டெல்லி மாநகராட்சி மேயர் தேர்தல் – ஆம் ஆத்மி கட்சியின் ஷெல்லி ஓபராய் வெற்றி..!

அரசியல்

டெல்லி மாநகராட்சி மேயர் தேர்தல் – ஆம் ஆத்மி கட்சியின் ஷெல்லி ஓபராய் வெற்றி..!

டெல்லி மாநகராட்சி மேயர் தேர்தல் – ஆம் ஆத்மி கட்சியின் ஷெல்லி ஓபராய் வெற்றி..!

டெல்லி மாநகராட்சி மேயர் தேர்தல் கடந்த டிசம்பா் 4-ம் தேதி நடைபெற்றது. இத்தோ்தலில் ஆம் ஆத்மி கட்சி 134 இடங்களைக் கைப்பற்றியது. இதன்மூலம் 15 ஆண்டுகால பா.ஜ.க. ஆட்சிக்கு முடிவு கட்டியது. 250 உறுப்பினா்களைக் கொண்ட மாநகராட்சி தோ்தலில் பா.ஜ.க. 104 வார்டுகளிலும், காங்கிரஸ் 9 இடங்களிலும் வென்றது. இதையடுத்து கவுன்சிலர்கள் பதவியேற்புக்குப் பின் மேயர் தேர்தலை நடத்த முடிவு செய்யப்பட்டது. மேயர், துணை மேயர் பதவிகளுக்கு ஆம் ஆத்மி மற்றும் பாஜக இரு தரப்பும் வேட்பாளர்களை அறிவித்தது.

ஆனால், மாநில அரசின் ஒப்புதல் இல்லாமல் ஆளுநரால் நியமிக்கப்பட்ட நியமன உறுப்பினர்கள் விவகாரம், மாமன்றத்தில் புயலை கிளப்பியது. ஆளுநரால் நியமிக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு மேயர் தேர்தல், துணை மேயர் தேர்தலில் வாக்களிக்கும் உரிமை உள்ளதா என்பது தொடர்பாக ஏற்பட்ட மோதல் காரணமாக மேயர் தேர்தல் தொடர்ந்து 3 முறை ஒத்திவைக்கப்பட்டது. மாநகராட்சி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றபோதும் கூட, பாஜக தலைவரை மேயர் பதவிக்கு தேர்ந்தெடுப்பதன் மூலம் மாநகராட்சியை கைப்பற்ற பாஜக முயற்சிப்பதாக ஆம் ஆத்மி கட்சி குற்றம்சாட்டியது.

பின்னர், மேயர் தேர்தல் தொடர்பாக ஆம் ஆத்மி மேயர் வேட்பாளர் ஷெல்லி ஓபராய் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், மேயர் தேர்தலில் நியமன உறுப்பினர்கள் வாக்களிக்க முடியாது என்று உத்தரவிட்டது. இதையடுத்து மேயர் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. பிப்ரவரி 22ம் தேதி மேயர் தேர்தல் நடத்தும்படி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான மாநில அரசு அளித்த பரிந்துரைக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்தார்.

இந்நிலையில் டெல்லி மேயர் தேர்தல் இன்று நடைபெற்றது. இந்த தேர்தலில் மொத்தம் 266 வாக்குகள் பதிவாகின. இதில், 150 வாக்குகள் பெற்று ஆம் ஆத்மி வேட்பாளர் ஷெல்லி ஒப்ராய் அபார வெற்றிபெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் ரேகா குப்தா 116 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். டெல்லி மேயர் தேர்தலில் வெற்றிபெற்ற ஆம் ஆத்மி வேட்பாளர் ஷெல்லி ஒப்ராய்க்கு அக்கட்சியின் தலைவரும் டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Leave your comments here...