குமரியில் ஆசிட் கலந்த குளிர்பானத்தை அருந்தி பள்ளி மாணவன் உயிரிழந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

தமிழகம்

குமரியில் ஆசிட் கலந்த குளிர்பானத்தை அருந்தி பள்ளி மாணவன் உயிரிழந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

குமரியில் ஆசிட் கலந்த குளிர்பானத்தை அருந்தி பள்ளி மாணவன் உயிரிழந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

குளிர்பானத்தில் ஆசிட் கலந்து கொடுத்ததில் உயிருக்கு போராடிய பள்ளி மாணவன் 22 நாள் சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று உயிரிழந்தான்.

குமரி மாவட்டம் களியக்காவிளை அருகே மெதுகும்மல் பகுதியை சேர்ந்தவர் சுனில். இவரது மகன் அஸ்வின் (11). அதங்கோடு தனியார் பள்ளியில், 6ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த மாதம் 24ம்தேதி, இந்த பள்ளியில் காலாண்டு தேர்வு முடிந்து விடுமுறை அளிக்கப்பட்டது. திடீரென 26ம் தேதி அஸ்வினுக்கு காய்ச்சல் வந்தது. உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் காய்ச்சல் குணமாகவில்லை. 2, 3 நாட்களில் காய்ச்சல் அதிகரித்தது.

மேலும் அஸ்வினுக்கு வயிற்று வலி, வாந்தியும் ஏற்பட்டது. ஜீரண கோளாறு, மூச்சு திணறலும் ஏற்பட்டு மிகவும் சிரமப்பட்டு வந்தான். நாக்கு பகுதியும் வெந்தது போல் மாறியது. உடனடியாக நெய்யாற்றின்கரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுவனுக்கு வயிற்று பகுதியை ஸ்கேன் செய்து பார்த்தனர். அப்போது வாயில் இருந்து குடல் வரை வெந்து இருந்தது தெரிய வந்தது. ஆசிட் போன்று ஏதோ திரவத்தை குடித்ததால் இந்த பாதிப்பு வந்திருக்கலாம் என டாக்டர்கள் கூறினர். மேலும் சிறுநீரகமும் செயல் இழந்த நிலையில் இருந்தது. தொடர்ந்து டயாலிசிஸ் செய்யப்பட்டது. மாணவனிடம் கேட்ட போது, தேர்வு முடிந்த அன்று பள்ளியின் கழிவறைக்கு சென்றதாகவும், அங்கு நின்ற மற்றொரு மாணவன், வலுக்கட்டாயமாக குளிர்பானத்தை கொடுத்து குடிக்க செய்ததாகவும் கூறினான். அந்த குளிர்பானத்தில் தான் ஆசிட் கலந்து இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இது தொடர்பாக களியக்காவிளை போலீசார் வழக்கு பதிந்து பள்ளியில் உள்ள சிசிடிவி கேமிராக்களை ஆய்வு செய்தனர். அதில் எந்த வித துப்பும் கிடைக்காத நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. மற்றும் ஊர் பொதுமக்கள் இதுகுறித்து விசாரணை நடத்தும்படி கலெக்டர், எஸ்பிக்கு மனு அளித்தனர். இந்நிலையில் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருந்த அஸ்வின், 22 நாளுக்கு பிறகு நேற்று மாலை பரிதாபமாக இறந்தான். இதையடுத்து மருத்துவமனையில் இருந்த அஸ்வினின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். மாணவன் அஸ்வினுக்கு ஆசிட் கலந்த குளிர்பானத்தை கொடுத்தது யார்? என்பது பற்றி இன்னும் தெரியாத நிலையில், அஸ்வின் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் ஆசிட் கலந்த குளிர்பானத்தை அருந்தி பள்ளி மாணவன் உயிரிழந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Leave your comments here...