ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கிய அறநிலையத்துறை பெண் அதிகாரி கைது – லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி

தமிழகம்

ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கிய அறநிலையத்துறை பெண் அதிகாரி கைது – லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி

ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கிய அறநிலையத்துறை பெண் அதிகாரி கைது – லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி

கோவில் திருப்பணிகள் மேற்கொள்ள அனுமதி வழங்க ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கிய அறநிலையத்துறை பெண் அதிகாரியை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

திருச்சி மாவட்டம் குணசீலத்தில் அமைந்துள்ளது பிரசன்ன வெங்கடாஜலபதி கோவில். இந்த கோவில் அறங்காவலர்கள் குழுவினர் கோவில் திருப்பணிகள் மேற்கொள்ள திட்டமிட்டனர். இதையடுத்து கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர் பிச்சுமணி ஐயங்கார், இந்து அறநிலையத்துறையில் அனுமதி கோரி விண்ணப்பித்திருந்தார். இதில் கோவில் திருப்பணிகளுக்கு அனுமதி வழங்கும் பணிகளை மாநில அளவிலான நிபுணர் குழு பரிசீலித்து வழங்கி வருகிறது. இந்த குழுவில் இந்து அறநிலையத்துறையில் பணியாற்றும் அலுவலர் தலைமையில் பலர் உறுப்பினர்களாக உள்ளனர்.

இது தொடர்பாக அந்த நிபுணர் குழு கடந்த ஜூன் மாதம் 2-ந்தேதி கோவிலில் ஆய்வு செய்தனர். இந்த நிபுணர் குழுவில் திண்டுக்கல் மாவட்டம் பழனி ராஜா நகர் லட்சுமிபுரம் பகுதியை சேர்ந்த தொல்லியல் துறை வல்லுனரான மூர்த்தீஸ்வரி உள்ளார். இவர் ஓய்வு பெற்ற அறநிலையத்துறை அதிகாரி ஆவார். இவர் கடந்த 12-ந்தேதி மீண்டும் கோவிலுக்கு வந்து அறங்காவலர் குழுவினரை சந்தித்து ஆய்வு அறிக்கை வழங்க ரூ.10 லட்சம் கேட்டுள்ளார். அதற்கு பிச்சுமணி ஐயங்கார் ரூ.10 லட்சம் அதிகமாக உள்ளது என்றார். அதற்கு மூர்த்தீஸ்வரி, ரூ.5 லட்சம் தாருங்கள், ஆய்வறிக்கை வழங்குகிறேன் என்று கூறினார்.

அதற்கு முன்பணமாக ரூ.1 லட்சம் கொடுக்குமாறும் பிச்சுமணி ஐயங்காரிடம் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத அவர் திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு மணிகண்டனிடம் புகார் அளித்தார். அதன் பேரில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரின் ஆலோசனைபடி திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு தனியார் விடுதியில் வைத்து மூர்த்தீஸ்வரியிடம் ரூ.1 லட்சம் கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த போலீஸ் துணை சூப்பிரண்டு மணிகண்டன், இன்ஸ்பெக்டர் சக்திவேல், சேவியர் மேரி உள்ளிட்ட போலீசார் மூர்த்தீஸ்வரியை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave your comments here...