சுற்றுச்சூழல், பொருளாதாரம் மேம்பட மரம் வளர்ப்போம் : விவசாயிகளுக்கு ‘காவேரி கூக்குரல்’ கருத்தரங்கத்தில் ஆலோசனை..!

தமிழகம்

சுற்றுச்சூழல், பொருளாதாரம் மேம்பட மரம் வளர்ப்போம் : விவசாயிகளுக்கு ‘காவேரி கூக்குரல்’ கருத்தரங்கத்தில் ஆலோசனை..!

சுற்றுச்சூழல், பொருளாதாரம் மேம்பட மரம் வளர்ப்போம் : விவசாயிகளுக்கு ‘காவேரி கூக்குரல்’ கருத்தரங்கத்தில் ஆலோசனை..!

“விவசாயிகள் தங்களுடைய நிலங்களில் டிம்பர் மரங்களை வளர்ப்பதன் மூலம் சுற்றுச்சூழலுடன் சேர்த்து அவர்களின் பொருளாதாரத்தையும் மேம்படுத்தி கொள்ள முடியும்” என முன்னோடி விவசாயிகள் தெரிவித்தனர்.

காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் மரம் சார்ந்த விவசாயம் குறித்த ஒரு நாள் கருத்தரங்கு செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் (ஜூலை 24) சிறப்பாக நடைபெற்றது. முன்னோடி விவசாயி திரு. தெய்வசிகாமணி அவர்களின் ‘தமிழ் நிலம், தமிழ்ப் பண்ணை’ என்ற பெயரிலான தோட்டத்தில் நடந்த இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு முழுவதும் இருந்து 1,000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.

இதில் பல்வேறு முன்னோடி விவசாயிகள் தாங்கள் வெற்றி பெற்ற அனுபவங்களை பகிர்ந்தனர். ஓசூரைச் சேர்ந்த செம்மர விவசாயிகணேசன் அவர்கள் பேசுகையில், “தமிழ்நாட்டில் தரிசு நிலங்களும், தண்ணீர் குறைவான விவசாய நிலங்களும் ஏராளமாக உள்ளன. இந்நிலங்களில் டிம்பர் மரங்களை வளர்ப்பதன் மூலம் அந்நிலத்தின் உரிமையாளர் அதில் இருந்து வருவாய் ஈட்ட முடியும். மேலும், அதிகளவில் மரங்கள் வளர்ப்பதன் மூலம் அங்கு பல்லுயிர் பெருக்கமும் அதிகரிக்கும். இதனால், விவசாயிகளும் பொருளாதாரமும் சுற்றுச்சூழலும் ஒரு சேர மேம்படும்.

குறிப்பாக, விலை உயர்ந்த டிம்பர் மர வகைகளில் ஒன்றான செம்மரம், தண்ணீர் வசதி மிக குறைவாக இருக்கும் நிலங்களில் கூட நன்கு வளரும். சுமார் 30 வருடங்களுக்கு பிறகு ஒரு மரத்தில் இருந்து 100 முதல் 150 கிலோ வைரம் கிடைக்கும். தற்போதைய மார்க்கெட் நிலவரப்படி ஒரு டன் செம்மர வைரம் 40 லட்சம் முதல் 50 லட்சம் வரை விலை போகிறது. இப்போது செம்மரத்தை வெட்டி விற்பனை செய்வதற்கு இருக்கும் தடைகள் கூடிய விரைவில் நீங்க வாய்ப்புள்ளது. இதற்கு அரசு தரப்பில் உரிய கொள்கைகளை உருவாக்க வலியுறுத்தி வருகிறோம். முக்கியமாக, டிம்பர் வாரியம் அமைக்க வேண்டும். விவசாய நிலங்களில் வளரும் மரங்களை வனப் பொருள் என்ற பட்டியலில் இருந்து நீக்க வேண்டும்” என்றார்.

