எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கியதே பாஜக தான் – உண்மையை போட்டு உடைத்த நயினார் நாகேந்திரன்..!

அரசியல்தமிழகம்

எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கியதே பாஜக தான் – உண்மையை போட்டு உடைத்த நயினார் நாகேந்திரன்..!

எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கியதே பாஜக தான் – உண்மையை போட்டு உடைத்த நயினார் நாகேந்திரன்..!

கடந்த அதிமுக ஆட்சியில் எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் ஆக்கியதே பாஜகதான் என அக்கட்சியின் சட்டமன்றக் குழு தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

பாஜகவின் மாநில துணைத் தலைவரும் திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினருமான நயினார் நாகேந்திரன், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சுவாமி தரிசனம் செய்தபின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். தலைவர்களின் மறைவுக்குப்பின் உள்ள இடைவெளியில் அதிமுக கட்சியில் சிறு சிறு பிரச்சினைகள் ஏற்படுவது வழக்கம்தான் எனக் கூறிய நயினார் நாகேந்திரன், அதிமுகவில் தற்போது எழுந்துள்ள ஒற்றை தலைமை பிரச்சனை அதன் உட்கட்சி விவகாரம் என்றார். கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லை என்று கூறிய அவர், ஒற்றை தலைமை பிரச்சனையை யார் ஆரம்பித்தார்கள் என்று எல்லோருக்கும் தெரியும் எனக் கூறினார்.

இந்த விவகாரம் கட்சியின் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி இடையே உள்ள தனிப்பட்ட பிரச்சனையாகவும் உருவெடுத்துள்ளதாக நயினார் நாகேந்திரன் கருத்து தெரிவித்தார். கடந்த அதிமுக ஆட்சியின்போது எடப்பாடி பழனிச்சாமியை முதலமைச்சர் ஆக்கியதே பாஜக தான் என்றும் நயினார் நாகேந்திரன் கூறினார். 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலிலும் அதிமுகவுடன் பாஜக கூட்டணி தொடரும் எனக் கூறிய அவர், தமிழ்நாட்டில் பாஜகவிற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளதாக மகிழ்ச்சி தெரிவித்தார்.

ஒரு காலத்தில் பாஜக போராட்டம் நடத்தினால் வெளியே தெரியாமல் இருந்ததாகவும், ஆனால் தற்போது பாஜக போராட்டம் என்று அறிவித்தாலே தங்கள் பிரச்சனை தீர்ந்துவிடும் என எண்ணும் அளவிற்கு மக்கள் அதனை வெற்றியாக கருதுவதாகவும் நயினார் நாகேந்திரன் கூறினார். பாஜக போராட்டங்களில் பொதுமக்கள் நிறைய பேர் தாமாக முன்வந்து கலந்து கொள்வதாகவும் நயினார் நாகேந்திரன் கூறினார்.

திமுகவின் ஆட்சி மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளதாகக் கூறிய நயினார் நாகேந்திரன், கட்டுமான பொருட்களின் விலை அதிக அளவு உயர்ந்துள்ளதாக கண்டனம் தெரிவித்தார். அக்னிபாத் திட்டம் ஒரு அருமையான திட்டம் என்று புகழாரம் சூட்டிய அவர், சிங்கப்பூர் போன்ற நாடுகளில் வீட்டில் ஒருவருக்கு கட்டாய ராணுவ பயிற்சி அளிக்கப்படுவதாக சுட்டிக்காட்டினார். ஆனால் இந்தியாவில் அது போன்று கட்டாயப்படுத்துவதில்லை என்றும், இளைஞர்கள் விருப்பப்பட்டால் அக்னிபாத் திட்டத்தில் சேரலாம் என்ற நிலை இருப்பதாகவும் சட்டமன்ற பாஜக குழு தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Leave your comments here...