அதிவேக பைக் பயணம்: நீதிமன்றத்தில் சரண் – யூடியூபர் டி.டி.எப்.வாசனுக்கு ஜாமின்..!

தமிழகம்

அதிவேக பைக் பயணம்: நீதிமன்றத்தில் சரண் – யூடியூபர் டி.டி.எப்.வாசனுக்கு ஜாமின்..!

அதிவேக பைக் பயணம்: நீதிமன்றத்தில் சரண் – யூடியூபர் டி.டி.எப்.வாசனுக்கு ஜாமின்..!

Twin throttlers என்ற யூடியூப் சேனலை கோவையை சேர்ந்த டிடிஎப் வாசன் என்ற இளைஞர் நடத்தி வருகிறார். இவர் விலை உயர்ந்த பைக்கை கொண்டு சாகசங்கள் செய்து அதனை வீடியோவாக பதிவிட்டு பிரபலமடைந்துள்ளார்.

கோவையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர், பிரபல யூடியூபரான டி.டி.எஃப்.வாசன், கிட்டத்தட்ட 152 கிலோமீட்டர் வேகத்தில் தான் பைக் ஓட்டுவதையும், இவருக்கு பின்னால் அமர்ந்துள்ள மற்றொரு யூடியூபரான ஜி.பி.முத்து ஹெல்மெட் அணியாமல் பயத்தில் அலறுவதையும் வீடியோ எடுத்து வெளியிட்டிருந்தார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. அதே நேரம் சர்ச்சையையும் ஏற்படுத்தியது. இந்த வீடியோ காட்சிகளை யூடியூபில் இருந்து நீக்குவதுடன் இதுபோன்ற வீடியோ வெளியிடுபவர்கள் மீதும் காவல் துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மற்றவர்களுக்கு முன்னோடியாக இருக்க வேண்டுமே தவிர தவறான செயல்களை பிரபலங்கள் ஊக்குவிப்பதைப்போல நடந்து கொள்ளக் கூடாது என பலரும் கருத்து தெரிவித்து வந்தனர்.

இதனையடுத்து கோவை போத்தனூர் காவல் நிலையத்தில் டி.டி.எஃப் வாசன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
அதிவேகமாக வாகனத்தை இயக்கியதற்காகவும், மனித உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் இருசக்கர வாகனத்தை இயக்கியதற்காகவும் போத்தனூர் காவல்துறையினர் டி.டி.எஃப் வாசன் மீது வழக்குப் பதிவு செய்தனர். இந்த சம்பவம் குறித்து அவர் அண்மையில் மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் சூலூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சிந்தாமணிபுதூர் பகுதியில் பாலக்காடு சாலையில் அதிவேகமாக வாகனம் ஓட்டியதால் 3 பிரிவுகளில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் பொது இடத்தில் அஜாக்கிரதையாக வாகனம் ஓட்டுதல் என்ற பிரிவிலும், மோட்டார் வாகன சட்டப்படி பின் இருக்கையில் அமரும் நபர் ஹெல்மெட் அணியாதது, ஆபத்தை விளைவிக்கும் வகையில் வாகனம் ஓட்டுதல் ஆகிய 2 பிரிவு என மொத்தம் 3 பிரிவுகளில் டிடிஎப் வாசன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து போலீசார் டிடிஎப். வாசனை தேடி வந்த நிலையில், நேற்று மதுக்கரை உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சரவணன் முன்பு அவர் சரணடைந்தார். நேற்று காலை 10.30 மணிக்கு சரணடைந்த வாசன், மாலை 5.30 வரை நீதிமன்ற கூண்டில் அமர்ந்திருந்தார்.இரண்டு நபர்களின் உத்தரவாதம் கொடுத்த பின் மாலையில் அவர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். போத்தனூர் வழக்கில் சரணடைந்த நிலையில், சூலூர் காவல் நிலையத்தில் பதியப்பட்ட வழக்கில் வருகின்ற வெள்ளிக்கிழமை டிடிஎப். வாசன் ஆஜராக இருப்பதாக காவல் துறை வட்டாரம் தகவல் கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave your comments here...