முதல்வரின் காவல் பதக்கம் பெறும் 6 அதிகாரிகள் – தமிழக அரசு அறிவிப்பு

தமிழகம்

முதல்வரின் காவல் பதக்கம் பெறும் 6 அதிகாரிகள் – தமிழக அரசு அறிவிப்பு

முதல்வரின் காவல் பதக்கம் பெறும் 6 அதிகாரிகள் – தமிழக அரசு அறிவிப்பு

முதல்வரின் காவல் பதக்கம் சென்னை வடக்கு கூடுதல் ஆணையர் அஸ்ரா கார்க் உள்பட 6 காவல்துறை அதிகாரிகளுக்கு வழங்கப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடந்த ஆண்டு மே மாதம் 9ம் தேதி சட்டப் பேரவையில் உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை மானியக் கோரிக்கையின் போது சமூகத்தில் போதைப் பொருளை ஒழிப்பதற்காகக் கடுமையாகவும், உண்மையாகவும் உழைக்கும் அதிகாரிகள், காவலர்களை ஊக்குவிப்பதற்கென மாண்புமிகு முதல்வர் பதக்கம் புதிதாக வழங்கப்படும் என அறிவித்தார்.

அதனைத் தொடர்ந்து காவல்துறை தலைமை இயக்குநரின் பரிந்துரையின் பெயரில் காவல் அதிகாரிகளுக்கு மாண்புமிகு முதலமைச்சரின் பதக்கம் வழங்கப்படுகிறது. அந்த வகையில், இந்த ஆண்டுக்கான மாண்புமிகு முதல்வர் பதக்கம் குறித்த அறிவிப்பு சர்வதேச போதை ஒழிப்பு மற்றும் சட்ட விரோத கடத்தல் தடுப்பு தினத்தையொட்டி கடந்த ஜூன் 26ம் தேதி காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு வழங்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது.

அதன்படி, கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெ. பத்ரி நாராயணனுக்கும், தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்கரே பிரவின் உமேஷுக்கும், சேலம் உட்கோட்ட இருப்புப் பாதை காவல் துணை கண்காணிப்பாளர் மா. குணசேகரனுக்கும், நாமக்கல் மாவட்ட காவல் உதவி ஆய்வாளர் சு. முருகனுக்கும், நாமக்கல் மாவட்டத்தில் முதல் நிலை காவலராகப் பணியாற்றும் இரா. குமாருக்கும் மாண்புமிகு முதலமைச்சரின் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டு இருந்தன.

மேலும் போதைப் பொருள் உற்பத்தி மற்றும் சட்ட விரோதக் கடத்தலை ஒழிப்பதில் சிறப்பாக செயல்பட்ட முன்னாள் மதுரை தென் மண்டலக் காவல்துறைத் தலைவரும், தற்போது சென்னை வடக்கு கூடுதல் ஆணையராகப் பணியாற்றி வரும் அஸ்ரா கர்க் பணியை அங்கீகரித்து ரொக்கப் பரிசு இல்லாமல் சிறப்பு பதக்கம் வழங்கப்படுகிறது. இந்நிலையில், இந்த விருது மற்றும் பதக்கங்களை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நாளை மறுநாள் நடைபெற உள்ள சுதந்திர தின விழாவில் காவலர்களுக்கு வழங்க உள்ளார்.

Leave your comments here...