பெங்களூருவில் உள்ள மர அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் விஞ்ஞானி சுந்தர்ராஜன், சந்தன மர வளர்ப்பு குறித்து பேசினார். அவர் பேசுகையில், “உலகில் விலை உயர்ந்த மரங்களின் பட்டியலில் சந்தன மரம் 2-வது இடத்தில் உள்ளது. வாசனை திரவியங்கள் தயாரிப்பு உட்பட பல தேவைகளுக்கு சந்தன மரம் பயன்படுகிறது. சந்தனமர எண்ணெய் பல லட்சம் விலைக்கு விற்பனையாகிறது. 15 வருடம் சேதமின்றி நன்கு வளர்க்கப்பட்ட ஒரு சந்தன மரத்தில் இருந்து சராசரியாக 12 கிலோ வைரம் எடுக்க முடியும். தற்போது ஒரு கிலோ ரூ. 12,500-க்கு விற்பனை ஆகிறது. அப்படி பார்த்தால் ஒரு மரத்தில் இருந்து மட்டும் ஒன்றரை லட்சம் வருமானம் கிடைக்கும்.

கர்நாடகாவில் அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் சோப் தயாரிப்பு நிறுவனமே சந்தன மரங்களை விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்து கொள்கிறது. தமிழ்நாட்டில் வளர்க்கப்படும் சந்தன மரங்கள் வனத் துறையின் மூலம் மட்டுமே விற்பனை செய்ய முடியும் என சட்டம் உள்ளது. இந்த சட்டங்கள் அடுத்த 10 ஆண்டுகளுக்குள் நிச்சயம் மாறிவிடும். அப்போது மரங்கள் விற்பனை செய்வது மிக எளிமையானதாக இருக்கும்” என்றார்.

பண்ணையின் உரிமையாளரும் முன்னோடி விவசாயியுமான தெய்வசிகாமணி பேசுகையில், “நான் என்னுடைய 15 ஏக்கர் பண்ணையில் மா, பலா, வாழை, நெல்லி, கொய்யா, சப்போட்டா என பல வகை பழ மரங்களுடன் டிம்பர் மரங்களையும் சேர்த்து வருகிறேன். இதை ஒரு உணவுக் காடாக உருவாக்கி உள்ளேன். பழ மரங்கள் 15 முதல் 25 வருடங்கள் வரை விளைச்சல் தரும். அதன் பிறகு அதில் இருந்து வருமானம் கிடைக்காது. ஆனால், அத்துடன் டிம்பர் மரங்களை சேர்த்து வளர்த்தால் 20 முதல் 25 ஆண்டுகளுக்கு பிறகு அம்மரங்களில் இருந்து பெரும் தொகை வருவாயாக கிடைக்கும். தொடர் வருமானத்திற்கு பழ மரங்களும், நீண்ட கால மொத்த வருமானத்திற்கு டிம்பர் மரங்களும் உதவி புரியும்.

ஈஷா-வின் நர்சரிகளில் பல வகையான டிம்பர் மரங்களை வெறும் 3 ரூபாயில் விவசாயிகளுக்கு வழங்குகிறார்கள். இதே மரக்கன்றுகளை வெளியில் வாங்கினால் பலமடங்கு விலை அதிகம். அதனால் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.” என்றார்.

இதேபோல் பண்ருட்டியைச் சேர்ந்த முன்னோடி விவசாயியும், ஓய்வு பெற்ற வேளாண் துணை இயக்குநருமான ஹரிதாஸ் தனது நிலத்தில் 100 வகையான பலா மரங்களை வளர்த்து வருகிறார். அந்த அனுபவத்தை அவர் விவசாயிகளுடன் பகிர்ந்து கொண்டார். பொள்ளாச்சியைச் சேர்ந்த முன்னோடி விவசாயி வள்ளுவனும் பண்ருட்டி விவசாயி திருமலையும் ‘சமவெளியில் மிளகு சாகுபடி’ செய்வது குறித்து பேசினர். முன்னோடி விவசாயிகளுடன் அனுபவ பகிர்வுக்கு பிறகு அனைத்து விவசாயிகளும் பண்ணையை சுற்றி பார்த்தனர். பின்னர், அவர்களுடைய கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு முன்னோடி விவசாயிகள் விளக்கம் அளித்தனர்.

Leave your comments here...