கோவை கார் வெடிப்பு சம்பவம் ஒரு திட்டமிட்ட தாக்குதல் : அரபி மொழியில் இருந்த வாசகம் -முபின் ஐ.எஸ் உடன் தொடர்பு?

இந்தியாதமிழகம்

கோவை கார் வெடிப்பு சம்பவம் ஒரு திட்டமிட்ட தாக்குதல் : அரபி மொழியில் இருந்த வாசகம் -முபின் ஐ.எஸ் உடன் தொடர்பு?

கோவை கார் வெடிப்பு சம்பவம் ஒரு திட்டமிட்ட தாக்குதல் : அரபி மொழியில் இருந்த வாசகம் -முபின்  ஐ.எஸ் உடன் தொடர்பு?

கோவை கோட்டைமேட்டில் கடந்த 23-ந்தேதி கார் சிலிண்டருடன் வெடித்த சம்பவம் குறித்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் தினமும் புதுப்புது தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன.

இந்த நிலையில் முபின் தனது மனைவியிடம் வெடி பொருட்களை பழைய துணி என கூறி ஏமாற்றிய தகவலும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. கார் வெடிப்பு சம்பவத்தில் இறந்த முபின் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்துள்ளார். படித்து முடித்ததும் பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தார். அப்போது வீட்டில் அவருக்கு திருமணத்திற்கு பெண் பார்த்த போது, ஒரு மாற்றுத்திறனாளி பெண்ணையே நான் திருமணம் செய்து கொள்வேன் என்றார். அதன்படி கடந்த 4 வருடங்களுக்கு முன்பு கோவை அல் அமீன் காலனியை சேர்ந்த மாற்றுத்திறனாளி பெண்ணான நஸ்ரத்தை(23) முபின் திருமணம் செய்து கொண்டார். பின்னர் கோட்டைமேடு பகுதியில் மனைவியுடன் வசித்து வந்த அவர் அங்குள்ள புத்தக கடையில் வேலைக்கு சேர்ந்தார். இவருக்கு 2 மற்றும் 4 வயதில் 2 குழந்தைகள் உள்ளனர். திருமணத்திற்கு பிறகு முபின் தனது தாய், தந்தை மற்றும் உறவினர்கள் யாரிடமும் பேசுவதில்லை.

இந்த நிலையில் திடீரென தான் வேலை பார்த்து வந்த புத்தக கடை வேலையை முபின் விட்டு விட்டார். இதுகுறித்து நஸ்ரத் கணவரிடம் கேட்டதற்கு, தனக்கு நெஞ்சுவலி இருப்பதாகவும் தன்னால் வேலை பார்க்க முடியவில்லை என்றும் தெரிவித்து வீட்டில் இருந்தார். ஆனால் கடந்த சில மாதங்களாக முபின் வீட்டில் இருக்காமல் வெளியில் சென்றதால் ஏதாவது வேலை பார்க்கிறீர்களா என விசாரித்துள்ளார். அப்போது தான் தேன் மற்றும் நறுமண பொருட்கள் விற்பனை செய்வதாகவும், நாட்டு மருந்து கடையில் வேலை பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார். கார் வெடிப்பு சம்பவம் நடப்பதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு முபின் தனது மனைவியிடம் நாம் வேறு வீட்டிற்கு செல்லலாம் என கூறியுள்ளார். அதன்படி கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே வீடு பார்த்து மனைவி, குழந்தைகளுடன் குடியேறி உள்ளார். அப்போது முபின் வீட்டிற்குள் 4 பெட்டிகளை எடுத்து வந்தார்.

இதனால் நஸ்ரத்துக்கு சந்தேகம் ஏற்படவே எதற்காக இந்த 4 பெட்டிகள். அதில் என்ன உள்ளது என கேட்டுள்ளார். அதற்கு முபின், இந்த பெட்டிகளில் பழைய துணிகள் தான் உள்ளது என கூறியுள்ளார். ஆனால் கார் வெடிப்பு சம்பவம் நடந்த பிறகே அந்த பெட்டிகளில் வெடி மருந்து இருந்த தகவல் நஸ்ரத்துக்கு தெரிய வந்துள்ளது. கடந்த மாதம் 20-ந்தேதி, முபினின் மனைவி நஸ்ரத்துக்கு வயிற்றுவலி ஏற்பட்டதால் குழந்தைகளுடன் தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். முபின் எப்போதும் யாரிடமும் பேசாமல் தனியாகவே இருப்பார். மேலும் எந்நேரமும் செல்போனில் ஏதாவது பார்ப்பதை வாடிக்கையாக வைத்துள்ளார்.

