சிவராத்திரியை முன்னிட்டு சிவாலய ஓட்டம் – குமரி மாவட்டத்திற்கு பிப்.18-ம் தேதி உள்ளூர் விடுமுறை..!

ஆன்மிகம்தமிழகம்

சிவராத்திரியை முன்னிட்டு சிவாலய ஓட்டம் – குமரி மாவட்டத்திற்கு பிப்.18-ம் தேதி உள்ளூர் விடுமுறை..!

சிவராத்திரியை முன்னிட்டு சிவாலய ஓட்டம் – குமரி மாவட்டத்திற்கு பிப்.18-ம் தேதி உள்ளூர் விடுமுறை..!

சிவராத்தியை முன்னிட்டு குமரி மாவட்டத்திற்கு பிப்.18-ம் தேதி உள்ளூர் விடுமுறையாக அறிவித்து மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் உத்தரவிட்டுள்ளார். சிவராத்திரிக்கு தமிழகத்திலேயே கன்னியாகுமரி மாவட்டம் மட்டுமே உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு வருகின்து.

சிவாலய ஓட்டம் அதன் பின்னணியே சுவாரஸ்யமானது:- மகா சிவராத்திரி தினம் நாட்டின் பல பகுதிகளிலும் பல விதமாக கொண்டாடப்படுவதுண்டு. சிவராத்திரியன்று சிவனை வழிபடும் பழக்கமும், குல தெய்வத்தை வழிபடும் பழக்கமும் நடைமுறையில் உள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டுமே நடைபெறும் ஒரு வழிபாட்டிற்கு சிவாலய ஓட்டம் என்று பெயர். அதாவது இரவு முழுவதும் ஒவ்வொரு சிவாலயமாக நடந்தும், ஓடியும் சென்று வழிபடும் முறை. இந்த வழக்கம் வேறு எங்கும் நடைமுறையில் கிடையாது.

சிவபெருமான் அடி முடி காண முடியாத ஜோதிப்பிழம்பாக காட்சியளித்த தினமே மகா சிவராத்திரி திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. மகா சிவராத்திரியன்று பக்தர்கள் உறங்காமல் விரதம் இருந்து சிவனை தரிசிப்பார்கள். கன்னியாகுமரி மாவட்டத்தில் கல்குளம், திருமலை, திக்குறிச்சி, திற்பரப்பு, திருநந்திக்கரை, பொன்மனை, பன்றிப்பாகம், மேலாங்கோடு, திருவிடைக்கோடு, திருவிதாங்கோடு, திருப்பன்றிக்கோடு, திருநட்டாலம் என்கிற 12 சிவாலயங்களை சிவராத்திரிக்கு முதல்நாளான நேற்றில் இருந்து ஓடி ஓடி தரிசனம் செய்கின்றனர் பக்தர்கள். சிவாலய ஓட்டம் என்று பக்தியோடு அழைக்கப்படும் இந்த ஓட்டத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காவி உடை அணிந்து கொண்டு பங்கேற்கின்றனர். ஒரு கையில் பனை விசிறி, மற்றொரு கையில் சிறு பண முடிப்பும் வைத்துக்கொண்டு ஓடி ஓடி தரிசிக்கின்றனர். அரியும் சிவனும் ஒன்று என்ற தத்துவத்தை விளக்கும் வகையிலேயே இந்த சிவாலய ஓட்டம் அமைந்துள்ளது. ஏன் இந்த ஓட்டம் என்று கேட்டால் அதற்கொரு சுவாரஸ்யமான புராண கதையை கூறுகின்றனர் குமரி மாவட்ட மக்கள்.

