அமைச்சர் கே.எஸ்.எஸ்.ராமச்சந்திரன் மீது டிஜிபி அலுவலகத்தில் குறவர் சமுதாய மக்கள் தீண்டாமை புகார்..!

தமிழகம்

அமைச்சர் கே.எஸ்.எஸ்.ராமச்சந்திரன் மீது டிஜிபி அலுவலகத்தில் குறவர் சமுதாய மக்கள் தீண்டாமை புகார்..!

அமைச்சர் கே.எஸ்.எஸ்.ராமச்சந்திரன் மீது டிஜிபி அலுவலகத்தில்  குறவர் சமுதாய மக்கள் தீண்டாமை புகார்..!

வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ராமச்சந்திரன் தீண்டாமை செயலில் ஈடுபட்டதாகவும் அவர்மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறவர் சமுதாய மக்கள் சார்பாக டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழக டி.ஜி.பி அலுவலகத்தில் வனவேங்கைகள் கட்சியின் தலைவர் இரணியன் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.

அதில், குறவர் சமுதாயத்திற்கு சமூக பிரதிநிதித்துவம் வழங்குவது தொடர்பாக மனு ஒன்றை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ராமச்சந்திரனிடம் நேரடியாக கொடுப்பதற்காக அவரது வீட்டிற்கு சென்றதாக குறிப்பிட்டுள்ளார். அங்கு அமைச்சர் தங்களை நாற்காலியில் அமர வைக்காமல் ஒருமையில் பேசியதாக தெரிவித்துள்ளார். மேலும் தான் அமைச்சரை நெருங்கி மனுவின் சாராம்சத்தை கூற முயன்ற போது, தள்ளியே நின்று பேசு என தீண்டாமை செயலில் ஈடுபட்டதாகவும் இரணியன் புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார். எனவே தங்களின் சாதியை காரணம் காட்டி தீண்டாமை செயலில் ஈடுபட்ட அமைச்சர் மீது தீண்டாமை வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என இரணியன் அந்த புகாரில் தெரிவித்துள்ளார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சந்திக்க வரும் பழங்குடியின சமூகத்தைச் சார்ந்தவர்களை (என்னை) நிற்க வைத்து கேள்வி கேட்பதும் ஒருவகையான தீண்டாமை தான். அங்கு நாற்காலிகள் இருக்கின்றது. நாற்காலிகள் இருந்தும் என்னை அமர வைக்காததற்கு என்ன காரணம் ? நான் குறவன் என்ற சமூகத்தை சார்ந்தவன் என்பதற்காகவா? இல்ல ஒடுக்கப்பட்ட பழங்குடி சமூகத்தைச் சார்ந்தவன் என்பதற்காகவா? இதே ஒரு பிற்படுத்தப்பட்ட சமூகத்திலையோ அல்லது அவர் சார்ந்த சமூகத்திலையோ, யாரேனும் வந்தால் கண்டிப்பாக உட்கார வைப்பதற்கு வாய்ப்பு கொடுத்து இருப்பாரா? கொடுத்திருக்க மாட்டாரா ?
எங்களுடைய சமூகத்தின் அடையாளத்தை குறிப்பிட்ட பிறகுதான் அவர் கால் மேல், கால் போட்டு பேசினார். அதுவே எங்களுக்கு மிகப்பெரிய தலைகுனிவை ஏற்படுத்தி விட்டது. நாங்கள் கோரிக்கை மனுவை கொடுக்க சென்றோம். மனு கொடுக்க வந்தால் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் இப்படித்தான் அனுசரிப்பார்களா ? பேசுவாங்களா ? அதைத்தான் கேட்கின்றேன்.

நாங்கள் அதிகாரத்தில் இல்லாததுனால வலிமையற்ற மனிதர்களாக இருப்பதால் எப்படி வேணாலும் இருக்கலாம் ? எப்படி வேணாலும் பேசலாம் ? என்ற நிலைப்பாடும் ஒரு தீண்டாமை தான். அதுதான் நாங்கள் வருத்தப்படுறோம் என இரணியன் செய்தியாளரை சந்தித்து பேட்டி அளித்தார்.

Leave your comments here...