அரசுப் பணியிடங்களில் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு முன்னுரிமை: அரசாணை வெளியீடு.!

தமிழகம்

அரசுப் பணியிடங்களில் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு முன்னுரிமை: அரசாணை வெளியீடு.!

அரசுப் பணியிடங்களில் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு முன்னுரிமை: அரசாணை வெளியீடு.!

அரசுப் பணியிடங்களில் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு முன்னுரிமை வழங்குவது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு அரசாணையாக வெளியிட்டுள்ளது. ஒரு குடும்பத்தில் யார் யாருக்கு முதல் தலைமுறை பட்டதாரிக்கான சான்றிதழ் வழங்கலாம், இந்த சான்றிதழை எப்படி பெறுவது என்பது உள்ளிட்ட அனைத்து நெறிமுறைகளும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றால் பெற்றோர் இருவரையும் இழந்த இளைஞர்கள், முதல் தலைமுறை பட்டதாரிகள், தமிழக அரசுப் பள்ளிகளில் தமிழ் மொழியில் படித்தவர்களுக்கு, வேலைவாய்ப்பகங்கள் மூலம் நிரப்பப்படும் அரசுப் பணியிடங்களில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று சட்டப்பேரவையில் மனிதவள மேலாண்மைத் துறையின் 2021-22-ம் ஆண்டுக்கான மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்டது.

அதன்படி, வேலைவாய்ப்பகங்கள் வழியாக நிரப்பப்படும் அரசுப் பணியிடங்களில் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு முன்னுரிமை வழங்குவதற்காக, முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ் வழங்குவது தொடர்பான விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு தற்போது வெளியிட்டுள்ளது.

அதன் விவரம்: ஒரு குடும்பத்தில் 2 பேர் இருந்தால், முதலில் யார் பட்டப் படிப்பை முடிக்கிறார்களோ அவர்களுக்கு முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ் வழங்கலாம். வீட்டில் முதல் பட்டதாரி 4 ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட தொழிற்கல்வி, மருத்துவப் படிப்பிலும், அடுத்த பட்டதாரி 3 ஆண்டு பட்டப்படிப்பிலும் சேரும் பட்சத்தில், யார் முதலில் பட்டப் படிப்பை முடிக்கிறாரோ அவருக்கு சான்றிதழ் வழங்கப்பட வேண்டும்.

இருவரும் ஒரே ஆண்டில் முடித்திருந்தால், தேர்ச்சி அடைந்த மாதத்தை கணக்கில் கொண்டு, முதலில் முடித்தவருக்கு வழங்கலாம். முதலில் பட்டப் படிப்பில்சேர்ந்து பட்டதாரி ஆவதற்கு முன்போ, அல்லது பட்டதாரிஆகி முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ் பெற்று வேலையில் சேர்வதற்கு முன்னரோ துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்துவிட்டால், குடும்பத்தில் 2-வதாக பட்டதாரியான நபருக்கு முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ் வழங்க பரிசீலனை செய்யலாம். அண்ணன், தம்பிகள் மனைவி மற்றும் மகன், மகள்களுடன் இணைந்து கூட்டுக் குடும்பமாக ஒரே வீட்டில் இருந்தால், அந்த குடும்பத்தில் முதலில் பட்டப் படிப்பு முடித்தவருக்கு மட்டும் சான்றிதழ் வழங்கப்பட வேண்டும்.

முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ் பெறுவதற்கு விண்ணப்பிக்கும் நபர், 10-ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற பின்னர், பல்கலைக்கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் வழங்கும் பட்டங்கள், பட்டயங்கள் பெற்றிருக்க வேண்டும். முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ் பெறவயது வரம்பு இல்லை. ஆண்டுவரையறையும் கிடையாது. எந்தஆண்டு பட்டப் படிப்பு முடித்திருந்தாலும், முதல் தலைமுறை பட்டதாரியாக இருக்கும் பட்சத்தில் இச்சான்றிதழ் பெறலாம்.

அதேபோல, 10-ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்ச்சி பெற்று தொலைதூரக் கல்வி, திறந்தநிலை பல்கலைக்கழகங்கள் மூலம் பட்டயம், பட்டம் பெற்றவர்களுக்கு முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ் வழங்கலாம். இரட்டை குழந்தைகளாக இருந்தால், குடும்பத்தில் பட்டதாரி இல்லாத நிலையில், முதல் பட்டதாரி சலுகையை இரட்டையர்கள் இருவருக்கும் வழங்கலாம்.

அரசு, அரசு உதவி பெறும்மற்றும் தனியார் சுயநிதி தொழிற்கல்லூரிகளில் படிக்கும் தமிழகத்தை சேர்ந்த, பட்டதாரிகளே இல்லாத குடும்பத்தை சேர்ந்தமுதல் பட்டதாரி மாணவ, மாணவிகள் இதற்கு தகுதியுடையவர்கள்.

எப்படி விண்ணப்பிப்பது?: முதல் தலைமுறை பட்டதாரி சான்று பெறுவதற்கு உரிய ஆவணங்களுடன் பொது இ-சேவை மையத்தில் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். குறுஞ்செய்தி வந்தவுடன் இணையவழியில் சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தவறான தகவல் கொடுத்து சான்றிதழ் பெறப்பட்டதாக பின்னர் தெரியவந்தால், வழங்கப்பட்ட சான்றிதழ் வட்டாட்சியரால் ரத்துசெய்யப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ் வழங்குவது தொடர்பான புதிய இணைய தொகுப்பு (Online Module) உருவாக்க நடவடிக்கை எடுக்குமாறு அரசாணையில் வருவாய், பேரிடர் மேலாண்மைத் துறை செயலர் குமார் ஜயந்த் தெரிவித்துள்ளார்

Leave your comments here...