கழிவுநீர் தொட்டியில் பணியாளர்களை இறக்கினால் 5 ஆண்டுகள் சிறை தண்டனை – நகராட்சி நிர்வாகத்துறை எச்சரிக்கை

தமிழகம்

கழிவுநீர் தொட்டியில் பணியாளர்களை இறக்கினால் 5 ஆண்டுகள் சிறை தண்டனை – நகராட்சி நிர்வாகத்துறை எச்சரிக்கை

கழிவுநீர் தொட்டியில்  பணியாளர்களை இறக்கினால் 5 ஆண்டுகள் சிறை தண்டனை  – நகராட்சி நிர்வாகத்துறை  எச்சரிக்கை

கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய பணியாளர்களை இறக்கினால் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும். விதிகளை மீறினால் கழிவுநீர் லாரிகள் பறிமுதல் செய்யப்படும் என்று நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலர் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மனிதக் கழிவுகளை அகற்றும் தொழில்புரிவோர் தடுப்பு மற்றும் மறுவாழ்வு சட்டம் 2013-ன்படி கழிவுநீர் தொட்டியை இயந்திரங்களை கொண்டு மட்டுமே சுத்தம் செய்ய வேண்டும். இச்சட்டப்படி எந்த ஒரு நபரோ, உள்ளாட்சி அமைப்போ அல்லது எந்த ஒரு நிறுவனமோ நேரடியாகவோ, மறைமுகமாகவோ எந்த ஒரு பணியாளரையும் அபாயகரமான கழிவுநீர் கட்டமைப்புகள் அல்லது கழிவுநீர் தொட்டிகள் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுத்தக்கூடாது.

இதை மீறுவோர் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்விதிகளை முதன்முறையாக மீறினால் 2 ஆண்டுகள் சிறை அல்லது ரூ.2 லட்சம் அபராதம் அல்லது இவ்விரண்டும் சேர்த்து விதிக்கப்படும். 2-வது முறை மீறினால் 5 ஆண்டு சிறை தண்டனை அல்லது ரூ.5 லட்சம் அபராதம் அல்லது இவ்விரண்டும் சேர்த்து விதிக்கப்படும்.

கழிவுநீர் கட்டமைப்பு மற்றும் கழிவுநீர் சேகரிப்பு தொட்டியை சுத்தம் செய்யும்போது உயிரிழப்பு ஏற்பட்டால் அப்பணியில் ஈடுபடுத்திய உரிமையாளர் அல்லது ஒப்பந்ததாரர் அல்லது பணியில் அமர்த்தியவர் மீது மேற்கண்ட சட்டம், இந்திய தண்டனை சட்டம் மற்றும் நடைமுறையில் உள்ள இதர சட்டப்படி குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டு, குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். இறந்த பணியாளரின் வாரிசுதாரருக்கு இழப்பீடாக ரூ.15 லட்சம் வழங்கப்பட வேண்டும்.

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள், சென்னை பெருநகரப்பகுதி கழிவுநீர் மேலாண்மை விதிகள்-2022, தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு விதிகள்-2022 ஆகியவற்றின்படி அனைத்து கழிவுநீர் லாரிகளும், அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் சென்னை குடிநீர் வாரியத்தில் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து உரிமம் பெற வேண்டும். உரிமத்தில் குறிப்பிட்டுள்ள கழிவுநீர் உந்து நிலையங்கள் மற்றும் சுத்திகரிப்பு நிலையங்களில் மட்டுமே கழிவுநீரை வெளியேற்ற வேண்டும். அனைத்து கழிவுநீர் லாரிகளும் முறையான பராமரிப்புடன் இருக்க வேண்டும். லாரிகளின் இயக்கங்கள் ஜிபிஎஸ் கருவிகள் மூலம் கண்காணிக்கப்படும்.

பொதுமக்கள் 14420 என்ற இலவச தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டு கழிவுநீர் சுத்தம் செய்யும் சேவையை, உரிமம் பெற்ற லாரிகள் மூலம், அதற்கான கட்டணத்தை செலுத்தி பெறலாம்.

உரிமம் பெற்ற கழிவுநீர் லாரிகளை இயக்குபவர்கள், கழிவுநீர் தொட்டி சுத்தம் செய்யும் சேவைக்கான அழைப்புகளை மக்களிடம் இருந்தும் நேரடியாக பெறலாம். அவ்வாறு பெறப்பட்ட அழைப்பின் விவரங்களை 14420 என்ற எண்ணில் தொடர்புகொண்டு பதிவு செய்த பின்பு தான் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட வேண்டும்.

உரிமையாளர் பிரதிபலிப்பு உடை, பாதுகாப்பு கண் கண்ணாடிகள், கம்பூட்ஸ், தலைப்பட்டை, பாதுகாப்பு கையுறை மற்றும் பாதுகாப்பு முகக் கவசம் வாங்கி லாரிகளில் எப்போதும் இருப்பது, பணியாளர்கள் அதை அணிவது உறுதி செய்தல் வேண்டும். மேலும், வாயு வெளியேற மின்விசிறி பயன்பாட்டில் இருக்க வேண்டும். விதிகளை மீறும் லாரிகளுக்கு முதல்முறை ரூ.25 ஆயிரம், 2-ம் முறை ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். தொடர்ந்து விதிமீறலில் ஈடுபடும் லாரிகள் பறிமுதல் செய்யவும் சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Leave your comments here...