இனி டோல்கேட் இருக்காது..! மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தகவல்..!

இந்தியா

இனி டோல்கேட் இருக்காது..! மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தகவல்..!

இனி டோல்கேட் இருக்காது..! மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தகவல்..!

இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் சுங்கச்சாவடிகளுக்குப் பதிலாக வாகனங்களில் உள்ள பதிவு எண்ணைக் கொண்டு பயணிகளின் வங்கிக்கணக்கில் இருந்து கட்டணத்தை எடுத்துக்கொள்ளக்கூடிய தானியங்கி முறையிலான டோல்கேட்கள் அமைக்கப்பது குறித்து மத்திய சாலை போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற இந்தோ –அமெரிக்க வர்த்தக சபையின் 19ஆவது இந்திய – அமெரிக்க பொருளாதார மாநாட்டை நேற்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.

அப்போது உரையாற்றிய அவர், “சுங்கச்சாவடிகளில் ஃபாஸ்டேக் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, அரசுக்குச் சொந்தமான இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் (NHAI) சுங்கவரி வருமானம் ஆண்டுக்கு ரூ. 15,000 கோடி அதிகரித்துள்ளதாக தெரிவித்தார். 2018 – 2019ல் சுங்கச் சாவடிகளில் வாகனங்கள் காத்திருப்பு நேரம், எட்டு நிமிடங்களாக இருந்த நிலையில், ஃபாஸ்டேக் (FASTags) அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, 2020-21 மற்றும் 2021-22 ஆம் ஆண்டுகளில் வாகனங்களுக்கான சராசரி காத்திருப்பு நேரம் இப்போது 47 வினாடிகளாகக் குறைந்துள்ளதை நிதின் கட்கரி சுட்டிக்காட்டினார்.

இந்த முறை மூலமாக சுங்கச்சாவடிகளில் வாகனங்களில் டோல் கட்டணம் செலுத்த நீண்ட வரிசையில் காத்திருப்பது குறைக்கப்பட்டிருந்தாலும், தற்போதும் சுங்கக் கட்டணம் செலுத்த வாகனங்கள் காத்திருக்கும் சூழ்நிலை உள்ளது. குறிப்பாக நகரங்களில் அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடிகளில் பீக் ஹவர்ஸின் போது அதிக தாமதம் ஏற்படுவதாக தெரிவித்தார். எனவே சுங்கச்சாவடிகளில் காத்திருக்கும் நேரத்தை குறைக்க டோல் பிளாசாக்களில் வாகனங்களின் நெம்பர் பிளேட்டில் உள்ள எண்ணை வைத்து ஆன்லைன் மூலம் வங்கிக் கணக்கில் இருந்து கட்டணத்தை பிடித்தம் செய்யும் தானியங்கி முறையை அமல்படுத்த உள்ளதாக தெரிவித்தார்.

இதுகுறித்து நிதின் கட்கரி கூறுகையில், “செயற்கைக்கோளைப் பயன்படுத்தும் போது FASTag க்கு பதிலாக GPS ஐ அறிமுகப்படுத்தும் பணியில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம். அதேபோல் நம்பர் பிளேட் மூலமாக தானியங்கி முறையில் டோல் கட்டணம் வசூலிக்கும் மற்றொரு தொழில்நுட்பம் குறித்தும் ஆலோசித்து வருகிறோம். சுங்கச்சாவடிகளை அதிநவீன கணினிமயமாக்குவதன் மூலமாக நீண்ட வரிசை மற்றும் காத்திருப்பு நேரத்தை குறைக்க முடியும்” எனத் தெரிவித்துள்ளார்.

Leave your comments here...