தீபாவளி பண்டிகை : அரசு விரைவுப் பேருந்துகளில் நாளை முதல் முன்பதிவு தொடக்கம்..!

தமிழகம்

தீபாவளி பண்டிகை : அரசு விரைவுப் பேருந்துகளில் நாளை முதல் முன்பதிவு தொடக்கம்..!

தீபாவளி பண்டிகை : அரசு விரைவுப் பேருந்துகளில் நாளை முதல்  முன்பதிவு தொடக்கம்..!

தீபாவளி பண்டிகை அடுத்த மாதம் 24-ந்தேதி (திங்கட்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. தொழில் மற்றும் வேலைவாய்ப்புக்காக சென்னை மற்றும் புறநகர் பகுதியில் வசித்து வரும் லட்சக்கணக்கான மக்கள் தீபாவளியை கொண்டாட பயணத்தை திட்டமிட்டு உள்ளனர்.

தீபாவளிக்கு முந்தைய 2 நாட்கள் (சனி, ஞாயிறு) அரசு விடுமுறையாக இருப்பதால் அக்டோபர் 21-ந் தேதியே பயணத்தை தொடர வாய்ப்பு அதிகம் உள்ளது. ரயில்களில் இடங்கள் அனைத்தும் நிரம்பி காத்திருப்போர் பட்டியல் நீடித்து வருகிறது. சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லக் கூடிய எல்லா ரெயில்களிலும் அனைத்து வகுப்புகளும் நிரம்பி விட்டன. சிறப்பு ரெயில்களிலும் இடங்கள் காலி இல்லை. கூடுதலாக சிறப்பு ரெயில்களை இயக்குவதற்கும் தெற்கு ரெயில்வே திட்டமிட்டு வருகிறது.

இந்த நிலையில் அரசு விரைவு பஸ்களில் தீபாவளி முன்பதிவு நாளை (21-ந் தேதி) முதல் தொடங்குகிறது. 30 நாட்களுக்கு முன்னதாக அரசு விரைவு பஸ்களுக்கு முன்பதிவு செய்யக் கூடிய வசதி உள்ளது. அதன்படி அக்டோபர் 22-ந்தேதி பயணம் செய்ய நாளை (புதன்கிழமை) முன்பதிவு தொடங்குகிறது. www.tnstc.com என்ற இணைய தளம் வழியாக முன்பதிவு செய்து நெரிசல் இல்லாமல் பயணம் செய்யலாம்.

சென்னையில் இருந்து பல்வேறு நகரங்களுக்கும் பிற பகுதியில் இருந்து சென்னை வருவதற்கும் முன்பதிவு செய்யப்படுகிறது. கோயம்பேட்டில் இருந்து நெல்லை, தூத்துக்குடி, திருவனந்தபுரம், கன்னியாகுமரி, மதுரை, தென்காசி மற்றும் கும்ப கோணம், தஞ்சாவூர், கோவை உள்ளிட்ட பல் வேறு பகுதிகளுக்கு செல்லக்கூடிய 400-க்கும் மேற்பட்ட பஸ்கள் முன்பதிவு செய்யும் திட்டத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் முதலில் 600-க்கும் மேற்பட்ட அரசு விரைவு பஸ்களுக்கு முன்பதிவு செய்ய இணைக்கப்பட்டுள்ளன. முன்பதிவு அதிகம் ஆவதை தொடர்ந்து மேலும் பஸ்கள் முன்பதிவுக்குள் கொண்டு வர அரசு விரைவு போக்குவரத்து கழகம் திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து விரைவு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:- அரசு விரைவு பஸ்களுக்கு 30 நாட்களுக்கு முன்பு முன்பதிவு செய்யும் வசதி நடைமுறையில் உள்ளது. அதன்படி தீபாவளி பயணத்திற்கான முன்பதிவு நாளை முதல் தொடங்குகிறது. பயணிகளின் முன்பதிவை பொறுத்து மேலும் 1000-க்கும் மேற்பட்ட பஸ்களுக்கு முன்பதிவு செய்யப்படும். விழுப்புரம், சேலம், கும்பகோணம், கோவை, மதுரை, திருநெல்வேலி ஆகிய 6 போக்குவரத்து கழகங்களில் இருந்து பஸ்கள் பெறப்பட்டு முன்பதிவில் இணைக்கப்படும்.

தமிழகத்தின் எந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டுமானாலும் அரசு விரைவு பஸ் இணையதளத்தின் மூலம் முன்பதிவு செய்து நெரிசலின்றி மகிழ்ச்சியுடன் பயணிக்கலாம். அரசு விடுமுறை நாட்களை தொடர்ந்து தீபாவளி வருவதால் 3 நாட்கள் பண்டிகை கொண்டாட்டத்திற்காக பயணம் மேற்கொள்ள வாய்ப்பு உள்ளது. அதனால் முன்பதிவு அதிகரிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கிறோம். அடுத்த மாதம் இறுதியில் தான் பெரும்பாலானவர்கள் முன்பதிவு செய்ய ஆர்வம் காட்டுவார்கள். மேலும், தீபாவளிக்கு முந்தைய 2 நாட்களுக்கு முன்பு கோயம்பேட்டில் நேரடி டிக்கெட் சிறப்பு கவுண்டர்களும் திறக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Leave your comments here...