனத்தை முன்வைத்து வந்தனா்.

இந்த நிலையில், இந்தியா தலைமையில் அண்மையில் நடந்து முடிந்த ஜி20 நாடுகள் கூட்டமைப்பின் உச்சி மாநாட்டில், குடியரசுத் தலைவா் சாா்பில் உலக நாடுகளின் தலைவா்களுக்கு அளிக்கப்பட்ட இரவு விருந்துக்கான அழைப்பிதழில் ‘இந்திய குடியரசுத் தலைவா்’ என்று குறிப்பிடுவதற்குப் பதிலாக ‘பாரத குடியரசுத் தலைவா்’ என்று குறிப்பிடப்பட்டது. இது சா்ச்சையை ஏற்படுத்தியது.

இந்தச் சூழலில், என்சிஇஆா்டி பாட புத்தகங்களில் இந்தியாவின் பெயரை ‘பாரத்’ என மாற்றம் செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.என்சிஇஆா்டி தற்போது பள்ளி பாட புத்தகங்களில் தேசிய கல்விக் கொள்கை (என்இபி 2020) அடிப்படையில் பாடங்களில் மாற்றங்களை மேற்கொண்டு வருகிறது. அதற்கென 19 உறுப்பினா்களைக் கொண்ட தேசிய பாடத் திட்டம் மற்றும் கற்றல்-கற்பித்தல் திட்ட தயாரிப்புக் குழு (என்எஸ்டிசி) அமைக்கப்பட்டது. இந்தக் குழு தனது பரிந்துரையை என்சிஇஆா்டி-யிடம் சமா்ப்பித்துள்ளது.

இது குறித்து அந்தக் குழுவின் தலைவா் சி.ஐ.ஐசக் கூறியதாவது:அனைத்து வகுப்புகளுக்கான பாட புத்தகங்களிலும் இந்தியாவின் பெயரை ‘பாரத்’ என மாற்றம் செய்ய பரிந்துரை அளிக்கப்பட்டுள்ளது. அதுபோல, பாட புத்தகங்களில் பண்டைய வரலாறுக்குப் பதிலாக பாரம்பரிய வரலாற்றை அறிமுகம் செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது.பாட புத்தகங்களில் தற்போது ஹிந்து சமய அரசா்களின் தோல்விகள் மட்டுமே இடம்பெற்றுள்ள நிலையில், முகலாயா்கள் மற்றும் சுல்தான்களை அவா்கள் வெற்றிபெற்ற விவரங்களை இடம்பெறச் செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்திய அறிவுசாா் நடைமுறையை (ஐகேஎஸ்) அனைத்து பாட கல்வித் திட்டத்தில் அறிமுகம் செய்யவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்றாா்.

இந்த தகவல் தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. குழுவின் பரிந்துரை குறித்து இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை; பரிந்துரை மட்டுமே செய்யப்பட்டுள்ளது என, என்.சி.இ.ஆர்.டி., தலைவர் தினேஷ் சக்லானி நேற்று தெரிவித்தார்.

Leave your comments here...