ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மறைவு : நாளை தேசிய துக்க தினம்: பிரதமர் மோடி

இந்தியாஉலகம்

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மறைவு : நாளை தேசிய துக்க தினம்: பிரதமர் மோடி

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மறைவு : நாளை தேசிய துக்க தினம்: பிரதமர் மோடி

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே கொல்லப்பட்டதை அடுத்து நாளை தேசிய துக்க தினமாக அனுசரிக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், தனது மிக நெருங்கிய நண்பர்களில் ஒருவரான ஷின்சோ அபே கொல்லப்பட்டது விவரிக்க முடியாத அதிர்ச்சியை ஏற்படுத்தி இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

இந்தியா – ஜப்பான் இடையேயான உறவை புதிய உச்சத்துக்கு கொண்டு செல்வதிலும், இரு நாடுகளுக்கு இடையே சிறப்பு உறவு, சர்வதேச ஒத்துழைப்பு ஆகியவை ஏற்படுவதிலும் முக்கிய பங்கு வகித்தவர் ஷின்ஷோ அபே என தெரிவித்துள்ள பிரதமர் மோடி, ஜப்பான் – இந்தியா கூட்டமைப்பின் தலைவராக சமீபத்தில் அவர் பொறுப்பேற்றுக்கொண்டதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அபே உடனான தனது தொடர்பு பல ஆண்டுகளுக்கு முந்தையது என குறிப்பிட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, தான் குஜராத் முதலமைச்சராக இருந்தபோது அவரைப் பற்றி தெரிந்துகொண்டதாகவும், தான் பிரதமரான பிறகும் தங்களுக்கு இடையேயான நட்பு தொடர்ந்தது என்றும் கூறியுள்ளார்.

சமீபத்தில் டோக்கியோ சென்றபோது ஷின்சோ அபேவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள பிரதமர் மோடி, அந்த சந்திப்பின்போது பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசித்ததாகத் தெரிவித்துள்ளார். அவர் எப்போதும்போல், புத்திசாலித்தனத்துடனும் நுண்ணறிவுடனும் இருந்ததாக புகழ்ந்துள்ள பிரதமர் மோடி, அந்த சந்திப்பே கடைசி சந்திப்பாக இருக்கும் என தான் எண்ணவில்லை என தெரிவித்துள்ளார்.

ஷின்சோ அபே ஒரு சிறந்த உலகலாவிய அரசியல் ஆளுமை என குறிப்பிட்டுள்ள நரேந்திர மோடி, சிறந்த தலைவராகவும், சிறந்த நிர்வாகியாகவும் இருந்து ஜப்பானையும் உலகையும் சிறந்த நிலைக்குக் கொண்டு செல்ல தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர் அவர் என புகழ்ந்துள்ளார்.ஷின்சோ அபேவின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை அவரது குடும்பத்தினருக்கும் ஜப்பான் மக்களுக்கும் தெரிவித்துக்கொள்வதாகக் கூறியுள்ள பிரதமர் நரேந்திர மோடி, இந்த கடினமான நேரத்தில் ஜப்பானின் துயரத்தில் இந்தியா பங்கு கொள்வதாகவும், ஜப்பானிய சகோதர சகோதரிகளுக்கு இந்தியா உறுதியான ஆதரவை தெரிவித்துக்கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அவரது மறைவை அடுத்து நாளை தினம் தேசிய துக்க தினமாக அனுசரிக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

Leave your comments here...