பாதயாத்திரையை பாவ யாத்திரை என விமர்சித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் – அண்ணாமலை கண்டனம்..!

அரசியல்

பாதயாத்திரையை பாவ யாத்திரை என விமர்சித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் – அண்ணாமலை கண்டனம்..!

பாதயாத்திரையை பாவ யாத்திரை என விமர்சித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் – அண்ணாமலை கண்டனம்..!

முதலமைச்சரை பணிவுடன் ராமேஸ்வரத்திற்கு சென்று, பாவயாத்திரை செய்து, புனித நீராடும்படி வேண்டுகிறோம் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

ராமேஸ்வரத்தில் நேற்று என் மண், என் மக்கள் நடைபயண தொடக்க விழாவில் அமித்ஷா பங்கேற்று பேசினார். இந்த தொடக்க விழாவில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டணி கட்சிகள் சார்பில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தமாகா தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதனை அடுத்து நடைபயணத்தை கொடியசைத்து அமித்ஷா தொடங்கி வைத்தார். பின்னர் அமித்ஷா, அண்ணாமலை, எல்.முருகன் மற்றும் கூட்டணி கட்சி தலைவர் நடைபயணத்தில் நடந்து சென்றனர். என் மண், என் மக்கள் என்ற தலைப்பிலான இந்த நடைபயணம், 234 சட்டமன்ற தொகுதிகளிலும், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பாதயாத்திரை மேற்கொள்கிறார்.

இந்நிலையில் புதிதாக நியமிக்கப்பட்ட திமுக இளைஞரணி மாவட்ட – மாநில துணை அமைப்பாளர்களின் அறிமுகக் கூட்டம், திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலய கலைஞர் அரங்கில் இன்று நடைபெற்றது.

இதில் பேசிய முதலமைச்சர் என் மண், என் மக்கள் யாத்திரையை விமர்சித்து பேசினார். அப்போது அவர் “அமித்ஷா பாதயாத்திரை தொடங்கி வைக்க வந்திருக்கிறார். அது பாதயாத்திரை இல்லை, குஜராத்திலும், தற்போது மணிப்பூரிலும் நடந்த பாவங்களுக்கு மன்னிப்பு கேட்கும் பாவ யாத்திரை” என பேசினார்.

இந்நிலையில் தற்போது பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில் கூறியதாவது:


“நேற்று ராமேஸ்வரத்தில் என்மன்என்மக்கள் பாதயாத்திரையை உள்துறை அமைச்சர் அமித்ஷாகொடியசைத்து தொடங்கி வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் ஏற்கனவே அதைப் பற்றி சிணுங்கத் தொடங்கினார் மற்றும் அதை பாவயாத்திரை என்று அழைத்துள்ளார்.

தமிழ்நாடு மீனவர்களுக்கு அளிக்கப்பட்ட ஏராளமான தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாத நிலையில், திமுக அரசு இன்று அமைச்சர்களைக் காப்பாற்றுவதிலும், தனது குடும்பத்தின் சொத்துக்களை விரிவுபடுத்துவதிலும் கவனம் செலுத்துகிறது. எவரேனும் மூழ்கி, செய்த பாவங்களை போக்க வேண்டும் என்றால், அது திமுகவினரின் குடும்பமாக தான் இருக்க வேண்டும்.

திமுக மற்றும் காங்கிரஸ் கச்சத்தீவை அன்பளிப்பாக வழங்கியதால், கடலில் இருக்கும் தமிழ்நாடு மீனவர்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் ஏற்பட்டது. மத்தியில் 10 ஆண்டுகால திமுக – காங்கிரஸ் ஆட்சியில், 80க்கும் மேற்பட்ட மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்டனர். திமுகவினர் இவற்றைப் பார்த்து வாய்மூடி பார்வையாளர்களாகவே இருந்தனர்.

2009ம் ஆண்டில் இலங்கையில் 1.5 லட்சம் தமிழ் சகோதர சகோதரிகள் கொல்லப்பட்டனர். பல பாவங்கள் பரிகாரம் வேண்டி இருக்கும் நிலையில், முதலமைச்சரை பணிவுடன் ராமேஸ்வரத்திற்கு சென்று, பாவயாத்திரை செய்து, புனித நீராடும்படி வேண்டுகிறோம். ” இவ்வாறு அண்ணாமலை பதிவிட்டுள்ளார்.

Leave your comments here...