திமுக ஆட்சியில் சாதனைகள் ஏதுமில்லை..! மக்களுக்கு வேதனைதான் மிச்சம் – எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி

அரசியல்

திமுக ஆட்சியில் சாதனைகள் ஏதுமில்லை..! மக்களுக்கு வேதனைதான் மிச்சம் – எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி

திமுக ஆட்சியில் சாதனைகள் ஏதுமில்லை..! மக்களுக்கு வேதனைதான் மிச்சம் – எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி

கடந்த அதிமுக ஆட்சியில் பல்வேறு பெரிய திட்டங்களை நிறைவேற்றி சாதனை படைக்கப்பட்டது. இதனால், மக்கள் பயனடைந்தனர், ஆனால் திமுக ஆட்சியில் சாதனைகள் ஏதுமில்லை. வேதனைதான் மிச்சம் என எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி கூறியுள்ளார்.

திமுக ஆட்சிப் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்த நிலையில், சட்டமன்றத்தில் திமுகவின் சாதனைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சட்டமன்ற நடவடிக்கைகளில் கலந்துகொள்ளவில்லை. எதிர்க்கட்சி தலைவர் அறையில் ஆலோசனையில் ஈடுபட்டுவிட்டு திரும்பிச் சென்றனர்.

சட்டசபையை புறக்கணித்த பின்னர் எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி நிருபர்களிடம் கூறியதாவது: திமுகவின் ஒராண்டு ஆட்சியில் புதிய திட்டங்கள் நிறைவேற்றப்படவில்லை. திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது. அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்கள் முடிவுற்ற பணியை தான் முதல்வர் திறந்து வைக்கிறார்.ஜெயலலிதா அரசு கொண்டு வந்த திட்டத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார். ஓராண்டு ஆட்சியில் புதிய திட்டம் அறிமுகம் செய்யவில்லை. செயல்படுத்தவில்லை.

அதிமுக ஆட்சியில் எண்ணற்ற திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன.. மக்கள் நன்மை அடைந்தனர். காவிரி நதிநீர் பிரச்னையில் நல்ல தீர்வு கண்டோம். குடிமராமத்து திட்டங்கள் மூலம் ஏரி, குளங்களை தூர்வாரினோம். பயிர் காப்பீட்டு திட்டம் மூலம் விவசாயிகளுக்கு அதிகளவு நிதி பெற்று தந்தோம். கடன் தள்ளுபடியால் விவசாயிகள் பயன்பெற்றனர். வறட்சிக்கு நிவாரணம் வழங்கினோம். காவிரி குண்டாறு வைகை இணைக்கும் திட்டத்திற்கு நிதி ஒதுக்கி முதல் கட்ட பணிகள் துவங்கப்பட்டது உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை நிறைவேற்றினர். பல்வேறு பெரிய திட்டங்களை நிறைவேற்றி சாதனை படைத்தது அதிமுக அரசு

நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என ஸ்டாலினும், உதய நிதியும் பொய் கூறினர். அவர்களால் முடியவில்லை. காங்கிரஸ் கூட்டணியில் திமுக. இருந்த போது தான் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது.நீட் தேர்வை கொண்டு வந்தவர்களே ரத்து செய்வதாக நாடகம் போடுகிறார்கள். ஏழைகளுக்கு வைத்தியம் செய்வதை பொறுக்க முடியாத அரசு திமுக அரசு. இந்த ஆட்சியில் வேதனை தான் மிச்சம். திமுக ஆட்சியில் சாதனை அல்ல. மக்கள் வேதனை தான் பட்டு கொண்டுள்ளனர்.

திமுக ஆட்சியில் மக்கள் மறக்க முடியாத அளவிற்கு தரமில்லா பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. உருகும் வெல்லத்துடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கி மக்களை ஏமாற்றியது திமுக ஆட்சி . விஞ்ஞான முறைப்படி பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கினார்கள்.வரலாற்றில் யாரும் மறக்க முடியாதபடி பொங்கல் பரிசு கொடுத்த அரசு திமுக அரசு. இது தான் திமுக சாதனை. ஓராண்டில் சாதனை என வெளியிட்டுள்ளனர். ஆனால் மக்கள் வேதனைக்கு மேல் வேதனைப்படுகின்றனர்.

கடந்த ஓராண்டில் என்ன மிகப்பெரிய திட்டம் அறிவித்தீர்கள். எந்த திட்டத்தை நிறைவேற்றினீர்கள். அதிமுக ஆட்சியில் தடையில்லா மின்சாரம் வழங்கினோம். திமுக ஆட்சியில் மின்வெட்டு நிலவுகிறது. விலைவாசி, கட்டுமான விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது.

ஒராண்டு நிறைவு பெறுவதால் சில திட்டங்களை அறிவிக்கின்றனர். அது யானை பசிக்கு சோளப்பொறி போடுவது போல் உள்ளது. நகர்ப்புற மருத்துவ நிலையங்கள் அமைக்கப்படும் என்கின்றனர். அதிமுக ஆட்சியில் அம்மா கிளினிக் அமைத்தோம். சுயமாக எந்த திட்டமும் அறிவிக்கவில்லை. சொத்து வரி உயர்த்தி உள்ளனர். இது பிள்ளையார் சுழி. மின்கட்டணம், குடிநீர், பஸ் கட்டணம் என ஒவ்வொன்றாக உயர்த்த போகின்றனர். மக்களை மறந்து விடுவார்கள். இது தான் திமுகவினரின் திராவிட மாடல். இவ்வாறு பழனிசாமி கூறினார்.

Leave your comments here...