மதுரையில் மெட்ரோ ரயில்: திட்ட அறிக்கை தயார் செய்ய இ-டெண்டர் வெளியீடு!

தமிழகம்

மதுரையில் மெட்ரோ ரயில்: திட்ட அறிக்கை தயார் செய்ய இ-டெண்டர் வெளியீடு!

மதுரையில் மெட்ரோ ரயில்: திட்ட அறிக்கை தயார் செய்ய இ-டெண்டர் வெளியீடு!

தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி அமைந்தது முதல் தென் மாவட்டங்களின் தொழில், கல்வி வளர்ச்சிக்காக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் மதுரையில் கலைஞர் நூலகம், டைடல் பார்க், ஜல்லிக்கட்டு அரங்கம் போன்ற திட்டங்கள் அறிவிக்கப்பட்டு அதற்கான பணிகள் நடந்து வருகின்றன.

மதுரையில் வாகன பயன்பாட்டால் ஏற்படும் நெரிசலை தவிர்க்க சாலை வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக தல்லாகுளம் முதல் கோரிப்பாளையம் வரை மேம்பாலம் கட்டுவதற்கான திட்டப் பணிகள் நடந்து வருகின்றன. ஒத்தகடை முதல் திருமங்கலம் வரை 31 கி.மீ. தொலைவுக்கு, ரூ.8 ஆயிரம் கோடி செலவில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக 17 நிறுத்தும் இடங்கள் தேர்வு செய்யப்பட உள்ளன. அவற்றில் கோரிப்பாளையம், வசந்தநகர் ஆகிய பகுதிகளில் சுரங்கப்பாதை அமைய உள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், மதுரையில் மெட்ரோ ரெயில் திட்டத்தை நிறைவேற்றுவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயும் வகையில் இ-டெண்டர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மதுரையில் அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசல், எதிர்கால தேவை, மாற்றுத் திட்டங்கள், திட்டப்பாதை, திருப்பங்கள், பயணிகள் எண்ணிக்கை, பயணத் திட்டம், நேரம், பயணக்கட்டணம், ரயில் நிலையங்கள், தேவையான நிலப்பரப்பு, எந்த வகை நிதியின் கீழ் மேற்கண்ட திட்டத்தை நிறைவேற்றுவது? உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் அடிப்படையில் அறிக்கை தயாரித்து 4 மாதத்தில் வழங்க வேண்டும் என்று டெண்டர் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

மதுரை மாநகரில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் மெட்ரோ, மெட்ரோ நியோ மற்றும் மெட்ரோ லைட் ஆகிய வகைகளில் பயணிகள் பொதுப் போக்குவரத்து திட்டத்தை நிறைவேற்றுவதன் சாத்தியம் குறித்தும் ஆய்வுகள் நடத்தப்பட உள்ளன. இதற்கு ‘மதுரை விரைவு போக்குவரத்து பெருந்திட்டம்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் மெட்ரோ ரயில் இயக்கப்படும்போது திருப்புவனம், மேலூர் ஆகிய பகுதிகளை இணைத்து விரிவாக்கம் செய்யும் வகையிலும் ஆய்வுகள் நடைபெறும்.

சென்னை மெட்ரோ ரயில் திட்ட இயக்குநர் அர்ச்சுனன் சமீபத்தில் மதுரை வந்திருந்த போது, “மெட்ரோ ரயில் திட்டம் பாதுகாப்பானது. நம்பகத்தன்மை மிகுந்தது. பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களை, மெட்ரோ ரயில் எளிதாக இணைக்கிறது. சென்னையில் 54 கி.மீ. தூரம் வரை மெட்ரோ ரெயில் இயக்கப்படுகிறது. அங்குள்ள ரெயில் நிலையம், ரெயில் பெட்டிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது.

மெட்ரோ ரயிலில் பெயரளவுக்கு மட்டுமே டிரைவர்கள் இருப்பார்கள். பெரும்பாலான நேரங்களில் ஜி.பி.எஸ் மூலமாகவே, ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. 2-ம் கட்ட திட்டப் பணியில் டிரைவரின்றி மெட்ரோ ரெயில் இயக்கப்படும். கோவை, மதுரை மாவட்டங்களில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகள் தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டுள்ளன. அந்த அறிக்கை தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது. மதுரையில் மெட்ரோ ரெயில் இயக்குவதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பாக இ-டெண்டர் அறிவிப்பு வெளியிடப்படும்” என்று அறிவித்திருந்தார். அதன்படி சென்னை மெட்ரோ ரெயில் நிலைய அதிகாரிகள் மேற்கண்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். ஓரிரு ஆண்டுக்குள் மதுரை மெட்ரோ ரெயில் திட்டப் பணிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave your comments here...