பாஜக உடன் கூட்டணி முறிவு என்ற நிலைப்பாட்டில் நாங்கள் உறுதியாக உள்ளோம் – எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்..!

அரசியல்

பாஜக உடன் கூட்டணி முறிவு என்ற நிலைப்பாட்டில் நாங்கள் உறுதியாக உள்ளோம் – எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்..!

பாஜக உடன் கூட்டணி முறிவு என்ற நிலைப்பாட்டில் நாங்கள் உறுதியாக உள்ளோம் – எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்..!

பாரதிய ஜனதா கட்சியுடனான கூட்டணியை முறித்துக் கொள்வதாக கடந்த 25-ந்தேதி அ.தி.மு.க. அதிரடியாக அறிவித்தது. இந்த கூட்டணி முறிவு நாடகம் என்றும், மீண்டும் பா.ஜனதாவுடன் அ.தி.மு.க. கூட்டணி சேர்ந்து விடும் என்றும் தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் தெரிவித்தன.

இதற்கு அ.தி.மு.க. சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. அதில் பாரதிய ஜனதா கட்சியுடன் இனி எப்போதும் கூட்டணி இல்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணி நீடிப்பதாகவும், சமரச பேச்சு நடந்து வருவதாகவும் தகவல்கள் வெளியானது. இந்த நிலையில் கோவைக்கு வந்திருந்த மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனை, அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் சந்தித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.

இதன் மூலம் பாரதிய ஜனதா கட்சியுடன் அ.தி.மு.க. மீண்டும் கூட்டு சேர திட்டமிட்டிருப்பதாக மீண்டும் தகவல்கள் பரவியது. இந்த நிலையில் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் எடப்பாடி பழனிசாமி இன்று சேலம் எடப்பாடியில் விரிவாக பேட்டி அளித்தார். அப்போது அவர் பாரதிய ஜனதா கட்சியுடனான கூட்டணி முறிவில் உறுதியாக இருப்பதாக விளக்கம் அளித்தார்.

சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் புதிய திட்டங்களை எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

இதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:- பாஜக., உடன் இனி கூட்டணி இல்லை என்று தெளிவாக கூறிவிட்டேன். பாஜக., தலைமையிலான தே.ஜ., கூட்டணியில் இருந்து விலகியது, 2 கோடி தொண்டர்களின் உணர்வின் முடிவாகும். பா.ஜக., மாநில துணை தலைவர் வி.பி துரைசாமி தெரிவிப்பது அவரது சொந்த கருத்தாகும். அதிமுக கட்சியில் புதிய கூட்டணி கட்சிகள் இணைவதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். பாஜக., கூட்டணியிலிருந்து விலகல் முடிவில் மாற்றமில்லை. அதிமுகவின் வாக்கு வங்கி குறையவில்லை. பார்லி., லோக்சபா தேர்தலில் 40 தொகுதிகளிலும் அதிமுக வெல்லும்.

தமிழகத்தில் மக்கள் விரோத ஆட்சி நடக்கிறது. மத்திய அமைச்சர்களை திமுக அமைச்சர்களும் அவ்வபோது சந்தித்து வருகின்றனர். அவர்களை கூட்டணி என்று கூற முடியுமா?. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை, தொகுதி மக்களின் கோரிக்கை தொடர்பாக, அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் சந்தித்துள்ளனர். தங்களின் கடமையை அவர்கள் செய்துள்ளனர்.

மேட்டூர் அணையின் நீர் இருப்பை கணிக்காமல் முன்கூட்டியே முதல்வர் ஸ்டாலின் திறந்து விட்டார். முதல்வரின் தவறான நடவடிக்கையால் 5 லட்சம் ஏக்கர் சாகுபடி பரப்பில் 3 லட்சம் ஏக்கர் பயிர்கள் கருகிவிட்டது.”இண்டியா” கூட்டணியில் இருக்கின்றனர். ஆனால் கர்நாடக முதல்வரை சந்தித்து பேசுவதில்லை. திமுக அரசு ஆட்சி அதிகாரத்தை மட்டுமே பார்க்கிறது.

தமிழக விவசாயிகள் நலனை பற்றி கண்டுகொள்வதில்லை.மத்தியில் ஆட்சி அதிகாரம் வேண்டும். தாம் கொள்ளையடித்த பணத்தை பாதுகாக்க திமுக அரசு செயல்படுகிறது. காவிரியில் தண்ணீர் இன்றி சாகுபடி செய்த பயிர்கள் கருகுவதால் டெல்டா விவசாயிகளின் வடிக்கும் கண்ணீரை திமுக அரசு கண்டுகொள்வதில்லை.

அடுத்த சட்டமன்ற தேர்தலில் அண்ணாமலையை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று பா.ஜனதா அழுத்தம் கொடுத்ததாக கூறுகிறீர்கள். அது தவறான செய்தி. அப்படி ஒன்றும் நடக்கவில்லை. இப்போது நான் அதை தெளிவு படுத்துகிறேன். பிரதமர் மோடி, மத்திய மந்திரி அமித்ஷா, பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா யாரும் எங்களுக்கு எந்த அழுத்தமும் கொடுக்கவில்லை. இங்கே நடந்த நிகழ்வுகள் எங்கள் தொண்டர்களின் மனதை காயப்படுத்தி விட்டது.ஒரு கட்சி தேர்தலில் வெற்றி பெற வேண்டுமென்றால் தொண்டர்கள் உழைக்க வேண்டும். எனவே எங்கள் தொண்டர்களின் உணர்வுகளை மதிக்கின்ற வகையில் நாங்கள் நடவடிக்கை எடுத்திருக்கிறோம்.இப்போது தெளிவுபடுத்துகிறேன். அவர்கள் எந்த சீட்டும் பேசவில்லை. 20 சீட், 15 சீட் என்று எந்த கோரிக்கையும் வைக்கவில்லை. அதைப் பற்றி பேசவும் இல்லை.இங்குள்ள பா.ஜனதா மாநில தலைவரை மாற்ற வேண்டும் என்று நாங்கள் கோரிக்கை வைத்ததாக கூறப்பட்ட அந்த தகவலும் தவறானது. நாங்கள் எந்த கோரிக்கையும் வைக்கவில்லை.

இவ்வாறு பழனிசாமி கூறினார்.

Leave your comments here...