அரசு ஒப்பந்ததாரர்களின் இடங்களில் ரெய்டு : கணக்கில் வராத ரூ.500 கோடிக்கு மேல் வருமானம் கண்டுபிடிப்பு!

தமிழகம்

அரசு ஒப்பந்ததாரர்களின் இடங்களில் ரெய்டு : கணக்கில் வராத ரூ.500 கோடிக்கு மேல் வருமானம் கண்டுபிடிப்பு!

அரசு  ஒப்பந்ததாரர்களின் இடங்களில் ரெய்டு : கணக்கில் வராத ரூ.500 கோடிக்கு மேல் வருமானம் கண்டுபிடிப்பு!

கோவை வடவள்ளியில் உள்ள தொண்டாமுத்தூர் சாலை, நாராயணசாமி நகரைச் சேர்ந்தவர் சந்திரசேகர். இவர், முன்னாள் அமைச்சரும், அதிமுக கொறடாவுமான எஸ்.பி.வேலுமணிக்கு நெருக்கமானவர். வரி ஏய்ப்பு தொடர்பாக, வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த 6-ம் தேதி முதல் சந்திரசேகர் வீடு உள்ளிட்ட 6 இடங்களில் சோதனை நடத்தினர்.

பீளமேடு கொடிசியா வர்த்தக மையம் அருகேயுள்ள அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்திலும் சோதனை நடைபெற்றது. முன்னாள் அமைச்சரும், அதிமுக கொறடாவுமான எஸ்.பி.வேலுமணியின் உதவியாளர் சந்தோஷ். இவரது சகோதரர் வசந்தகுமார். இவரது வீடு குனியமுத்தூரில் உள்ளது.

இவரது வீடு மட்டுமின்றி எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமானவரான ஒப்பந்ததாரர் செய்யாதுரை தொடர்புடைய வீடு மற்றும் அலுவலகங்களிலும் சோதனை நடைபெற்றது. விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்தவர் செய்யாத்துரை. இவரும் இவரது மகன் நாகராஜனும் இணைந்து நடத்திவரும் எஸ்பிகே குழுமமானது, தமிழக அரசின் சாலை ஒப்பந்தப் பணிகள் மற்றும் கட்டுமானப் பணிகளைச் செய்து வருகிறது.

இவர் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சம்மந்திக்கு நெருக்கமானவர் என்று கூறப்படுகிறது. கடந்த 2018-ம் ஆண்டு எஸ்.பி.கே குழுமத்துக்கு சொந்தமான வீடு, அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அந்தச் சோதனையின்போது 150 கோடி ரூபாய் வரையிலான பணமும், தங்க நகைகளும் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகியது.

இந்நிலையில் அதிமுக நாளிதழ் வெளியீட்டாளர் சந்திரசேகர், ஒப்பந்ததாரர் செய்யாதுரை தொடர்புடைய இடங்களில் ரெய்டு ரூ.500 கோடி கணக்கில் வராத வருமானம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளது.

இந்த நிறுவனங்களில் ஒன்று மேற்கொண்டதாக கூறப்படும் போலியான கொள்முதலுக்கு வழங்கப்பட்ட பணத்தை, ரொக்கமாக திரும்ப பெற்றது கண்டறியப்பட்டுள்ளது. கூட்டு முயற்சிகளில் லாப பகிர்வு செய்து கொண்டதாக கூறியும், பெருமளவு வருவாய் மறைக்கப்பட்டதற்கான ஆதாரங்களும் கிடைத்துள்ளன. இரண்டாவது நிறுவனம், பல்வேறு போலியான நிறுவனங்களை உருவாக்கி அதன் மூலம் போலி கொள்முதல் துணை ஒப்பந்த செலவுகளை மேற்கொண்டது தெரியவந்துள்ளது. முக்கியமான ஆவணங்கள் மற்றும் மின்னணு ஆவணங்களை பதுக்கி வைப்பதற்காக, இந்த நிறுவனம் ரகசிய மறைவிடங்களை பயன்படுத்தியதும் சோதனையில் கண்டறியப்பட்டுள்ளது. இரு நிறுவனங்களும், ரூ. 500 கோடிக்கு மேற்பட்ட கணக்கில் காட்டாத வருமானத்தை வைத்திருப்பது சோதனையில் கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பாக மேல்விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Leave your comments here...