சென்னை – பெங்களூரு சாலை பணிகள் முடியாமல் இருப்பதற்கு தமிழக அரசுதான் காரணம் – அமைச்சர் நிதின் கட்கரி விளக்கம்

இந்தியா

சென்னை – பெங்களூரு சாலை பணிகள் முடியாமல் இருப்பதற்கு தமிழக அரசுதான் காரணம் – அமைச்சர் நிதின் கட்கரி விளக்கம்

சென்னை – பெங்களூரு சாலை பணிகள் முடியாமல் இருப்பதற்கு தமிழக அரசுதான் காரணம் –  அமைச்சர் நிதின் கட்கரி விளக்கம்

சென்னை – பெங்களூரு சாலை பணிகள் முடியாமல் இருப்பதற்கு தமிழக அரசுதான் காரணம் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற மக்களவையில் மத்திய முன்னாள் அமைச்சரும் திமுக எம்.பி.யுமான தயாநிதி மாறன் கேள்வி நேரத்தின் போது பேசுகையில், ‘‘சமீபத்தில் நான் சென்னையில் இருந்து ராணிப்பேட்டைக்கு சென்று வந்தேன். அந்த நெடுஞ்சாலை மிகவும் பரிதாபகரமான நிலையில் இருந்தது. அதற்கு வேண்டிய நிலங்களை தமிழக அரசு ஒதுக்கிவிட்டது. ஆனால், இந்த விவகாரம் சாலை ஒப்பந்தக்காரர்களால் நீதிமன்ற வழக்காகி உள்ளது. இதனால், வெறும் 100 கி.மீ. தொலைவை கடக்க நான்கரை மணி நேரம் ஆனது. நீங்கள் செய்ய வேண்டிய பணிகளில், உங்கள் ஒப்பந்தக்காரர்கள் செய்யும் தாமதத்தை பேசி சரிசெய்து சாலை அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கேட்டுக் கொண்டார்.

அதற்கு மத்திய தரை வழிப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி அளித்த பதிலில் கூறியதாவது: சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் இடத்தை சமீபத்தில் நான் நேரில் பார்வையிட்டேன். இந்த விஷயத்தில் தமிழக அரசின் முழு ஒத்துழைப்பு எங்களுக்கு தேவை. சாலை பணிகள் மேற்கொள்ள தமிழக அரசின் பல்வேறு துறைகளின் அனுமதி தேவைப்படுகிறது. ஆனால், சில விஷயங்களில் 3 மாதம் அல்லது சற்று கூடுதல் மாதங்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது. குறிப்பாக பாறை பகுதிகளை வெடிவைத்து தகர்க்க தமிழக அரசின் அனுமதி தேவைப்படுகிறது. இதுபோன்ற சிக்கல்களால் தேசிய நெடுஞ்சாலையை எப்படி அமைக்க முடியும்?

இன்னும் கூட சாலைக்கான நிலம் கிடைப்பதில் சில பிரச்சினைகள் உள்ளன. சாலை பணிமேற்கொள்ள வழங்கப்பட்ட நிலத்துக்கு தமிழக அரசின் சுற்றுச்சூழல் அனுமதி கிடைப்பதிலும் சிக்கல் ஏற்படுகிறது. இது ஒரு பெரும் பிரச்சினையாக உள்ளது. இந்த பிரச்சினையை மக்களவையின் கவனத்துக்கு கொண்டு வந்த மைக்கு உங்களுக்கு (தயாநிதி மாறன்) நன்றி கூறுகிறேன். தமிழகத்தில் சாலை அமைக்க உங்களது (தமிழக அரசின்) முழு ஒத்துழைப்புதான் தேவை.

இந்த சாலை தொடர்பாக ஏற்கெனவே நான் பல முறை எம்.பி.யிடம் விளக்கம் அளித்துள்ளேன். அத்துடன் அவரது மாநில முதல்வருக்கும் பலமுறை கோரிக்கை வைத்துள்ளேன். சாலை பணியை இந்த ஆண்டு டிசம்பரில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. பணிகளை முடித்தால் சென்னை முதல் பெங்களூரு செல்ல வெறும் 2 மணி நேரம் மட்டுமே செலவாகும்.

தமிழக எல்லைக்கு வெளியே பெங்களூரு விரைவு நெடுஞ்சாலையின் மைசூரு வரையிலான பணிகள் வேகமாக நடைபெறுகின்றன. இது அடுத்த மாதம் முடிவடைய உள்ளது. அதனால், பெங்களூரு – மைசூரு நெடுஞ்சாலை திறப்பு விழாவுக்கும் பிரதமர் மோடியிடம் தேதி கேட்கப்பட்டுள்ளது. இந்த எக்ஸ்பிரஸ் சாலையில் பெங்களூரு – மைசூரு செல்ல ஒரு மணி நேரமே ஆகும்.

எனவே, தமிழகத்தில் அமையும் நெடுஞ்சாலையின் முக்கியத்துவமும் நான் அறிவேன். இதை விரைந்து முடிக்க நாங்கள் நூறு சதவிகிதம் தயாராக உள்ளோம். இதற்காக உங்கள் ஒத்துழைப்பு கிடைத்தால் எங்களுக்கு பேருதவியாக இருக்கும். தமிழகத்தின் அனைத்து எம்.பி.க்களும் தங்கள் தொகுதிகளில் அமையும் விரைவு தேசிய நெடுஞ்சாலை அமைப்பதில் முழுமையான ஒத்துழைப்பு நல்க வேண்டும். இவ்வாறு மத்திய தரை வழிப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி பதில் அளித்தார்.

Leave your comments here...