பாதிரியார் மீது தாக்குதல்…. இரு தரப்பினரிடையே மோதல்- திமுக எம்.பி. ஞானதிரவியம் உள்பட 36 பேர் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு..!

தமிழகம்

பாதிரியார் மீது தாக்குதல்…. இரு தரப்பினரிடையே மோதல்- திமுக எம்.பி. ஞானதிரவியம் உள்பட 36 பேர் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு..!

பாதிரியார் மீது தாக்குதல்…. இரு தரப்பினரிடையே மோதல்- திமுக எம்.பி. ஞானதிரவியம் உள்பட 36 பேர் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு..!

தென் இந்திய திருச்சபை எனப்படும் கிறிஸ்தவர்களின் சி.எஸ்.ஐ. அமைப்பு கடந்த 1947-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இது தென் இந்தியாவில் வலுவான கிறிஸ்தவ அமைப்பாகும். தென்னிந்தியா முழுவதும் இந்த அமைப்புக்கு 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆலயங்கள் உள்ளன.

இதில் 1,214 பேர் மத போதகர்களாக உள்ளனர். இந்த அமைப்பில் சுமார் 40 லட்சம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இந்த அமைப்புக்கு அதிக உறுப்பினர்கள் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தென் இந்திய திருச்சபை சார்பில் கல்விக்கூடங்கள், மருத்துவமனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, புதுச்சேரி மற்றும் இலங்கையில் தென் இந்திய திருச்சபை ஏராளமான பள்ளிக்கூடங்களையும், மருத்துவமனைகளையும் நடத்தி வருகிறது

சமீபத்தில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்புப் படி தென் இந்திய திருச்சபை தென் இந்தியாவில் 104 மருத்துவமனைகளை நடத்தி வருகிறது. 2000 பள்ளிக்கூடங்கள், 130 கல்லூரிகளும் இந்த சபையால் நடத்தப்பட்டு வருகிறது. இவற்றை நிர்வாகம் செய்வதற்கு தென் இந்திய திருச்சபை நிர்வாகிகள் இடையே கடும் போட்டி நிலவுவது உண்டு.

இந்த திருச்சபையின் பேராயர் தேர்தல் கடந்த ஆண்டு நடைபெற்றது. அப்போது வேதநாயகம் என்பவர் தலைமையில் ஒரு அணியும், ஜெயசிங் என்பவர் தலைமையில் ஒரு அணியும் போட்டியிட்டன. இதில் ஜெயசிங் அணி வெற்றி பெற்றது. இதையடுத்து லே செயலாளராக நியமனம் செய்யப்பட்ட ஜெயசிங் பரிந்துரையின் பேரில் திருமண்ட திருச்சபையின் பேராயராக பர்னபாஸ் என்பவர் நியமிக்கப்பட்டார்.

இந்த நிலையில் திருமண்டலத்தின் கீழ் செயல்பட்டு வரும் பள்ளி, கல்லூரிகளில் பணி நியமனம் செய்வது தொடர்பாக பேராயர் பர்னபாசுக்கும், லே செயலாளர் ஜெயசிங்கிற்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இந்த கருத்து வேறுபாடு அதிகரிக்கவே கடந்த சில மாதங்களாக பேராயர் பர்னபாஸ் தலைமையில் ஒரு அணியினரும், லே செயலாளர் ஜெயசிங் தலைமையில் ஒரு அணியினரும் என 2 பிரிவாக பிரிந்தனர்.

இதில் ஜெயசிங் அணியில் நெல்லை தொகுதி தி.மு.க. எம்.பி. ஞானதிரவியம், திருச்சபை மேலாளர் மனோகர் உள்பட பலர் இருந்தனர். தொடர்ந்து பணி நியமனம் விவகாரத்தில் அவர்களுக்குள் உச்சகட்ட மோதல் நீடித்தது. ஒருகட்டத்தில் பாளையங்கோட்டையில் உள்ள டயோசீசன் அலுவலகத்தில் இருந்த மானேஜர் அறையை ஒரு தரப்பினர் பூட்டு போட்டனர். அதனை திறக்க வேண்டும் என கோரிக்கை வைத்து மற்றொரு தரப்பினர் டயோசீசன் அலுவலகத்திற்கு சென்றபோது 2 தரப்பினருக்கும் தள்ளு-முள்ளு ஏற்பட்டது. இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.

இதற்கிடையே பாளையங்கோட்டை ஜான்ஸ் பள்ளியின் தாளாளராக இருந்த ஞானதிரவியம் எம்.பி.யை. அப்பதவியில் இருந்து நீக்கிவிட்டு, தி.மு.க.வை சேர்ந்த வக்கீல் அருள் மாணிக்கம் என்பவரை பேராயர் பர்னபாஸ் புதிய தாளாளராக நியமித்தார். அவர் பதவியேற்க பள்ளிக்கு சென்றபோது, ஞானதிரவியம் ஆதரவாளர்கள் அங்கு சென்று மோதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று சி.எஸ்.ஐ. டயோசீசன் அலுவலகத்திற்கு பேராயர் பர்னபாஸ் அணியை சேர்ந்த பாளை இட்டேரியில் சபை நடத்திவரும் மதபோதகரான காட்பிரே நோபுள் என்பவர் சென்றார். அப்போது அங்கு லே செயலாளர் ஜெயசிங் தலைமையிலான அணியினர் திரண்டு காட்பிரே நோபுளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் அவரை ஓட ஓட விரட்டி சரமாரியாக அடித்து உதைத்தனர். இது தொடர்பான வீடியோக்கள் வைரலானது. இதில் காயம் அடைந்த அவர் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ரத்தக்கறையுடன் சென்று புகார் அளித்தார்.

அதில், ஞானதிரவியம் எம்.பி. தூண்டுதலின் பேரில் என் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. எனவே என்னை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் மனுவில் கூறியிருந்தார். பின்னர் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த புகார் தொடர்பாக விசாரணை நடத்த பாளை போலீஸ் இன்ஸ்பெக்டர் வாசிவத்திற்கு மாநகர போலீஸ் கமிஷனர் போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து மதபோதகரை தாக்கிய புகாரின்பேரில் ஞானதிரவியம் எம்.பி., பாளை பெருமாள்புரத்தை சேர்ந்த ஜான்(வயது 45), டயோசீசன் மேலாளர் மனோகர் உள்பட 12 பேர் மற்றும் கண்டால் அடையாளம் தெரியும் 25 பேர் என மொத்தம் 37 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அவர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் 147, 294(பி), 323, 502(2), 109 ஆகிய 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப் பட்டது. இதைத்தொடர்ந்து வழக்கில் தொடர்புடைய ஜான் என்பவரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave your comments here...