இடுப்புக்கு மேலே மனித வடிவமும், இடுப்புக்கு கீழே புலி வடிவமும் கொண்டது புருஷாமிருகம். புலிக்கால் முனிவரான வியாக்ரபாதரே சிவபெருமானை வேண்டி இப்படி உருவம் எடுத்தார் என்பார்கள். புருஷாமிருகம் சிவபக்தன். விஷ்ணு என்றால் ஆகாது. தனது எல்லைக்குள் எவரேனும் திருமால் நாமத்தைக் கூறினால், அவரைத் தாக்கிவிடும். தவ வலிமையைவிட புஜ பலமே சிறந்தது! என்று நம்பியவர் பீமன். புருஷாமிருகத்துக்கும் பீமனுக்கும் அரியும் சிவனும் ஒன்று என்பதை உணர்த்த ஸ்ரீகிருஷ்ணர் திருவுளம் கொண்டார். ஒருமுறை தர்மர் நடத்தும் ராஜசூய யாகத்துக்கு புருஷாமிருகத்தின் பால் கொண்டு வருமாறு பீமனை அனுப்பினார். வைணவத்தை வெறுக்கும் புருஷாமிருகத்திடம் சென்று பால் பெற்று வருவது எப்படி? எனத் தயங்கினார் பீமன். ஆனால் கிருஷ்ணரோ, பயப்படாதே. உன்னிடம் பன்னிரெண்டு ருத்திராட்சக் கொட்டைகள் தருகிறேன். புருஷாமிருகம் உன்னைத் தாக்க வரும்போது, ருத்திராட்சக் கொட்டைகளில் ஒன்றைக் கீழே போடு. அது சிவலிங்கமாக மாறும். லிங்கத்தைப் பார்த்ததும், புருஷாமிருகம் பூஜையில் இறங்கிவிடும். அப்போது தப்பித்து விடலாம்! என்றார்.

திருமலையில் ஒரு பாறை மீது அமர்ந்து, சிவதவம் புரிந்து கொண்டிருந்தது புருஷாமிருகம். அப்போது அங்கு வந்த பீமன், கோவிந்தா… கோபாலா!… என்று கூவினான். இந்த சத்தத்தில் புருஷா மிருகத்தின் தவம் கலைந்தது. கோபத்துடன் பீமனைத் துரத்தியது. உடனே பீமன், ஒரு ருத்திராட்சத்தைக் கீழே போட்டார். அந்த விநாடியே ருத்ராட்சம் சிவலிங்கமாக மாறியது. இதைக் கண்டதும் புருஷாமிருகம் சிவபூஜையை ஆரம்பித்தது. பீமன், கோவிந்தா, கோபாலா என்று மீண்டும் குரல் எழுப்பினார். புருஷாமிருகம் மீண்டும் பீமனைத் துரத்த, பீமன் மீண்டும் ருத்திராட்சத்தைக் கீழே போட்டார். அங்கும் அது ஒரு சிவலிங்கமாக மாறியது. அந்த இடமே திக்குறிச்சி.

ஓடி ஓடி பதினோரு இடங்களைக் கடந்து பன்னிரெண்டாவது இடமான திருநட்டாலம் என்ற இடத்தில் ருத்திராட்சத்தைப் போடும்போது, புருஷாமிருகம் பீமனைப் பிடித்தது. பீமனுடைய ஒரு கால் புருஷாமிருகத்தின் எல்லைக்குள்ளும், மற்றொரு கால் வெளியேயும் இருந்தன. உடனே பீமன் உன் எல்லையைக் கடந்து விட்டேன். என்னை விட்டுவிடு! என்றார். அப்போது, அங்கே வந்த தர்மரிடம் நியாயம் கேட்டார்கள். தம்பி சிக்கலில் இருப்பது தெரிந்தும், பாரபட்சம் பாராமல், ஒரு கால் பகுதி புருஷாமிருகத்தின் எல்லையில் இருப்பதால், பாதி உடல் புருஷா மிருகத்துக்கே! என்றார். அப்போது அங்கே தோன்றிய ஸ்ரீகிருஷ்ணர், பீமனுக்கும் புருஷாமிருகத்துக்கும், அரியும் சிவனும் ஒன்றே! எனும் தத்துவத்தை உணர்த்தினார். இருவரும் ஸ்ரீகிருஷ்ணரை வணங்கினர். தர்மரின் ராஜ சூய யாகம் நடக்க புருஷாமிருகம் உதவியது. இந்தப் புராண நிகழ்வைக் குறிக்கும் வகையில், மகா சிவராத்திரி நாளில், பன்னிரெண்டு சிவனுடைய திருக்கோயில்களை தரிசிக்க சிவாலய ஓட்டத்தை தொடங்குகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் சிவாலய ஓட்டத்தில் பங்கு கொள்ளும் அனைத்து பக்தர்களும், மகா சிவராத்திரிக்கு முன்பு வரும் தேய்பிறை ஏகாதசிக்கு ஒரு வாரம் முன்பிருந்தே தங்களுடைய விரதத்தை தொடங்கிவிடுகின்றனர். விரத நாட்களில் காலை முதல் மாலை வரை இளநீர் மற்றும் நுங்கு ஆகியவற்றையும், இரவு வேளையில் துளசி இலையும், துளசி தீர்த்தமும் அருந்துகின்றனர். சபரிமலைக்கு செல்பவர்களுக்கு எப்படி ஒரு குருசாமி வழிநடத்திச் செல்வாரோ, அது போலவே, சிவாலய ஓட்டத்திலும் ஒரு குருசாமி வழி நடத்திச் செல்வார். பக்தர்கள் ஓடி ஓடி வழிபடும் போது கோவிந்தா… கோபாலா என்று உச்சரித்துக்கொண்டே செல்வதற்கு ஒரு புராண கதை உள்ளது.

