காசநோயை 2025-ம் ஆண்டுக்குள் ஒழிக்க இலக்கு – ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேச்சு

இந்தியா

காசநோயை 2025-ம் ஆண்டுக்குள் ஒழிக்க இலக்கு – ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேச்சு

காசநோயை 2025-ம் ஆண்டுக்குள் ஒழிக்க இலக்கு – ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேச்சு

பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 2014-ம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்ற பின்னர் முதன்முறையாக அக்டோபர் 3-ந்தேதி மன் கி பாத் என்ற நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. இதன்பின்னர், மாதந்தோறும் கடைசி ஞாயிற்று கிழமைகளில் காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார்.

இதன்படி, 2-வது முறையாக பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பின்னரும் இந்த நடைமுறை தொடர்ந்து வருகிறது. இந்நிகழ்ச்சியில் சமூக மற்றும் மக்கள் நலன் சார்ந்த பல்வேறு விவகாரங்கள் குறித்து அவர் பேசி வருகிறார்.பிரதமர் மோடியின் 100-வது மன் கி பாத் நிகழ்ச்சி கடந்த ஏப்ரல் 30-ந்தேதி ஒலிபரப்பப்பட்டது.

இந்த நிகழ்ச்சி இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் ஒலிபரப்பு செய்யப்பட்டு இந்தியர்கள் அனைவரும் கண்டு களிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.இந்த நிலையில், 102-வது மன் கி பாத் நிகழ்ச்சி இன்று காலை 11 மணியளவில் தொடங்கி நடந்தது.

இதில் பிரதமர் மோடி உரையாற்றும்போது,:- வழக்கமாக மன் கி பாத் நிகழ்ச்சி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிறு அன்று நடக்கும். ஆனால், ஒரு வாரம் முன்னதாக நடக்கிறது. அடுத்த வாரம் நான் அமெரிக்கா செல்வது அனைவருக்கும் தெரியும். அங்கு நிகழ்ச்சிகள் பரபரப்பாக இருக்கும் என்பதால், முன்னதாகவே உங்களுடன் பேச முடிவு செய்தேன். உங்களின் ஆசியும் உத்வேகமும் எனக்கு தொடர்ந்து உற்சாகத்தை தருகிறது.

பிபர்ஜாய் புயலால், கட்ச் மாவட்டம் கடும் பாதிப்பை சந்தித்து உள்ளது. ஆனால், முன் எப்போதும் இல்லாத வகையில் புயலை எதிர்த்து போராடிய தைரிய விதமும் தயார் நிலையும் இதற்கு முன் எப்போதும் இல்லாதது. இயற்கை பேரிடர்களை யாராலும் கட்டுப்படுத்த முடியாது. ஆனால், பல ஆண்டுகளாக இந்தியாவின் வலிமையான பேரிடர் மேலாண்மை இன்று முன்மாதிரியாக மாறி உள்ளது.

உ.பி.,யின் பந்தல்கண்ட் பகுதியைச் சேர்ந்த துளசிராம் என்பவர், கிராம மக்களுடன் இணைந்து 40 குளங்களை கட்டமைத்துள்ளார். இதனால், அந்த பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக அதிகரித்து உள்ளது.உ.பி.,யின் ஹபுர் பகுதியில் காலப்போக்கில் அழிந்து போன ‛நீம்’ என்ற நதியை அப்பகுதி மக்கள் அனைவரும் ஒருங்கிணைந்து மீட்டெடுத்து உள்ளனர். ஆறுகள், கால்வாய்கள், ஏரிகள் ஆகியவை நீர் ஆதாரங்கள் மட்டும் அல்ல. வாழ்வின் எண்ணற்ற உணர்வுகளுடன் தொடர்பில் உள்ளன

காசநோய் இல்லாத இந்தியாகாசநோய் இல்லாத இந்தியாவை 2025க்குள் உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முன்பு, காசநோயால் பாதிக்கப்பட்டவர்களை குடும்பத்தினர் புறக்கணித்தனர். ஆனால், இன்று அவர்களுக்கு உதவி செய்கின்றனர். காச நோயை ஒழிக்க ‛நிக்சய் மித்ரா’ திட்டம் துவக்கப்பட்டுள்ளது. பல சமூக அமைப்புகள் இதில் இணைந்துள்ளன. காசநோயாளிகளை தத்தெடுத்து உதவி செய்ய ஏராளமான பஞ்சாயத்துகள், ஆயிரகணக்கான கிராம மக்கள் முன்வந்துள்ளனர்.ஹிமாச்சல பிரதேசத்தை சேர்ந்த 7 வயது சிறுமி நளினி என்பவர், தனக்கு கிடைக்கும் பணம் மூலம் காசநோயாளிகளுக்கு உதவி வருகிறார். ம.பி.,யை சேர்ந்த 13 வயது சிறுமி மற்றும் மேற்கு வங்கத்தை சேர்ந்த 11 வயது சிறுமியும் தங்களின் சேமிப்பு பணத்தை, காசநோய் இல்லா இந்தியா திட்டத்திற்கு வழங்கி உள்ளனர்.

