திருப்பதி கோயிலில் மூங்கில் குடிநீர் பாட்டில் விற்பனை – சுற்றுச்சூழலைப் பாதுகாக்க அதிரடி நடவடிக்கை

இந்தியா

திருப்பதி கோயிலில் மூங்கில் குடிநீர் பாட்டில் விற்பனை – சுற்றுச்சூழலைப் பாதுகாக்க அதிரடி நடவடிக்கை

திருப்பதி  கோயிலில் மூங்கில் குடிநீர் பாட்டில் விற்பனை – சுற்றுச்சூழலைப் பாதுகாக்க அதிரடி நடவடிக்கை

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுற்றுச்சூழல் பாதுகாக்க மூங்கிலால் உருவான தண்ணீர் பாட்டில்கள் விரைவில் பக்தர்களுக்கு ரு.30க்கு விற்பனை செய்யப்பட உள்ளது.

உலக புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயில் உள்ள திருமலையில் சுற்றுச்சூழலை பாதிக்கும் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே லட்டு பிரசாதம் எடுத்து செல்ல சணல் பைகள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக ஒருமுறை பயன்படுத்தும் தண்ணீர் பாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதில்லை. இதனை அறியாமல் பக்தர்கள் கொண்டு வந்தாலும் அவற்றை தேவஸ்தான அதிகாரிகள் அலிபிரி சோதனை சாவடியில் பறிமுதல் செய்கின்றனர்.

திருமலையில் கண்ணாடி பாட்டில்களில் ரு.70க்கு 1 லிட்டர் தண்ணீர் பாட்டில் விற்கப்படுகிறது. தண்ணீர் குடித்த பின்னர் பாட்டில் திரும்ப கொடுத்தால் ₹50 வழங்கப்படுகிறது. இதனை சாதாரண பக்தர்கள் விலை கொடுத்து வாங்க முடியாது என்பதால் தேவஸ்தானம் சார்பில் பல இடங்களில் ஜலப்பிரசாதம் என்ற பெயரில் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர், குழாய்களில் விநியோகிக்கப்படுகிறது.

தேவஸ்தான அறைகளில் தங்கும் பக்தர்களுக்கு கேன்களில் தண்ணீர் வழங்கப்படுகிறது. இந்த தண்ணீர் பயன்படுத்துவதில் சிரமம் இருப்பதாக பக்தர்கள் பலர் தெரிவித்ததால் தேவஸ்தானம் சார்பில் செம்பு மற்றும் ஸ்டீல் பாட்டில்கள் ரு.200, ரு.400 விலையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. ஆனால், இந்த பாட்டில் விலை அதிகம் என்பதால் பல பக்தர்கள் அதனை வாங்க ஆர்வம் காட்டவில்லை.

இந்நிலையில் மூங்கிலால் செய்யப்பட்ட குடிநீர் பாட்டில்களை விற்பனை செய்ய தேவஸ்தான அதிகாரிகள் முடிவு செய்தனர். இதற்காக ஒடிசா மாநிலத்தில் இருந்து மூங்கில் கொண்டு வரப்பட்டு, இயந்திரங்கள் மூலம் அழகிய வடிவில் குடிநீர் பாட்டில்கள் தயார் செய்யப்பட்டது. இவற்றை பக்தர்களுக்கு ரு.30க்கு விற்பனை செய்ய தேவஸ்தான அதிகாரிகள் தனியார் நிறுவனத்தின் மூலம் ஒப்பந்த முறையில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

மூங்கில் பாட்டில்களில் தண்ணீர் குடிப்பதால், தண்ணீரின் சுவை கூடும் என்பதால் இந்த பாட்டில் பக்தர்கள் மத்தியில் வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் மூங்கில் தண்ணீர் பாட்டில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளது. இந்த பாட்டில்களில் பக்தர்கள் தேவஸ்தானத்தின் ஜல பிரசாதத்தை பிடித்து பயன்படுத்தி கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave your comments here...