ஆருத்ரா கோல்ட் நிறுவன மோசடி வழக்கில் அதிர்ச்சி – நடிகர் ஆர்.கே.சுரேஷுக்கு தொடர்பு

தமிழகம்

ஆருத்ரா கோல்ட் நிறுவன மோசடி வழக்கில் அதிர்ச்சி – நடிகர் ஆர்.கே.சுரேஷுக்கு தொடர்பு

ஆருத்ரா கோல்ட் நிறுவன மோசடி வழக்கில் அதிர்ச்சி – நடிகர் ஆர்.கே.சுரேஷுக்கு தொடர்பு

ஆருத்ரா கோல்ட் நிறுவன மோசடி வழக்கில் பிரபல நடிகர் ஆர்.கே.சுரேஷுக்கு தொடர்பு இருப்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையைத் தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த ஆருத்ரா கோல்டு நிறுவனம், பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட முதலீடுகளுக்கு மாத வட்டியாக 25 முதல் 30 சதவீதம் வரை தருவதாக கூறி சுமார் 1 லட்சம் முதலீட்டாளர்களிடம் இருந்து 2438 கோடி முதலீடு பெற்று மோசடியில் ஈடுபட்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

மேலும் மோசடியில் ஈடுபட்ட நிர்வாகிகள், ஏஜெண்ட்டுகள் உள்ளிட்ட 21 பேர் மீது வழக்கு பதிவு செய்த பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார், ஆருத்ரா கோல்டு நிறுவன இயக்குநர்கள் பாஸ்கர் , மோகன்பாபு, செந்தில்குமார், நாகராஜ், மற்றும் பேச்சிமுத்து ராஜா, அய்யப்பன், ரூசோ, முன்னாள் பாஜக நிர்வாகி ஹரிஷ் , மாலதி, இயக்குநர் மைக்கேல் ராஜ் என 11 பேரை கைது செய்தனர்.

இவ்வழக்கில் இதுவரை ரொக்கமாக 5.69 கோடியும், தங்கம் வெள்ளிப் பொருட்கள் 1.13 கோடி மதிப்பு கைப்பற்றியதுடன் வங்கி கணக்கில் இருந்த பணம் 96 கோடி முடக்கி வைக்கப்பட்டது. அத்துடன் கைது செய்யப்பட்டவர்களின் அசையா சொத்துகள் 97 கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில் முன்னாள் பாஜக நிர்வாகி ஹரிஷை நான்கு நாட்கள் காவலில் எடுத்து பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ரூசோ மற்றும் ஹரிஷிடம் நடத்திய விசாரணையில் பிரபல நடிகரும், தயாரிப்பாளர், விநியோகஸ்தருமான ஆர்.கே சுரேஷ்க்கும் இந்த மோசடியில் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

குறிப்பாக ஆருத்ரா கோல்ட் டிரேடிங் நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவரான ராஜசேகர் மற்றும் கைதான ரூசோ ஆகியோரிடமிருந்து பல கோடி ரூபாயை ஆர்.கே.சுரேஷ் பெற்றதும்,அதற்கான பணபரிவர்த்தனை ஆவணங்களை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் கண்டுபிடித்துள்ளனர். பாஜகவில் ஓபிசி பிரிவின் துணைத் தலைவராக பொறுப்பு வகிக்கும் ஆர்.கே.சுரேஷ், ஆருத்ரா கோல்ட் டிரேடிங் நிறுவன வழக்குகளில் இருந்து, தனது நண்பர்களை தப்ப வைக்க உதவி செய்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து ஆர்.கே.சுரேஷுடம் விசாரணை நடத்த முடிவு செய்த பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் அவருக்கு பலமுறை சம்மன் அனுப்பியுள்ளனர். கடந்த மூன்று மாதங்களாக ஆர்.கே.சுரேஷ் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதனால் சந்தேகமடைந்த போலீஸார் அவரை தேடிச்சென்ற போது, ஆர்.கே.சுரேஷ் வெளிநாடு தப்பிச் சென்றது தெரியவந்தது.

இதனையடுத்து வெளிநாடு தப்பிச் சென்ற ஆர்.கே.சுரேஷை சென்னை அழைத்து வந்து விசாரணை நடத்துவற்கான நடவடிக்கைகளை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் மேற்கொண்டு வருகின்றனர்.குறிப்பாக ஆருத்ரா மோசடியில் சிக்கியுள்ள ஆர்.கே.சுரேஷுக்கு உடந்தையாக சினிமா பிரபலங்கள் அல்லது பாஜக பிரமுகர்கள் யாரேனும் உள்ளனரா என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கெனவே ஆருத்ரா மோசடி வழக்கில் பாஜக பிரமுகர் ஹரிஷ் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் ஒரு பாஜக பிரமுகருக்கு இவ்வழக்கில் தொடர்பு இருப்பது முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave your comments here...