நாளைய வாக்காளர்கள் நீங்கள்தான், தெளிவாக இருக்க வேண்டும் – மாணவ, மாணவிகள் மத்தியில் நடிகர் விஜய் பேச்சு!

தமிழகம்

நாளைய வாக்காளர்கள் நீங்கள்தான், தெளிவாக இருக்க வேண்டும் – மாணவ, மாணவிகள் மத்தியில் நடிகர் விஜய் பேச்சு!

நாளைய வாக்காளர்கள் நீங்கள்தான், தெளிவாக இருக்க வேண்டும் – மாணவ, மாணவிகள் மத்தியில் நடிகர் விஜய் பேச்சு!

கல்வி விருது வழங்கும் விழாவை முன்னிட்டு தமிழகத்தில் 10, 12ஆம் வகுப்புத் தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களை நடிகர் விஜய் இன்று நேரில் சந்தித்து பரிசளித்தார். விஜய் மேடைக்கு வந்த உடன் உற்சாக வரவேற்பளித்த மாணவர்கள் நெகிழ்ச்சியுடன் காணப்பட்டனர்.

தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 234 தொகுதிகளிலும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழுடன் ஊக்கத்தொகையும் வழங்கும் கல்வி விருது விழா சென்னை நீலாங்கரை ஆர்.கே.கன்வென்ஷன் மையத்தில் இன்று(சனிக்கிழமை) நடைபெற்று வருகிறது.

இந்த விழாவில் உரையாற்றியபிறகு முதலில் தமிழ்நாட்டில் முதல் மற்றும் 600/600 முழு மதிப்பெண் பெற்ற மாணவி நந்தினிக்கு ஊக்கத்தொகை, சான்றிதழுடன் வைர நெக்லஸ் ஒன்றை பரிசளித்தார். பின்னர் தொடர்ந்து மற்ற மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கி வருகிறார்.

முன்னதாக விழாவில் பேசிய நடிகர் விஜய், ‘படிப்பை தவிர்த்து பார்த்தால் குணம், சிந்தனை திறன் மட்டுமே மாணவர்களுக்கு எஞ்சியிருக்கும். பணத்தை இழக்கலாம், குணத்தை இழக்கக் கூடாது. பெற்றோர் கண்காணிப்பிலிருந்து வெளியே போகும்போது கிடைக்கும் சுதந்திரத்தை சரியாக பயன்படுத்துங்கள்.கல்வியை உங்களிடம் இருந்து யாராலும் பிரிக்க முடியாது.

சமூக வலைதளத்தில் நிறைய தவறான செய்திகள் வரும். அதில் எதை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.புத்தகங்களைத் தாண்டி மாணவர்கள் நிறைய படிக்க வேண்டும். அம்பேத்கர், பெரியார், காமராஜர் போன்ற தலைவர்களைப் பற்றி மாணவ, மாணவிகள் படித்து தெரிந்துகொள்ள வேண்டும்.நாளைய வாக்காளர்கள் நீங்கள்தான். அடுத்தடுத்து புதிய நல்ல தலைவர்களை நீங்கள் தான் தேர்ந்தெடுக்க போகிறீர்கள்.

ஆனால் நம்முடைய விரலை வைத்தே நம் கண்ணை குத்துவது தான் இப்போது நடந்துகொண்டிருக்கிறது. அதுதான் காசு வாங்கிவிட்டு ஓட்டு போடுவது.ஒவ்வொரு மாணவ, மாணவியரும் தங்கள் பெற்றோரிடம் ‘காசு வாங்கி ஓட்டு போடக்கூடாது’ என்று சொல்ல வேண்டும். முயற்சி செய்து பாருங்கள், நீங்கள் சொன்னால் கண்டிப்பாக நடக்கும். அடுத்து நீங்கள் தான் வாக்காளர்கள்.

இது நடந்தால் மட்டுமே கல்விமுறை ஒரு முழுமையடைந்ததாக உணர முடியும்.உங்கள் அருகில் இருக்கும் தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு சொல்லிக்கொடுத்து அவர்களுக்கு நம்பிக்கை அளியுங்கள். அதுவே நீங்கள் எனக்கு கொடுக்கும் பரிசு.மாணவர்கள் எந்த சூழ்நிலையிலும் தவறான முடிவு எடுக்காதீர்கள். உங்களால் இது முடியாது என்று சொல்வதற்கு ஒரு கூட்டம் இருக்கும். அதை எடுத்துக்கொள்ளாதீர்கள்’ என்று பேசியுள்ளார்.

Leave your comments here...