கடந்த 6 ஆண்டுகளில் எம்.பி., எம்எல்ஏக்களின் மீது 56 வழக்குகள் சிபிஐ வழக்குப்பதிவு..!

இந்தியா

கடந்த 6 ஆண்டுகளில் எம்.பி., எம்எல்ஏக்களின் மீது 56 வழக்குகள் சிபிஐ வழக்குப்பதிவு..!

கடந்த 6 ஆண்டுகளில் எம்.பி., எம்எல்ஏக்களின் மீது 56 வழக்குகள் சிபிஐ வழக்குப்பதிவு..!

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நாடாளுமன்றம் இன்று காலை கூடியது. இந்தக்கூட்டத்தொடர்தான், தற்போதைய நாடாளுமன்ற கட்டிடத்தில் நடைபெறுகிற கடைசிக்கூட்டத்தொடர் ஆகும். இந்தக் கூட்டத்தொடர் மொத்தம் 23 நாட்கள் நடக்கும். 17 அமர்வுகளுக்கு திட்டமிடப்பட்டுள்ளது. கூட்டத்தொடர் 29-ந் தேதி முடிவுக்கு வருகிறது.

இந்த கூட்டத்தொடரில் 16 மசோதாக்களை நிறைவேற்ற மத்திய பா.ஜ.க. கூட்டணி அரசு திட்டமிட்டுள்ளது. நிர்வாகத்தை பலப்படுத்துதல், வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துதல், பொறுப்புணர்வை அதிகரித்தல் மற்றும் பல மாநில கூட்டுறவுச் சங்கங்களில் தேர்தல் செயல்முறையை சீர்திருத்துதல் ஆகிய நோக்கங்களுடன் தற்போதுள்ள சட்டங்களை இணைத்து, பல மாநில கூட்டுறவு சங்கங்கள் (திருத்தம்) மசோதா அறிமுகப்படுத்தப்படுகிறது.

இந்த கூட்டத்தொடரில், கன்டோன்மென்ட் மசோதா, 2022-ஐ கொண்டு வரவும் மத்திய அரசு எண்ணி உள்ளது . இந்த மசோதா கன்டோன்மென்ட் என்று அழைக்கப்படுகிற ராணுவ கட்டுப்பாட்டு பகுதிகளில் அதிக ஜனநாயகம், நவீனமயமாக்கல் மற்றும் செயல்திறனை வழங்கும் நோக்கத்தில் கொண்டு வரப்படுவதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வன பாதுகாப்பு சட்ட திருத்த மசோதாவும், இந்த கூட்டத்தொடரில் கொண்டு வரப்பட உள்ளது.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் சுமுகமாக நடைபெற எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார். மறைந்த தலைவர்களுக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் இன்று அவை நடவடிக்கைகள் தொடங்கின.

இந்நிலையில், கடந்த 2017 முதல் 2022 வரை 6 ஆண்டுகளில் (நடப்பாண்டு அக்டோபர் 31 வரை) நாட்டில் எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் மீது 56 வழக்குகளை சிபிஐ பதிவு செய்துள்ளதாகவும் அவற்றில் 22 வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதாகவும் பணியாளர்கள் மற்றும் பயிற்சித் துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் இன்று மக்களவையில் அறிக்கையை தாக்கல் செய்தார். இதில் அதிகபட்சமாக ஆந்திராவில் 10 எம்.பி./எம்.எல்.ஏ.க்கள் மீது வழக்குகள் உள்ளன. கேரள, உத்தர பிரதேசத்தில் தலா 6 பேர் மீதும் தமிழகத்தில் 4 பேர் மீதும் சத்தீஸ்கார் 1, மேற்கு வங்காளம் 5, டெல்லி 3, பீகார் 3, மேகலாய 1, மணிப்பூர் 3, உத்தரகாண்ட் 1, அருணாச்சல பிரதேசம் 5, ஜம்மு காஷ்மீர் 2, மத்திய பிரதேசம் 2, மராட்டியம் 1, லட்சத்தீவு 1 என மொத்தம் 56 பேர் மீது வழக்குகள் உள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave your comments here...