முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ரூ.50 லட்சம் திட்டத்தில் முறைகேடு – மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு..!

அரசியல்

முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ரூ.50 லட்சம் திட்டத்தில் முறைகேடு – மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு..!

முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ரூ.50 லட்சம் திட்டத்தில் முறைகேடு – மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு..!

திண்டுக்கல்லின் அடையாளமான வரலாற்று புகழ் வாய்ந்த மலைக்கோட்டையை பசுமையாக்குவதாக கூறி ரூ50 லட்சம் மோசடி செய்ததாக முன்னாள் வனத்துறை அமைச்சரும் அதிமுக இபிஎஸ் அணியின் அக்கட்சி பொருளாளருமான திண்டுக்கல் சீனிவாசன் மீது மாவட்ட ஆட்சியரிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் புகார் அளித்துள்ளனர்.

கடந்த அதிமுக ஆட்சியின் போது தமிழக வனத்துறை அமைச்சராக திண்டுக்கல் சீனிவாசன் இருந்து வந்தார். அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் உத்தரவின் பேரில் வரலாற்று சிறப்புமிக்க மற்றும் சுதந்திர போராட்டத்தில் தொடர்புடைய திண்டுக்கல் மலைக்கோட்டையை, பசுமைமிக்கதாக மாற்ற அப்போதைய அதிமுக அரசு முடிவு செய்தது.

இதற்காக திண்டுக்கல் மலைக்கோட்டையின் மேலே உள்ள பாறைகளில் வளரக்கூடிய அத்தி, அரசு, ஆல், இச்சி, கல் இச்சி உள்ளிட்ட பல வகை மரங்களை நடவு செய்து அதனை சொட்டு நீர் பாசனம் மூலம் வளர்க்க முடிவு செய்து கடந்த 2017-18ம் ஆண்டு சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை மானிய கோரிக்கையின் போது ஒரு மரம் வளர்க்க ஆயிரம் வீதம் 5,000 மரங்களை நடவு செய்து மரங்களை வளர்க்க 50 லட்ச ரூபாய் செலவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக மானிய கோரிக்கையின் போது அறிவிக்கப்பட்டது.

அதன்படி கடந்த 2018-ம் ஆண்டு திண்டுக்கல் மலைக்கோட்டையில் அத்தி, அரசு ஆல், இச்சி, கல்இச்சி போன்ற மரங்கள் பாறையில் இடுக்குகளில் நடவு செய்யப்பட்டது. இதற்கான விழாவில் அப்போதைய வனத்துறை அமைச்சர் சீனிவாசன் கலந்து கொண்டு மரங்களை நட்டார்.பாறைகளில் நடப்பட்ட மரச் செடிகளுக்கு சொட்டுநீர் பாசனம் மூலம் தண்ணீர் விட ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் மரங்கள் நடப்பட்டதோடு சரி. அதன்பின்பு மரத்தினை வளர்க்க வனத்துறையினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் 5,000 மரங்கள் நடப்பட்ட இடத்தில் தற்பொழுது ஒரு மரம் கூட வளரவில்லை.

இதுகுறித்து பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் சச்சிதானந்தம், ‘முன்னாள் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தொகுதியில் ஒரு நல்ல திட்டத்தை முறையாக செயல்படுத்தவில்லை. மலைக்கோட்டையில் 5,000 மரக்கன்று நடப்படவில்லை. குறைவாக நடப்பட்ட மரக்கன்றுகளும் முறையாக பராமரிக்கப்படவில்லை.

ஆகவே இந்த மோசடியில் அப்போதைய வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனுக்கும் தொடர்பு உள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு முறையான விசாரணை நடத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளோம். மனுவை உடனடியாக தமிழக முதலமைச்சருக்கு அனுப்புவதாக மாவட்ட ஆட்சியர் விசாகம் தெரிவித்தார்.

Leave your comments here...