பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு : மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி கிராம மக்கள் பேரணி – பேச்சுவார்த்தை அடுத்து தற்காலிகமாக கைவிடப்பட்டது..!

தமிழகம்

பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு : மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி கிராம மக்கள் பேரணி – பேச்சுவார்த்தை அடுத்து தற்காலிகமாக கைவிடப்பட்டது..!

பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு : மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி கிராம மக்கள் பேரணி – பேச்சுவார்த்தை அடுத்து தற்காலிகமாக  கைவிடப்பட்டது..!

பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிரான மக்கள் பேரணி, பேச்சுவார்த்தையை அடுத்து தற்காலிகமாக கைவிடப்பட்டது. தமிழகத்தில் சர்வதேச விமான நிலையம் மீனம்பாக்கத்தில் செயல்பட்டு வருகிறது. இதை விரிவாக்கம் செய்வதற்கு தேவையான இடவசதி இல்லாததால், 2வது சர்வதேச விமான நிலையம் தொடங்க செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் 4 இடங்களை பரிந்துரை செய்தனர். அதில், காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அடுத்த ஏகனாம்புரம் கிராமத்தை மையப்பகுதியாக வைத்து சர்வதேச விமான நிலைய அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக, 13 கிராமங்களில் 5000 விளை நிலங்களை கைப்பற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில், ஏகனாபுரம், அக்கமாபுரம், மேளேரி, வளத்தூர், தண்டலம், நாகப்பட்டு, நெல்வாய், மகாதேவி மங்கலம் உள்ளிட்ட 13 கிராமங்களில் குடியிருப்பு, நீர்நிலைகளை கைப்பற்ற திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதால் விமான நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் கிராமத்தில் உள்ள வசதிபோல், மாற்று இடம் அளித்தாலும் எங்களுக்கு அமையாது என கூறி, குடியிருப்பு, நிலங்களை எடுப்பதை தவிர்த்துவிட்டு, வேறு பகுதிகளை தேர்ந்தெடுக்கவேண்டும் என ஆர்ப்பாட்டங்களும், போராட்டங்களும் நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில் இன்று 146வது நாளாக போராட்டம் தொடர்ந்த நிலையில் இந்த திட்டத்துக்கு தீவிரமாக எதிர்ப்பு தெரிவித்து 13 கிராம மக்கள் ஏகனாபுரத்தில் இருந்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணியாக செல்ல திட்டமிட்டிருந்தனர். இதற்கிடையில் 200க்கும் மேற்பட்ட போலீசார் இந்த பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் இரு நுழைவு வாயில்களிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு அலுவலகத்திற்கு வரும் அரசு பணியாளர்களின் அடையாள அட்டை,உடமைகள் போன்றவற்றை சோதனை செய்தப்பிறகு அவர்களை போலீசாத் உள்ளே அனுமதித்து வருகின்றனர். பேரணியை கைவிடக்கோரி காஞ்சிபுரம் எஸ்பி, டிஎஸ்பி, கோட்டாட்சியர், தாசில்தார், பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

நாளை காலை 9 மணிக்கு அமைச்சர்களை சந்தித்து உங்கள் கோரிக்கைகளை முன்வைத்து உங்களுக்கு சுமுக முடிவு எட்ட ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்திருக்கிறோம். நீங்கள் உங்கள் கோரிக்கைகளை அமைச்சரிடம் தெரிவியுங்கள், நீங்கள் நேரடியாக சென்று அமைச்சரிடம் பேச்சுவார்த்தை நடத்துங்கள் என்று கூறினார்கள். அமைச்சருடன் நாளை பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்வதாக அதிகாரிகள் உறுதியளித்ததை அடுத்து போராட்ட குழுவினர் போராட்டத்தை கைவிட முடிவு செய்தனர். இது குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய போராட்டக்குழு; முதல்வரை சந்தித்து எங்களது கருத்துகளை சொல்ல வேண்டும் என்பதே எங்களது பிரதான கோரிக்கை என்று கூறினர்.

Leave your comments here...