புதிய சிந்தனைகளை வரவேற்க எப்போதும் தயாராக இருப்பது இந்தியர்களின் இயல்பு. நமது எண்ணங்களை விரும்பும் நாம், புதிய விஷயங்களையும் உள்வாங்குகிறோம்.உதாரணமாக, ஜப்பானின் மியாவாக்கி காடுகள், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பரவி வருகிறது. மும்பை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் 60 மியாவாக்கி காடுகள் உருவாக்கப்பட்டு உள்ளன. மியாவாக்கி முறையை பற்றி அறிய முயற்சி செய்யுமாறு, நகர மக்கள் உள்ளிட்ட நாட்டு மக்களை கேட்டு கொள்கிறேன்.

அவர் தொடர்ந்து பேசும்போது, நிர்வாகம் என்று வரும்போது, சத்ரபதி சிவாஜி மகாராஜாவை நாம் கவனிக்க வேண்டும். அவரது வீரத்துடன், அவருடைய நிர்வாகத்தில் இருந்து நிறைய விசயங்களை கற்று கொள்ள வேண்டும்.அவருடைய நிர்வாக திறன்கள், குறிப்பிடும்படியாக, சத்ரபதி சிவாஜியின் நீர் மேலாண்மை மற்றும் கடற்படை இன்றளவும் இந்தியாவின் பெருமைகளாக தொடர்ந்து நீடிக்கின்றன என கூறியுள்ளார்.

சர்வதேச யோகா தினத்திற்காக உலகத்தின் அனைத்து பகுதி மக்களும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். ஒரே உலகம், ஒரே குடும்பம் என்ற வகையில் அனைவரின் நலனுக்காக யோகா உள்ளது. இது அனைவரையும் ஒன்றாக்கி எடுத்து செல்லும் யோகாவின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.இந்த ஆண்டு யோகா தினத்தை முன்னிட்டு நியூயார்க் நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்து உள்ளது. மக்கள் அனைவரும், யோகாவை தங்களின் வாழ்க்கையில் ஒரு அங்கமாக எடுத்து கொள்ள வேண்டும். தினசரி வழக்கமாக செய்ய வேண்டும். இன்னும் யோகாவுடன் இணையாதவர்களுக்கு ஜூன் 21 மிகப்பெரிய வாய்ப்பாக அமைந்து உள்ளது.

ஜூன் 25ம் தேதியை நாம் ஒருபோதும் மறக்க முடியாது:- ஜனநாயகத்தின் தாய் இந்தியா. நமது ஜனநாயக லட்சியங்களை நாம் முதன்மையாகவும் அரசியலமைப்புச் சட்டத்தை உச்சமாகவும் கருதுகிறோம். ஜூன் 25ம் தேதியை நாம் ஒருபோதும் மறக்க முடியாது. இந்த நாளில்தான் நம் நாட்டில் அவசரநிலை அமல்படுத்தப்பட்டது. இந்திய வரலாற்றில் இந்நாள் கருப்பு நாள். முழு மனதுடன் லட்சக்கணக்கான மக்கள் அவசர நிலையை எதிர்த்தனர். ஜனநாயக ஆதரவாளர்கள், அந்நாட்களில் கொடுமைப்படுத்தப்பட்டனர். அது அவர்களின் மனதில் இன்றும் நினைவாக உள்ளது. இவ்வாறு மோடி பேசினார்.

மணிப்பூரில் அமைதி திரும்ப பிரதமர் நரேந்திர மோடி குரல் கொடுக்க வேண்டும் என எதிர் கட்சிகள் வலியுறுத்தி வந்த நிலையில் மணிப்பூர் கலவரம் தொடர்பாக பிரதமர் எதுவும் இன்றைய நிகழ்ச்சியில் பேசவில்லை

Leave your comments here...