சிறுமியை மாடு முட்டிய சம்பவம் : பொது இடங்களில் மாடுகள் சுற்றி திரிந்தால் உரிமையாளருக்கு ரூ.2000 அபராதம் – சென்னை மாநகராட்சி ஆணையர்எச்சரிக்கை!

தமிழகம்

சிறுமியை மாடு முட்டிய சம்பவம் : பொது இடங்களில் மாடுகள் சுற்றி திரிந்தால் உரிமையாளருக்கு ரூ.2000 அபராதம் – சென்னை மாநகராட்சி ஆணையர்எச்சரிக்கை!

சிறுமியை மாடு முட்டிய சம்பவம் : பொது இடங்களில் மாடுகள் சுற்றி திரிந்தால் உரிமையாளருக்கு ரூ.2000 அபராதம் – சென்னை மாநகராட்சி ஆணையர்எச்சரிக்கை!

சென்னையில் பொதுஇடங்களில் மாடுகள் சுற்றி திரிந்தால் ரூ.2,000 அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை சூளைமேட்டை சேர்ந்தவர் ஹர்சின் பானு. இவரது மூத்த மகள் ஆயிஷா(9) எம்.எம்.டி.ஏ காலனியில் உள்ள பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வருகிறார். வழக்கம் போல பள்ளியை விட்டு தாய் ஹர்சின் பானு அவரது இரு மகள்களையும் வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது எம்.எம்.டி.ஏ காலனி ஆர் பிளாக் இளங்கோ தெரு வழியாக நடந்து சென்ற போது சிறுமி ஆயிஷாவை மாடு கொம்பால் குத்தி தூக்கி வீசியது.

பின்னர் கீழே விழுந்த சிறுமியை மாடு விடாமல் குத்திய நிலையில் அருகில் இருந்தவர்கள் கூச்சலிட்டு கற்களை மாடு மீது வீசி சிறுமியை காப்பாற்றினர். தற்போது சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மாட்டின் உரிமையாளர் விவேக் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.இந்தக் காட்சிகள் அனைத்தும் காண்போரை பதற வைக்கிறது. மாடு தானே என்று நாம் எல்லோரும் கடந்து செல்லும் நிலையில் இந்தச் சம்பவம் மாட்டைக் கண்டாலே அஞ்ச வைப்பதுபோல் அமைந்துவிட்டதாக சமூக வலைதளங்களில் கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் அவர் கூறியதாவது:

“நகர்ப்புற வாழ்விடப் பகுதிகளில் மாடுகள் வளர்க்க அனுமதியில்லை. ஆனால் அது எங்களின் வாழ்வாதாரம் என்று கூறி சிலர் மாடு வளர்க்கின்றனர். அவ்வாறு நகர்ப்புறங்களில் மாடுகளை வளர்க்க வேண்டும் என்றால் அதற்கு அவர்களுக்கு மாடு வளர்க்க 36 சதுர அடி கார்பெட் ஏரியா இருக்க வேண்டும். அதற்குள் தான் அவர்கள் மாட்டை கட்டி வளர்க்க வேண்டும். மாடுகளை சாலைகளில் திரிய விடக் கூடாது. மீறினால் அவற்றை மாநகராட்சி ஊழியர்கள் கைப்பற்றுவார்கள். இதுதான் இப்போதைக்கு அமலில் இருக்கும் சட்டமாக உள்ளது.

இந்தச் சட்டத்தின்படி மாடுகளை நாங்கள் கைப்பற்றி வந்தாலும் ஓரிரு நாட்களில் ரூ.2000 அபராதம் செலுத்திவிட்டு மாட்டை அழைத்துச் சென்றுவிடுகின்றனர். எனவே நகர்ப்புறங்களில் மாடுகளை வளர்ப்பதைத் தடுப்பதில் கடுமையான சட்டங்கள் தேவை. சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டால் தான் இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க உரிய நடவடிக்கைகளை எடுக்க முடியும்.

இந்த சம்பவத்தைப் பொருத்தவரை சிறுமியை முட்டித்தள்ளிய மாட்டைக் கைப்பற்றியுள்ளோம். மாடு கண்காணிப்பில் இருக்கிறது. ஒருவேளை அதற்கு வெறிநோய் ஏதேனும் ஏற்பட்டிருக்கிறதா என்று கண்காணித்து வருகிறோம். மாட்டின் உரிமையாளரின் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மாடு வளர்ப்போர் நலச் சங்கம் மாட்டு உரிமையாளருக்கு ஆதரவாக வந்தாலும்கூட இந்தச் சம்பவத்தில் சட்டப்படி அனைத்து நடவடிக்கைகளும் வலுவாக எடுக்கப்படும்” என்றார்.

ஒரு மருத்துவராகச் சொல்கிறேன்.. தொடர்ந்து பேசிய அவர் மாநகராட்சி ஆணையர் என்பதைத் தாண்டி ஒரு கால்நடை மருத்துவராகச் சொல்கிறேன், மாடுகளை வளர்ப்போர் பொறுப்புடன் செயல்பட வேண்டும். மாடுகளுக்கு நோய் இருக்கிறதா என்பதை முறையாக அவ்வப்போது மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். இந்தச் சம்பவத்தில் இத்தனை ஆக்ரோஷமாக தாக்கிய மாட்டுக்கு வெறிநோய் ஏற்பட்டிருக்கவும் வாய்ப்புள்ளது. வாழ்வாதாரத்துக்காக மாடுகளை வளர்க்கும்போது அதன் பாலைக் கறந்து சொசைட்டியில் கொடுக்க வேண்டும். மாடுகளுக்கு நோய் இருந்தால் அது பால் மூலம் பரவாமல் இருக்கத்தான் அது பால் பண்ணைகளில் ஃபாஸ்சரைஸிங் எனப்படும் சுத்திகரிப்பு முறைக்கு உட்படுத்தப்படுகிறது. எனவே பொறுப்புடன் இருங்கள்” என்றார்.

Leave your comments here...