சூதாட்ட கும்பலின் நிர்வாகியின் திருமண விழா… கைமாறிய 200 கோடி ஹவாலா பணம் -அமலாக்கத்துறையிடம் சிக்கிய பாலிவுட் பிரபலங்கள்..!

இந்தியா

சூதாட்ட கும்பலின் நிர்வாகியின் திருமண விழா… கைமாறிய 200 கோடி ஹவாலா பணம் -அமலாக்கத்துறையிடம் சிக்கிய பாலிவுட் பிரபலங்கள்..!

சூதாட்ட கும்பலின் நிர்வாகியின் திருமண விழா… கைமாறிய 200 கோடி ஹவாலா பணம் -அமலாக்கத்துறையிடம் சிக்கிய பாலிவுட் பிரபலங்கள்..!

துபாயில் நடந்த சூதாட்ட கும்பலின் நிர்வாகியின் திருமண விழாவில் பங்கேற்ற பாலிவுட் பிரபலங்களுக்கு ₹200 கோடி ‘ஹவாலா’ பணம் கைமாறியது குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியான நிலையில், ₹417 கோடி சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது.

சட்டீஸ்கர் மாநிலம் பிலாயில் வசிக்கும் சவுரப் சந்திரகர், ரவி உப்பல் ஆகியோர் ‘மகாதேவ் புக் ஆப்’ என்ற சூதாட்ட நிறுவனத்தின் விளம்பரதாரர்களாக செயல்பட்டு வந்தனர். இந்த நிறுவனம் துபாயிலும் இயங்கி வருகிறது. இந்த ஆன்லைன் செயலியானது ஒரு குடை போன்று செயல்படும். சிண்டிகேட் முறையில் புதிய பயனர்களைச் சேர்க்கவும், அவர்களுக்கான புதிய ஐடிகளையும் உருவாக்கும். ‘பினாமி’ பெயரில் வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டு, ஆன்லைன் மூலம் சூதாட்டம் நடத்தி பணமோசடி தளமாக மகாதேவ் புக் ஆப் நிறுவனம் செயல்பட்டு வந்துள்ளது.

இந்நிறுவனத்தின் விளம்பரதாரரான சவுரப் சந்திரகருக்கு கடந்த பிப்ரவரி மாதம் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் திருமணம் நடந்தது. ஆடம்பரமாக நடந்த இந்த திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக சட்டீஸ்கர் உள்ளிட்ட மாநில அரசியல்வாதிகள், போலீஸ் அதிகாரிகள், பாலிவுட் நடிகர்கள், பாடகர்கள் உள்ளிட்ட நட்சத்திரங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அவர்களும் திருமண விழாவில் கலந்து கொண்டனர். பாலிவுட் பிரபலங்கள் விழாவில் கலந்து கொண்டதால், அவர்களுக்கு ரூ. 200 கோடிக்கு மேல் ஹவாலா மூலம் பணம் கொடுக்கப்பட்டது.

இந்த விவகாரம் அமலாக்கத்துறைக்கு தெரியவந்தது. அதையடுத்து கொல்கத்தா, போபால், மும்பை போன்ற நகரங்களில் ஆன்லைன் செயலியுடன் தொடர்புடைய பணமோசடி நெட்வொர்க்குகளை கண்டுபிடித்து, அவர்கள் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை ரெய்டு நடத்தியது. சூதாட்ட கும்பலின் தலைமை இணைப்பாளர் உட்பட நான்கு பேரை அமலாக்கத்துறை கைது செய்தது.

இதுகுறித்து அமலாக்கத்துறை வட்டாரங்கள் கூறுகையில், ‘கடந்த பிப்ரவரியில் சவுரப் சந்திரகருக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஆடம்பர திருமணம் நடந்தது. அந்த திருமண விழாவில் அழைக்கப்பட்ட பிரபலங்களுக்கு நாக்பூரிலிருந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு சிறப்பு விமானங்கள் வாடகைக்கு எடுக்கப்பட்டன.

மும்பையில் இருந்து பாலிவுட் நட்சத்திரங்களும், நடனக் கலைஞர்களும் வரவழைக்கப்பட்டனர். விழா முடிந்ததும் அவர்களுக்கான சம்பள தொகையை ‘ஹவாலா’ முறையில் மகாதேவ் புக் ஆப்ஸ் மூலம் பணத்தை கொடுத்துள்ளனர். ஒரு மேலாண்மை நிறுவனத்தின் மூலமாக மட்டும் ₹112 கோடி ‘ஹவாலா’ பணம் வழங்கப்பட்டது. மொத்தம் ரூ.200 கோடி வரை சம்பளமாக கொடுத்துள்ளனர். ‘ஹவாலா’ ஆபரேட்டர்கள் மீது எடுக்கப்பட்ட தொடர் நடவடிக்கை மற்றும் சோதனையில் ₹417 கோடி ரொக்கம், விலை உயர்ந்த பொருட்கள், சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டு முடக்கப்பட்டன. நாடு முழுவதும் 39 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில், சுமார் 20,000 கோடி ரூபாய் அளவிற்கு, இந்த நிறுவனம் சூதாட்ட மோசடியில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது.

இந்த திருமண நிகழ்ச்சியில் பாலிவுட் பாடகர்கள், நடிகர்கள், நடனக் கலைஞர்கள் என 14 பேரின் பட்டியல் வெளியாகி உள்ளது. குறிப்பாக பாடகர்கள் நேஹா கக்கர், சுக்விந்தர் சிங், நடிகர்கள் பார்தி சிங், பாக்ய, அதிஃப் அஸ்லம், ரஹத் ஃபதே அலி கான், அலி அஸ்கர், விஷால் தத்லானி, நேஹா கக்கர், எல்லி அவ்ராம், சன்னி லியோன், நுஸ்ரத் பருச்சா ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. ஹவாலா முறையில் பாலிவுட் பிரபலங்களுக்கு பல கோடி ரூபாய் கைமாறியது குறித்தும், அவர்களிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது. அவர்களது வங்கிக் கணக்குகளும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. சட்டீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் சிறப்பு நீதிமன்றம், இவ்வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகளுக்கு எதிராக ரெட்கார்னர் நோட்டீஸ்களை வழங்கியுள்ளது. இது தொடர்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது’ என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

Leave your comments here...