ஆனால் சம்பவம் நடப்பதற்கு 2 நாட்களுக்கு முன்பு நஸ்ரத்தின் வீட்டிற்கு சென்ற முபின் வழக்கத்திற்கு மாறாக அனைவரிடமும் சகஜமாக பேசியுள்ளார். மேலும் குடும்பத்தினர் அனைவருடன் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டும் உள்ளார். அன்று மாலையே தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வெளியில் சென்று உள்ளார். அப்போது குழந்தைகளுக்கு பிடித்த ஐஸ்கிரீம் உள்ளிட்டவற்றையும் வாங்கி கொடுத்துள்ளார்.

பின்னர் மனைவியை அவரது தாய் வீட்டில் விட்டு, முபின் மட்டும் தனது வீட்டிற்கு வந்துள்ளார். சம்பவம் நடப்பதற்கு 3 நாட்களுக்கு முன்பு தண்ணீரை சேமிப்பதற்கு டிரம் ஒன்றையும் வாங்கி கொடுத்துள்ளார். அப்போது 3 நாட்களுக்கு தண்ணீரை சேமித்து வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார். 22-ந் தேதி இரவு நஸ்ரத் கணவருக்கு எப்போது வீட்டிற்கு வருவாய் என மெசேஜ் அனுப்பினார். அதற்கு நாளை வருவதாக கூறியுள்ளார். அப்போது நஸ்ரத் குழந்தைகள் உன்னை தேடுகின்றனர். வீடியோ காலிலாவது பேசு என மெசேஜ் அனுப்பியதாக தெரிகிறது. ஆனால் அதன்பின்னர் முபின் போனை எடுக்கவில்லை. தொடர்ந்து முயற்சி செய்தும் முபினை தொடர்பு கொள்ள முடியவில்லை என தெரிகிறது. இதுவே முபின் அவரது மனைவியிடம் கடைசியாக பேசியது. ஆனால் தற்போது வரை முபினுக்கு என்ன நடந்தது என்று அவரது குழந்தைகளுக்கு தெரியவில்லை.

மேலும் முபின் சம்பவத்தை அரங்கேற்றுவதற்கு முன்பு வீட்டிற்கு சென்று உடல் முழுவதும் முடிகளை மழித்து அகற்றி சேவ் செய்து விட்டு, தான் அணிந்திருந்த சட்டையை கழற்றி விட்டு வேறு சட்டை அணிந்து கொண்டு காரில் வெடிபொருட்களுடன் சதி திட்டத்தை நிறைவேற்ற புறப்பட்டதும் தெரியவந்தது. பொதுவாக தற்கொலைப்படை தாக்குதல் நடத்துபவர்கள் தான் தங்கள் திட்டத்தை அரங்கேற்றுவதற்கு முன்பு உடல் முழுவதும் உள்ள முடிகளை முழுமையாக மழித்து சேவ் செய்வர். முபினும் அது போன்று செய்துள்ளது போலீசாருக்கு பல்வேறு சந்தேகங்களை எழுப்பி உள்ளது. இதுதொடர்பாகவும் போலீசார் தீவிரமாக விசாரிக்கின்றனர்.

இந்த நிலையில் ஜமேஷா முபின் வீட்டில் சோதனை நடத்தியபோது அவரது வீட்டில் இருந்து ‘சிலேட்’ ஒன்றை போலீசார் கைப்பற்றி உள்ளனர். அந்த சிலேட் தொடர்பான தகவல்களும் தற்போது வெளியாகி உள்ளன. அந்த சிலேட்டில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் வாசகங்கள் இடம்பெற்றிருந்தன. அதில் அரபு மொழியில் சில வாசகங்கள் இருந்தன. மேலும் தமிழ்மொழியில் எழுதப்பட்டிருந்த வாசகத்தில், ‘அல்லாவின் இல்லத்தின் மீது கைவைத்தால் வேரறுப்போம்’ என்று கூறி இருந்தார். மேலும் முபின் வெள்ளைத்தாளில் எழுதிய வாசகங்களையும் போலீசார் கைப்பற்றினார்கள்.

அதில் ஒரு தாளில், ‘ஜிகாத்தின் கடமைக்கான அழைப்பு’ என்று எழுதி இருந்தார். மேலும் ‘புனிதப் போரை நடத்துவது இளைஞர்கள், சிறுவர்கள் மற்றும் முதியவர்களின் கடமை’ என்றும் எழுதி இருந்தார். இந்த வாசகங்கள் ஜமேஷா முபின் தனது கைப்பட எழுதியுள்ளதாக தெரிகிறது. எனவே முபின் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்தவர் என்பது உறுதியாகி உள்ளது. இதற்கிடையே கோவையில் தடைசெய்யப்பட்ட இயக்கத்தை சேர்ந்தவர்கள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் என சந்தேகப்படும் 900 பேரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். அவர்களின் பெயர் விவரங்கள் கொண்ட பட்டியலையும் சேகரித்துள்ளனர். அந்த பட்டியலை வைத்து அவர்களை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Leave your comments here...