ஓடும் ரயிலில் பயணிகள் மீது தீ வைத்த சம்பவம் – ஷாருக் சைஃபியை 11 நாள் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி..!

இந்தியா

ஓடும் ரயிலில் பயணிகள் மீது தீ வைத்த சம்பவம் – ஷாருக் சைஃபியை 11 நாள் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி..!

ஓடும் ரயிலில் பயணிகள் மீது தீ வைத்த சம்பவம் – ஷாருக் சைஃபியை 11 நாள் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி..!

கேரள மாநிலம், கோழிக்கோட்டில் ஓடும் ரயிலில் பயணிகள் மீது தீ வைத்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சாருக் சைஃபியை 11 நாள் காவலில் வைத்து விசாரிக்க போலீசுக்கு கோழிக்கோடு நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.

கேரள மாநிலம், கோழிக்கோட்டில் ஆலப்புழா-கண்ணூர் எக்சிகியூட்டிவ் எக்ஸ்பிரஸ் ரயிலில் கடந்த 2ம் தேதி இரவு பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது உயிர் பிழைப்பதற்காக ஓடும் ரயிலில் இருந்து கீழே குதித்ததில் 2 வயது பெண் குழந்தை உள்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக டெல்லியைச் சேர்ந்த சாருக் சைஃபி (24) என்பவரை மகாராஷ்டிரா மாநிலம் ரத்தினகிரியில் வைத்து போலீசார் கைது செய்தனர். போலீசார் அவரை நேற்று கோழிக்கோட்டுக்கு கொண்டு வந்தனர். விசாரணைக்குப் பின் போலீசார், ஷாருக் செய்பியை மருத்துவ பரிசோதனைக்காக கோழிக்கோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு நடத்திய பரிசோதனையில் அவருக்கு மஞ்சள் காமாலை இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து கோழிக்கோடு அரசு மருத்துவமனையிலேயே அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதன் காரணமாக நேற்று சாருக் சைஃபியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த முடியவில்லை. இந்நிலையில் கோழிக்கோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வந்த கோழிக்கோடு குற்றவியல் முதல் வகுப்பு மாஜிஸ்திரேட் மனீஷ், ஷாருக் செய்பியை வரும் 20ம் தேதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டார். இதற்கிடையே சாருக் சைஃபி நேற்று மதியம் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். போலீசார் அவரை கோழிக்கோடு முதல்வகுப்பு குற்றவியல் மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தினர்.

அப்போது அவரை 14 நாட்கள் காவலில் விசாரிக்க அனுமதி கோரி போலீஸ் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த மாஜிஸ்திரேட் மனீஷ், 11 நாள் காவலில் விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டார். தொடர்ந்து போலீசார் அவரை விசாரணைக்கு அழைத்து சென்றனர். இந்த விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையே தீ வைப்பு சம்பவத்தின்போது ரயிலில் இருந்து வெளியே குதித்த 3 பேர் பலியானதை தொடர்ந்து கோழிக்கோடு ரயில்வே போலீசார் சாருக் சைஃபி மீது கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Leave your comments here...