கடலுக்குள் 30 ஆயிரம் மெகாவாட் திறன் கொண்ட காற்றாலைகளை அமைக்க மத்திய அரசு திட்டம்..!

தமிழகம்

கடலுக்குள் 30 ஆயிரம் மெகாவாட் திறன் கொண்ட காற்றாலைகளை அமைக்க மத்திய அரசு திட்டம்..!

கடலுக்குள் 30 ஆயிரம் மெகாவாட் திறன் கொண்ட  காற்றாலைகளை  அமைக்க மத்திய அரசு  திட்டம்..!

ராமேசுவரத்தில் இருந்து கன்னியாகுமரி வரையிலான கடல் பகுதிகளில், கடலுக்குள் 30 ஆயிரம் மெகாவாட் திறன் கொண்ட காற்றாலைகளை அமைக்க மத்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.

இது தொடர்பாக தூத்துக்குடி வஉசி துறைமுக ஆணையத் தலைவர் தா.கி.ராமச்சந்திரன் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: தமிழக கடற்கரைப் பகுதிகளில் 30 ஜிகாவாட் (30 ஆயிரம் மெகாவாட்) திறன் கொண்ட காற்றாலைகளை கடலுக்குள் அமைக்க மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்தும் அமைப்பாக (நோடல் போர்ட்) தூத்துக்குடி வஉசி துறைமுகத்தை அமைச்சகம் நியமித்துள்ளது.

இந்த காற்றாலைகள் ராமேசுவரத்தில் இருந்து கன்னியாகுமரி வரையிலான கடல் பகுதியில் அமைக்கப்பட உள்ளன. கடலுக்குள் காற்றாலைகளை அமைப்பது தொடர்பாக, டென்மார்க் மற்றும் நார்வே நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் ஏற்கெனவே ஆய்வுசெய்து, மத்திய அரசிடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளன.

2 ஜிகாவாட் திறன்: இந்த திட்டத்தில் முதல் கட்டமாக 2 ஜிகாவாட் (2000 மெகாவாட்) திறன்கொண்ட காற்றாலைகள் அமைக்கப்படுகின்றன. நிலப்பரப்பில் அமைக்கப்படும் காற்றாலைகளில் 2 மெகாவாட் அளவுக்குத்தான் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். ஆனால், கடலுக்குள் அமைக்கப்படும் காற்றாலைகளில் 15 மெகாவாட் வரை மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும்.

இந்த காற்றாலைகளின் இறகுகள் மிகவும் பெரிதாக இருக்கும். காற்றாலை உதிரி பாகங்களை தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் இணைத்து, கடலுக்குள் குறிப்பிட்ட தொலைவுக்குக் கொண்டு சென்று அவை நிறுவப்படும். இதற்குத் தேவையான வசதிகளை செய்வதற்காக தூத்துக்குடி வஉசி துறைமுகத்துக்கு ரூ.700 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

முதல்கட்டமாக 2 ஜிகாவாட் காற்றாலை அமைக்கும் பணிகள் ஓராண்டுக்குள் முடிவடையும் என எதிர்பார்க்கிறோம். தூத்துக்குடி – கொழும்பு- மாலத்தீவு – கொச்சி – தூத்துக்குடி இடையேசிறிய வகை பயணிகள் கப்பல் போக்குவரத்தை தொடங்க 2 நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்துள்ளன. மத்திய அரசு ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து, இலங்கை அரசிடம் அந்நிறுவனங்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. இலங்கை அரசு ஒப்புதல் கொடுத்த பின்னர் 3 மாதங்களில் இந்த கப்பல் போக்குவரத்து தொடங்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

சுற்றுலா சொகுசு கப்பல்: சர்வதேச சுற்றுலா சொகுசு கப்பல்களை தூத்துக்குடி துறைமுகத்துக்கு தொடர்ந்து இயக்க, ஒரு சர்வதேச கப்பல் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். பல்வேறு வகையான சரக்குகளை ஒரே இடத்தில் சேமித்துவைத்து, அவற்றை துறைமுகம் மூலம் ஏற்றுமதி செய்யும் வகையில் தமிழகத்தில் தூத்துக்குடி மற்றும் கோவையில் பன்னோக்கு சரக்குப் போக்குவரத்து பூங்காக்களை அமைக்க மத்திய கப்பல் துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

கோவையில் 200 ஏக்கர் பரப்பிலும், தூத்துக்குடி துறைமுக வளாகத்தில் 100 ஏக்கர் பரப்பளவிலும் இந்த பூங்காக்கள் அமைக்கப்படும். தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் ரூ.7,056 கோடி செலவில் வெளித்துறைமுகத் திட்டம் நிறைவேற்றப்பட உள்ளது. இந்த திட்டம் மத்திய அரசின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கிறது. இந்த திட்டத்தில் முதல்கட்டமாக 16 மீட்டர் மிதவை ஆழத்துடன் கூடிய 2 சரக்குப் பெட்டக முனையங்கள் அமைக்கப்படுகின்றன. இவ்வாறு ராமச்சந்திரன் கூறினார்.

Leave your comments here...