தென் கயிலாய பக்தி பேரவை சார்பில் வெள்ளியங்கிரியில் தூய்மைப் பணி..!

சமூக நலன்

தென் கயிலாய பக்தி பேரவை சார்பில் வெள்ளியங்கிரியில் தூய்மைப் பணி..!

தென் கயிலாய பக்தி பேரவை சார்பில் வெள்ளியங்கிரியில் தூய்மைப் பணி..!

தென் கயிலாய பக்தி பேரவை சார்பில் கோவை வெள்ளியங்கிரி மலைப் பாதையில் மேற்கொள்ளப்பட்ட தூய்மைப் பணியில் 500-க்கும் மேற்பட்ட சாக்கு பைகளில் பிளாஸ்டிக் குப்பைகளை சேகரிக்கப்பட்டது.

கோவை பூண்டி பகுதியில் அமைந்திருக்கும் வெள்ளியங்கிரி மலை மிகுந்த ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்தது. சிவனே இந்த மலையில் வந்து அமர்ந்து சென்றதன் காரணமாக இது ‘தென் கயிலாயம்’ எனவும் அழைக்கப்படுகிறது. இதனால், 7-வது மலையில் சுயம்பு லிங்கமாக காட்சி தரும் சிவனை தரிசிப்பதற்காக ஆண்டுதோறும் கோடை காலத்தில் லட்சக்கணக்கான மக்கள் மலையேறுவது வழக்கம்.

அந்தச் சமயத்தில் அங்கு வீசியெறியப்படும் பிளாஸ்டிக் மற்றும் பிற குப்பைகளால் மலையின் சுற்றுச்சூழலும், புனிதத் தன்மையும் பாதிப்புக்குள்ளாவதை தவிர்க்க ஆண்டுதோறும் தூய்மைப் பணி மேற்கொள்ளப்படுகிறது.

அந்த வகையில் தென் கயிலாய பக்தி பேரவை சார்பில் கடந்த மே15, 22, 29 மற்றும் ஜூன் 5 ஆகிய தேதிகளில் தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது. இதில் சென்னை, ஐதராபாத், பெங்களூரு, மும்பை உள்ளிட்ட பல்வேறு நகரங்களைச் சேர்ந்த 350-க்கும் மேற்பட்ட ஈஷா தன்னார்வலர்கள் மற்றும் பக்தர்கள் பங்கேற்றனர்.

உலக சுற்றுச்சூழல் தினமான ஜூன் 5-ம் தேதி நடந்த நிகழ்ச்சியில் அரசூரில் உள்ள கே.பி.ஆர் பொறியியல் கல்லூரியின் மாணவர்களும் பங்கேற்றனர். அன்றைய தினம் தூய்மைப் பணியுடன் சேர்த்து ‘மண் காப்போம்’ இயக்கம் சார்பில் மண் வளப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது.

வெயில், காற்று, மழை, குளிர் என கடுமையான வானிலையையும் பொருட்படுத்தாமல் சேவையாற்றிய தன்னார்வலர்கள் மொத்தம் 500-க்கும் மேற்பட்ட சாக்கு பைகளில் பிளாஸ்டிக் மற்றும் இதர குப்பைகளைச் சேகரித்து வந்தனர். இந்த தூய்மைப் பணி வனத்துறையின் ஆதரவுடன் நடத்தப்பட்டது.

Leave your comments here...