பாஜக பிரமுகர் படுகொலை : கையாலாகாத திமுக ஆட்சியில், சட்டம் ஒழுங்கு கட்டுப்பாட்டிலேயே இல்லை: – அண்ணாமலை கண்டனம்..!

தமிழகம்

பாஜக பிரமுகர் படுகொலை : கையாலாகாத திமுக ஆட்சியில், சட்டம் ஒழுங்கு கட்டுப்பாட்டிலேயே இல்லை: – அண்ணாமலை கண்டனம்..!

பாஜக பிரமுகர் படுகொலை : கையாலாகாத திமுக ஆட்சியில், சட்டம் ஒழுங்கு கட்டுப்பாட்டிலேயே இல்லை: – அண்ணாமலை கண்டனம்..!

காவல்துறையைக் கையில் வைத்திருக்கும் முதல்வரோ சட்டம் ஒழுங்கைக் காப்பாற்றத் திறனில்லாமல், நம்பர் 1 முதல்வர் என்று நாளொரு நாடகம் போட்டு, பொதுமக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்” என்று வளர்புரம் ஊராட்சி மன்றத் தலைவர் படுகொலைக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரை அடுத்த வளர்புரம் ஊராட்சி மன்ற தலைவர் பிபிஜி சங்கர். இவர் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் பட்டியல் அணி மாநிலப் பொருளாளராகவும் இருந்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு சென்னை கொளத்தூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு, பின்னர் அங்கிருந்து வீட்டிற்கு காரில் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது பூந்தமல்லி அருகே சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சங்கரின் காரை பின்தொடர்ந்து வந்த, மர்ம நபர்கள் அவரது காரில் நாட்டு வெடிகுண்டுகளை வீசி, வெட்டிப் படுகொலை செய்தனர்.

இதுதொடர்பாக சமூகவலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “வளர்புரம் ஊராட்சி மன்றத் தலைவரும், தமிழக பாரதிய ஜனதா கட்சியின் பட்டியல் அணி மாநிலப் பொருளாளருமான பிபிஜி சங்கர், சமூக விரோதிகளால் நாட்டு வெடிகுண்டு வீசி, வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ள செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியடைந்தேன்.

கையாலாகாத திமுக ஆட்சியில், சட்டம் ஒழுங்கு கட்டுப்பாட்டிலேயே இல்லை என்பது தினம் தினம் அரங்கேறும் குற்றச் சம்பவங்களில் இருந்து தெளிவாகிறது. பொதுமக்கள் உயிருக்கும் உடைமைகளுக்கும் பாதுகாப்பாக இருக்க வேண்டிய காவல்துறை, ஆளுங்கட்சியின் ஏவல்துறையாக மாற்றப்பட்டு இருக்கிறது.


காவல்துறையைக் கையில் வைத்திருக்கும் முதலமைச்சரோ சட்டம் ஒழுங்கைக் காப்பாற்றத் திறனில்லாமல், நம்பர் 1 முதல்வர் என்று நாளொரு நாடகம் போட்டு, பொதுமக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார். உடனடியாக, குற்றவாளிகளைக் கண்டுபிடித்து, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இனியும் இது போன்ற குற்றச் சம்பவங்கள் தொடர்ந்தால், மாநிலம் முழுவதும் தமிழக பாரதிய ஜனதா கட்சி போராட்டம் நடத்தும் என்றும் எச்சரிக்கிறேன்” என்று அவர் பதிவிட்டுள்ளார்.

பி.பி.ஜி சங்கர்
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வளர்புரம் ஊராட்சி மன்ற தலைவராக இருந்து வந்தவர் பி.பி.ஜி சங்கர். இவர் மீது சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள பல காவல் நிலையங்களில் பல்வேறு கொலை, கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் உள்ளன. பிரபல ரவுடியான பிபிஜி சங்கர் பாஜக மாநில பட்டியலின பொருளாளராகவும் இருந்து வந்தார்.இவர் 2004–ம் ஆண்டுக்கு முன்பு வரை அப்போது பிரபல ரவுடியாக இருந்த இவருடைய அண்ணன் பி.பி.ஜி.குமரனுடன் சேர்ந்து கள்ளச்சாராயம் விற்று வந்தார். ரவுடி பி.பி.ஜி. குமரன் செய்த அனைத்து சமூகவிரோத செயல்களிலும் இவர் துணை போனார் என கூறப்படுகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு பி.பி.ஜி.குமரன் கொடூரமாக கொல்லப்பட்டார். இதனை அடுத்து பிபிஜி குமரன் கொலை வழக்கில் தொடர்புடைய குன்றத்தூர் பகுதியை சேர்ந்த ரவுடி வைரம் என்பவரை பழிவாங்க பிபிஜி சங்கர் திட்டமிட்டு வந்துள்ளார். இதனால் இவருக்கு கொலை அச்சுறுத்தல் இருந்து வைத்தது.

இந்த நிலையில், பிபிஜி சங்கர் நேற்று காலை சென்னைக்கு சென்று விட்டு இரவு வீட்டிற்கு தனது காரில் டிரைவருடன் சென்று கொண்டிருந்தார். கார் நசரத்பேட்டை சிக்னல் அருகே சென்று வந்தபோது திடீரென காரை வழிமறித்த கொலைகார மர்ம கும்பல் கார் மீது நாட்டு வெடிகுண்டு வீசி வெடிக்க வைத்தனர். இதில் காரில் முன்பகுதி கடுமையாக சேதமடைந்து கார் அப்படியே நின்றுவிட்டது.சுதாரித்துக்கொண்ட பிபிஜி சங்கர் காரில் இருந்து இறங்கி தப்பி ஓடினார்.

அவரை துரத்தி பிடித்த கும்பல் தலையில் இருந்து மூளை வெளியே வரும் அளவுக்கு வெறித்தனமாக வெட்டி அவரை கொலை செய்துவிட்டு தப்பி சென்றது. கடந்தாண்டு சங்கர் மீது பலரது நிலங்களை அபகரித்து தனது பினாமி பெயரில் சொத்துக்களை குவித்துள்ளதாக புகார் எழுந்தது. சங்கர் மீது வழக்கு பதிவு செய்த அமலாக்கத்துறை இவருக்கு தொடர்பான இடங்களில் சோதனை நடத்தியதில் உரிய ஆவணங்களும், முகாந்திரமும் இல்லாத 25 கோடி ரூபாய் மதிப்புள்ள 79 சொத்துகளை பறிமுதல் செய்தனர். இதற்கு பின்னால் பாஜக புள்ளிகள் இருந்ததாகவும் அப்போது பேச்சு எழுந்தது.இந்த நிலையில், தொழில்போட்டி, கட்டப்பஞ்சாயத்து, கொலை பகை என எதிரிகளால் கட்டம் கட்டப்பட்டு வந்த பிபிஜி சங்கர் இன்று கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். பி.பி.ஜி குமரன் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான முன்னாள் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய சேர்மனான மண்ணூர் குட்டி என்பவர் சில ஆண்டுகளுக்கு முன்பு கொல்லப்பட்டார். இந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி சங்கர்.மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் சினிமா பாணியில் நடைபெற்ற இந்த கொலையால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது. கொலையாளிகளை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்த கொலையில் தொடர்புடைய 9 பேர் எழும்பூர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர். 20 – 25 வயது மதிக்கத்தக்க 9 பேர் 13வது குற்றவியல் நடுவர் நீதிபதி முன்பு சரணடைந்துள்ளனர்

Leave your comments here...