புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை – போலீஸ் நிலையத்தை பூட்டிவிட்டு சென்ற பெண்..!

இந்தியாசமூக நலன்

புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை – போலீஸ் நிலையத்தை பூட்டிவிட்டு சென்ற பெண்..!

புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை – போலீஸ் நிலையத்தை பூட்டிவிட்டு சென்ற பெண்..!

ஆந்திர மாநிலம் : ஹவுஸ் ஓனர் மீது புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த பெண் போலீஸ் நிலையத்தை பூட்டிவிட்டு சென்றார்.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் என்ஏடி பைவந்தேனா அருகே பாஜி சந்திப்பு பகுதியை சேர்ந்தவர் பார்வதி(42). கணவரை பிரிந்து கிருஷ்ணராயபுரம் ஜிவிஎம்சி வார்டு 95ல் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் மகன், மகளுடன் 6 ஆண்டுகளாக வாடகைக்கு வசித்து வருகிறார். வீடு, வீடாக புடவைகளை விற்று குடும்பம் நடத்தி வருகிறார்.

இந்நிலையில் வீட்டின் உரிமையாளர் பீர்லு என்பவர் சமீபத்தில் தனது வீட்டை விற்பனை செய்வதாகவும், எனவே உடனடியாக வீட்டை காலி செய்யும்படியும் பார்வதியிடம் கூறியுள்ளார். அதற்கு பார்வதி, தனது அட்வான்ஸ் பணத்தை திருப்பிக் கொடுத்தால் காலி செய்வதாக கூறியுள்ளார்.

ஆனால் அட்வான்ஸ் பணத்தை கொடுக்காத பீர்லு தனது ஆதரவாளர்களுடன் வந்து கடந்த 13ம் தேதி பார்வதியின் குழந்தைகளை வலுக்கட்டாயமாக வெளியேற்றி வீட்டு சாமான்களை வெளியே வீசிவிட்டு பூட்டியதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக பார்வதி பெண்டுருத்தி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் பீர்லு மற்றும் உடன் வந்த 5 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிந்தனர். வீடு பூட்டப்பட்டிருந்ததால், பார்வதி தனது குழந்தைகளுடன் அதே வீட்டு வராண்டாவில் தங்கியுள்ளார். இதற்கிடையில் பலமுறை காவல்நிலையத்திற்கு சென்று, நியாயம் கேட்டார். ஆனாலும் போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.

இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பெண்டுருத்தி போலீஸ் நிலையத்திற்கு வந்த பார்வதி, தனது புகாரின் மீது எடுத்த நடவடிக்கை என்ன என்று கேட்டார். அதற்கு போலீசார் எவ்வித பதிலும் தெரிவிக்காமல் இருந்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த பார்வதி, போலீசாரை உள்ளே வைத்து திடீரென போலீஸ் நிலைய வாயில் கேட்டை பூட்டினார். இதைக்கண்ட போலீசார் கூச்சலிட்டனர்.

அதன்பின்னர் அங்கு வந்த உயர் போலீஸ் அதிகாரிகள் பார்வதியிடம் சமரசம் செய்து போலீஸ் நிலையத்தை திறந்தனர். பின்னர் அவரை அந்த குடியிருப்புக்கு அழைத்துச்சென்று வீட்டு உரிமையாளரிடம் பேசினர். அப்போது பார்வதிக்கும், வீட்டு உரிமையாளருக்கும் போலீசார் முன்னிலையில் கடும் வாக்குவாதம் நடந்தது. இதைக்கண்ட இன்ஸ்பெக்டர் சீனிவாச ராவ் ஒரு கட்டத்தில் மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை சக போலீசார் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். உயர் ரத்த அழுத்தம் காரணமாக அவர் மயங்கி விழுந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

இதன் பின்னர் சில மணிநேரம் கழித்து இன்ஸ்பெக்டர் சகஜ நிலைக்கு திரும்பி போலீஸ் நிலையத்திற்கு சென்றார். பின்னர் அட்வான்ஸ் தொகையை விரைந்து தருவதாக வீட்டு உரிமையாளரிடமும், உடனடியாக காலி செய்வதாக பார்வதியிடமும் போலீசார் எழுதி பெற்றுக்கொண்டனர். இந்த சம்பவங்களால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Leave your comments here...