மணிப்பூர் பதற்றம் நிறைந்த மாநிலமாக அறிவிப்பு – மத்திய அரசு நடவடிக்கை

இந்தியா

மணிப்பூர் பதற்றம் நிறைந்த மாநிலமாக அறிவிப்பு – மத்திய அரசு நடவடிக்கை

மணிப்பூர் பதற்றம் நிறைந்த மாநிலமாக அறிவிப்பு – மத்திய அரசு நடவடிக்கை

<hr>மாணவன், மாணவி கொலை காரணமாக மணிப்பூரில் தொடர் போராட்டம் நடந்து வருகிறது. அங்கு சில மாதங்களாக வன்முறை கட்டுக்கடங்காமல் பரவி வருவதால் மத்திய அரசு இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது.

மணிப்பூரில் மெய்தி-குகி இன மக்களுக்கு இடையே 4 மாதங்களுக்கும் மேலாக கலவரம் நடந்து வருகிறது. இதில் 170க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஏராளமானோர் அண்டை மாநிலங்களில் தஞ்சம் புகுந்தனர். கலவரத்தை ஒடுக்குவதற்காக மாநில போலீசாருடன் ஆயிரக்கணக்கான மத்திய பாதுகாப்பு படை வீரர்களும் குவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் பதற்றம் நிறைந்த பகுதிகளில் தொடர்ந்து ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பிஜம் ஹேம்ஜித் (20) என்ற மாணவரும், ஹிஜம் லின்தோயிங்காம்பி (17) என்ற மாணவியும் கடந்த ஜூலை 6ம் தேதி திடீரென மாயமானார்கள்.

அவர்களது செல்போன்களை தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தன. அவர்கள் கடைசியாக சுராசந்த்பூர் மாவட்டத்தின் லாம்டன் பகுதியில் இருந்தது கண்டறியப்பட்டது. அங்கிருந்து எங்கு சென்றனர் என தெரியாமல் இருந்த நிலையில், இருவரும் கடத்தி கொடூரமாக கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. ஆயுதம் ஏந்திய கும்பலிடம் பிணைக்கைதிகளாக இருக்கும் படமும், பின்னர் சடலங்களாக கிடக்கும் இருவரது படமும் சமூக ஊடகங்களில் வெளியானது.

இதனால், மாநிலத்தில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டது. இதனிடையே, ‘மாணவன்-மாணவி கொலை செய்யப்பட்ட வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கொலையாளிகளை அடையாளம் காண ஒன்றிய விசாரணை அமைப்புகளுடன் இணைந்து மாநில போலீசாரும் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

அதே நேரத்தில், இந்த கொடூர சம்பவத்தில் தொடர்புடைய அனைவரின் மீதும் விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களுக்கு கடுமையான தண்டனை பெற்றுத்தர மாநில அரசு உறுதிபூண்டுள்ளது. எனவே, பொதுமக்கள் அதிகபட்ச கட்டுப்பாட்டை கடைப்பிடிக்க வேண்டும். அதிகாரிகளின் விசாரணைக்கு எவ்வித இடையூறும் ஏற்படுத்த வேண்டாம்’ என்று மாநில முதல்வர் பிரேன் சிங்கின் செயலகம் தரப்பில் கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த சம்பவத்தை கண்டித்து, கிழக்கு இம்பாலில் நேற்று நூற்றுக்கணக்கான மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள், முதல்வர் அலுவலகம் நோக்கி செல்ல முயன்றபோது போலீசாருடன் மோதல் ஏற்பட்டது. கலைந்து செல்லும்படி போலீசார் கூறினர். மறுத்ததால் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் போராட்டக்காரர்களை போலீசார் கலைத்தனர். இந்த சம்பவத்தில் 45 பேர் காயமடைந்தனர். மணிப்பூரின் தலைநகர் இம்பாலில் நேற்றிரவு முதல் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மாநிலத்தில் நாளை வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய சூழலில் மாணவன், மாணவி கொல்லப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு இன்றும் மாணவ-மாணவிகள் இம்பாலில் பல்வேறு பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, மாணவர்களுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது பாதுகாப்பு படையினர் தடியடி நடத்தி போராட்டக்காரர்களை கலைத்தனர். இந்த சம்பவத்தில் 25 முதல் 30 பேர் காயமடைந்தனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த போராட்டத்தை தொடர்ந்து மொபைல் இணைய சேவைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மணிப்பூரில் 19 காவல்நிலைய எல்லைகளுக்குட்பட்ட பகுதிகள் தவிர மற்ற பகுதிகள் பதற்றமானவை என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. வரும் 1ம் தேதி முதல் 6 மாதங்களுக்கு அறிவிப்பு அமலில் இருக்கும் என அறிவித்துள்ளது. மணிப்பூரில் கடந்த சில மாதங்களாக வன்முறை கட்டுக்கடங்காமல் பரவி வருவதால் மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

Leave your comments here...