வன்முறை சம்பவங்களால் மேற்குவங்க உள்ளாட்சி தேர்தலில் 11 பேர் படுகொலை..!

அரசியல்

வன்முறை சம்பவங்களால் மேற்குவங்க உள்ளாட்சி தேர்தலில் 11 பேர் படுகொலை..!

வன்முறை சம்பவங்களால் மேற்குவங்க உள்ளாட்சி தேர்தலில் 11 பேர் படுகொலை..!

மேற்குவங்கத்தில் இன்று நடைபெறும் உள்ளாட்சி தேர்தலில் வாக்குச் சாவடிக்கு தீ வைப்பு, வாக்குச் சீட்டுகள் சூறையாடல், நாட்டு வெடிகுண்டு வீச்சு, கும்பல் தாக்குதல் போன்ற சம்பவங்களால் இதுவரை 7 பேர் படுகொலை செய்யப்பட்டனர். அதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது.

மேற்குவங்க மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. இதற்காக வாக்கு சாவடிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. வாக்காளர்கள் காலையில் இருந்தே வரிசையில் நின்று, வாக்குகளை செலுத்தி வருகின்றனர். வாக்கு எண்ணிக்கை வருகிற 11ம் தேதி நடைபெறுகிறது. மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பின்படி, 22 மாவட்டங்களில் உள்ள 63,229 கிராம பஞ்சாயத்து, 9,730 பஞ்சாயத்து சமிதி, 928 ஜில்லா பரிஷத் பகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது, வரும் லோக்சபா தேர்தலுக்கு முன் நடக்கவிருக்கும் பஞ்சாயத்து தேர்தல் என்பதால், அரசியல் கட்சிகளுக்கு இடையே பிரசாரத்தின் போது மோதல்கள் அதிகரித்து இருந்தன. தேர்தல் பாதுகாப்புக்காக மாநிலம் முழுவதும் 1.35 லட்சம் வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

ஆனால் வன்முறை, வாக்குச் சாவடிக்கு தீ வைப்பு, வாக்குச் சீட்டுகள் சூறையாடல், நாட்டு வெடிகுண்டு வீச்சு, கும்பல் தாக்குதல் போன்ற சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. முன்னதாக நேற்று நள்ளிரவு முதல் இன்று வரை தேர்தல் நடந்த பகுதிகளில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ், பாஜக, காங்கிரஸ், இடதுசாரி, பிற கட்சிகளின் தொண்டர்கள் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.

அந்த வகையில் முர்ஷிதாபாத் மாவட்டம் கபாஸ்டங்கா பகுதியை சேர்ந்த திரிணாமுல் தொண்டர் பாபர் அலி என்பவர், இருதரப்பு மோதலால் கொல்லப்பட்டார். ஹூக்ளியின் ஃபர்ஃபுரா ஷெரீப் பகுதியில் நடந்த வன்முறை சம்பவத்தில், ஐஎஸ்எப் அமைப்பின் தலைவர் அபு அமீர் சித்திக், தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கொல்லப்பட்டார். கூச்பெஹார் மாவட்டத்தில் உள்ள மகேஷ்வர் கிராம பஞ்சாயத்து ஒக்ரபாரியில் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளரான அன்சார் அலியின் மாமாவும், சிபிஐ-எம் கட்சியின் தொண்டருமான ஹபிசுர் ரஹ்மான் (ரபிக்) என்பவர் சுட்டுக் கொல்லப்பட்டார். துஃபாங்குங்கின் ராம்பூரில் திரிணாமுல் காங்கிரஸ் பூத் கமிட்டி நிர்வாகி கணேஷ் சர்க்கார் என்பவர், அடையாளம் தெரியாத நபர்களால் அடித்துக் கொல்லப்பட்டார். கூச் பெஹாரின் ஃபோலிமாரியில் பாஜகவின் வாக்குச் சாவடி முகவர் மாதவ் விஸ்வாஸ் என்பவரை மர்ம கும்பல் சுட்டுக் கொன்றது. கிழக்கு பர்த்வானில் சிபிஎம் தொண்டர் ரஜிபுல் ஹக் என்பவர் மர்ம கும்பலால் சுட்டுக் கொல்லப்பட்டார். வாக்குச் சாவடி எண் 4/38-ல் கையெறி குண்டுகள் வீசப்பட்டன.

மேற்கு வங்கத்தில் நேற்றிரவு தொடங்கி இன்று காலை வரை இதுவரை 7 பேர் படுகொலை செய்யப்பட்டனர். மேலும் பல இடங்களில் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடந்ததால், பலர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கிழக்கு மேதினிபூரில் காங்கிரசின் பூத் ஏஜென்ட் தேவ்குமார் ராய், பாஜக தொண்டர்களால் தாக்கப்பட்டார். மால்டா மாவட்டத்தில் சில இடங்களில் கையெறி குண்டுகள் வீசப்பட்டன. சீதாயில் உள்ள வாக்குச் சாவடிக்கு மர்ம நபர்கள் தீ வைத்தனர். இதனால் வாக்குச் சீட்டுகள் தீயில் எரிந்தன. வன்முறை நடந்த இடங்களில் போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள பங்கரில் நாட்டு வெடிகுண்டுகளும், தோட்டாக்களும் வீசப்பட்டன. அப்போது குண்டு வெடித்ததில் 4 பேர் காயமடைந்தனர்.

அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தின் பருன்ஹாட் ராமேஷ்வர்பூரில் காங்கிரஸ் வேட்பாளர் அப்துல் ரவூப் காஜி மீது மர்ம கும்பல் தாக்குதல் நடத்தியது. படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஜாங்க்ரா ஹத்யாரா கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட 2வது வாக்குச்சாவடியில் வைக்கப்பட்டிருந்த வாக்குப்பெட்டிகளை மர்ம நபர்கள் அடித்து நொறுக்கினர்.

இதனால் இருதரப்புக்கு இடையே வன்முறை ஏற்பட்டது. அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். இன்று நடைபெற்று வரும் உள்ளாட்சி தேர்தலில் படுகொலை, வன்முறை சம்பவங்கள் தொடர்பாக ஆளும் திரிணாமுல், காங்கிரஸ், பாஜக, இடதுசாரி கட்சிகளின் தலைவர்கள் ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டி வருகின்றனர். பதற்றமான வாக்குச்சாவடிகளில் போலீஸ் படைகள் குவிக்கப்பட்டுள்ளன. சில வாக்குச் சாவடிகளில் வாக்குப்பதிவு நிறுத்தி வைக்கப்பட்டது. தொடர் பதற்றம் காரணமாக மேற்குவங்கத்தில் அசாதாரண சூழல் ஏற்பட்டுள்ளது.

Leave your comments here...