சபரிமலை ஐயப்பன் கோயிலில் முதியவர்கள் மற்றும் குழந்தைகள் தரிசனம் செய்ய தனிவரிசை..!

ஆன்மிகம்இந்தியா

சபரிமலை ஐயப்பன் கோயிலில் முதியவர்கள் மற்றும் குழந்தைகள் தரிசனம் செய்ய தனிவரிசை..!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் முதியவர்கள் மற்றும் குழந்தைகள் தரிசனம் செய்ய தனிவரிசை..!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் முதியவர்கள், குழந்தைகள் தரிசனம் செய்ய தனிவரிசை அமைக்கப்பட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல காலத்துக்கான நடை நவம்பர் 16ம் தேதி மாலை திறக்கப்பட்டது. அன்று முதல் இன்று வரை கட்டுக்கடங்காமல் பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.

கடந்த மாதம் முழுவதும் சராசரியாக தினமும் 65 ஆயிரம் முதல் 70 ஆயிரம் பக்தர்கள் வரை தரிசனம் செய்தனர். இந்த மாதம் பக்தர்கள் வருகை மேலும் அதிகரித்துள்ளது. தினமும் சராசரியாக 80 முதல் 90 ஆயிரம் பக்தர்கள் வரை தரிசனம் செய்து வருகின்றனர். சில நாட்களில் பக்தர்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்து 10 ஆயிரத்தையும் கடந்தது. இதனால் பக்தர்கள் 10 முதல் 12 மணி நேரம் வரை வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. சிலர் மயக்கமடைந்தனர். நெரிசலில் குழந்தைகள் உள்பட சிலருக்கு காயமும் ஏற்பட்டது. கடும் போக்குவரத்து நெருக்கடியும் ஏற்பட்டது. பக்தர்களை கட்டுப்படுத்தவும், உரிய வசதிகள் ஏற்படுத்தவும் திருவிதாங்கூர் தேவசம் போர்டு, போலீசுக்கு கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்பு கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில், தினசரி பக்தர்களின் எண்ணிக்கை 90 ஆயிரமாக குறைக்கவும், நிலக்கல்லில் கூடுதல் வாகனங்களை நிறுத்துவதற்கு வசதி ஏற்படுத்துவது உள்பட சிறப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டது. நிலக்கல்லில் தற்போது 8 ஆயிரம் வாகனங்கள் நிறுத்த வசதி உள்ளது. மேலும் 1000 வாகனங்களை நிறுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆன்லைன் தரிசன முன்பதிவு எண்ணிக்கை 90 ஆயிரமாக குறைக்கப்பட்டது. வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கு உணவு, குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த கட்டுப்பாடுகளால் சபரிமலையில் எந்த பலனும் ஏற்படவில்லை. ஆன்லைன் முன்பதிவு 90 ஆயிரமாக கட்டுப்படுத்தப்பட்ட போதிலும் சபரிமலையில் அதிக அளவிலான பக்தர்கள் தரிசனம் செய்தனர். நிலக்கல் உள்பட கேரளாவில் பல்வேறு இடங்களில் உடனடி முன்பதிவு வசதி இருப்பதால் அங்கு முன்பதிவு செய்தும் பக்தர்கள் வந்தது தான் இதற்கு காரணமாகும். கட்டுக்கடங்காமல் பக்தர்கள் குவிந்ததால் நேற்றும் 12 மணி நேரத்திற்கு மேல் பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர். நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்ததால் குழந்தைகள் உள்பட ஏராளமானோர் மயக்கமடைந்தனர்.

இந்நிலையில் சபரிமலை ஐயப்பன் கோயிலில் முதியவர்கள், குழந்தைகள் தரிசனம் செய்ய தனிவரிசை அமைக்கப்பட்டுள்ளது. சபரிமலையில் தினமும் பக்தர்கள் வருகை ஒரு லட்சத்தை தாண்டியதால் பாதுகாப்பு கருதி முதியவர்களுக்கும், குழந்தைகளுக்கும் தனிவரிசை அமைக்கப்பட்டுள்ளது. பக்தர்களின் எண்ணிக்கையை 90,000க்குள் கட்டுப்படுத்த வேண்டும் என்று காவல்துறை கண்டிப்புடன் தெரிவித்துள்ளது. சபரிமலை தேவசம்போர்டு அதிகாரிகளுடன் பேசி பக்தர்கள் வருகைக்கு கட்டுப்பாடு விதிக்க காவல்துறை திட்டமிட்டுள்ளது. 90,000 பக்தர்கள் ஏற்கனவே முன்பதிவு செய்துவிட்டதால் டிச.16, 19 தேதிகளுக்கு முன்பதிவு நிறுத்தப்பட்டது

Leave your comments here...