நாளை ஆர்.எஸ்.எஸ் பேரணி – நிபந்தனைகள் விதித்த காவல்துறை..!

தமிழகம்

நாளை ஆர்.எஸ்.எஸ் பேரணி – நிபந்தனைகள் விதித்த காவல்துறை..!

நாளை ஆர்.எஸ்.எஸ் பேரணி –  நிபந்தனைகள் விதித்த காவல்துறை..!

தமிழகத்தில் நாளை, 45 இடங்களில் நடக்க உள்ள, ஆர்.எஸ்.எஸ்., பேரணிக்கு, பல்வேறு நிபந்தனைகள் விதித்து, டி.ஜி.பி., சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கை:பேரணியில் பங்கேற்போர், இந்திய அரசால் தடைசெய்யப்பட்ட அமைப்புகளுக்கு ஆதரவாக, எதையும் பேசவோ, வெளிப்படுத்தவோ கூடாது. நாட்டின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டைக் குலைக்கும் எந்தச் செயலிலும் ஈடுபடக் கூடாது.போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தக்கூடாது.

பேரணியில் பங்கேற்போர் தடி, லத்தி அல்லது ஆயுதம் எடுத்து வரக்கூடாது. அனுமதிக்கப்பட்ட வழித்தடத்திற்கு இடதுபுறமாக, ஒழுங்கான முறையில் பேரணியாக செல்ல வேண்டும். போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது.போக்குவரத்து மற்றும் பங்கேற்போரை ஒழுங்குபடுத்த, காவல்துறைக்கு உதவ போதிய தன்னார்வலர்களை அமைப்பாளர்கள் ஏற்பாடு செய்ய வேண்டும்.

பாக்ஸ் வகை ஸ்பீக்கர்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஸ்பீக்கர்களின் வெளிப்பாடு, 15 வாட்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும். 30 மீ., சுற்றளவில் மட்டுமே இருக்க வேண்டும்.பேரணியில் பங்கேற்போர் மதம், மொழி, கலாசாரம் மற்றும் பிற குழுக்களின் உணர்வுகளை எந்த வகையிலும் புண்படுத்தக் கூடாது.

பொது, தனியார் சொத்துக்கள் சேதத்திற்கான செலவை திருப்பிச் செலுத்துவதற்கான உறுதிமொழியை ஏற்க வேண்டும். நிபந்தனைகளில் ஏதேனும் ஒன்றை மீறினால், சட்டப்படி தேவையான நடவடிக்கை எடுக்க, காவல்துறை அதிகாரிக்கு சுதந்திரம் உள்ளது.சூரிய அஸ்தமனத்திற்கு முன் நிகழ்வுகள் முடிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் நிகழ்வு சுமூகமாக நடப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையை, போலீஸ் அதிகாரிகள் எடுக்க வேண்டும்.

வகுப்பு ரீதியாக மற்றும் உணர்வுகள் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில், தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும். போலீசாருக்கு பாதுகாப்பு தொடர்பான வரைபடம் அனுப்ப வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Leave your comments here...