மகாசிவராத்திரியை முன்னிட்டு விரதம் இருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவி உடை அணிந்து, கையில் விசிறியும், திருநீறு பை சகிதமாக சிவராத்திரிக்கு முந்தைய தினம் வெள்ளிக்கிழமையன்று முஞ்சிறை மகாதேவர் கோயிலில் இருந்து சிவாலய ஓட்டத்தை தொடங்குகின்றனர். தொடர்ந்து திக்குறிச்சி மகாதேவர் கோயில், திற்பரப்பு மகாதேவர் கோயில், திருநந்திக்கரை சிவன் கோயில், பொன்மனை தீம்பிலான்குடி மகாதேவர் கோயில், திருப்பன்றிபாகம் சிவன் கோயில், கல்குளம் நீலகண்ட மகாதேவர் கோயில், மேலாங்கோடு சிவன் கோயில், திருவிடைக்கோடு மகாதேவர் கோயில், திருவிதாங்கோடு மகாதேவர் கோயில், திருப்பன்றிகோடு மகாதேவர் கோயில் ஆகிய கோயில்களை ஓடியே சென்று வணங்குவர். மகாசிவராத்திரி நாளில் கடைசியாக 12வது கோயிலான நட்டாலம் சங்கரநாராயணர் கோயிலில் சிவாலய ஓட்டம் நிறைவுபெறும். வயது முதிர்ந்தோரும், இயலாதவர்களும் ஆயிரக்கணக்கான வாகனங்களில் சென்று வழிபடுவதும் உண்டு.

இதில் குமரிமாவட்டம் மட்டுமல்லாது கேரளத்தைச் சேர்ந்த பக்தர்களும் அதிக அளவில் கலந்துகொள்வார்கள். இந்த ஆண்டுக்கான சிவாலய ஓட்டம் நாளை தொடங்குகிறது. நாளை மறுநாள் சிவராத்திரி தினத்திற்குள் குமரியின் வேறு, வேறு முனைகளில் இருக்கும் 12 கோயில்களையும் ஓடியே தரிசிக்க வேண்டும்.

சிவாலய ஓட்டத்திற்கு செல்லும் பக்தர்களின் வசதிக்காகவே குமரி மாவட்டத்தில் ஒவ்வொரு சிவராத்திரிக்கும் உள்ளூர் விடுமுறை விடப்படுகிறது.

இதுகுறித்து ஆட்சியர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ பிப்.18-ம் தேதி சிவராத்திரி அன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. அதற்கு மாற்றாக, பிப்.25-ம் தேதி சனிக்கிழமை வேலைநாளாக இருக்கும் ”எனக் கூறப்பட்டுள்ளது.

Leave your comments here...