தருமபுரம் ஆதீனம் பட்டினப்பிரவேசம் செல்ல தடை! “ஆன்மீக அரசு “என்று பாராட்டியதற்கு அன்பு பரிசா? – இராம. இரவிக்குமார் கேள்வி..!

தமிழகம்

தருமபுரம் ஆதீனம் பட்டினப்பிரவேசம் செல்ல தடை! “ஆன்மீக அரசு “என்று பாராட்டியதற்கு அன்பு பரிசா? – இராம. இரவிக்குமார் கேள்வி..!

தருமபுரம் ஆதீனம் பட்டினப்பிரவேசம்  செல்ல தடை! “ஆன்மீக அரசு “என்று பாராட்டியதற்கு  அன்பு பரிசா? – இராம. இரவிக்குமார்  கேள்வி..!

மயிலாடுதுறை மாவட்டம் தருமபுரம் ஆதின மடத்தில் ஆண்டுதோறும் பக்தர்களை தேடிச் சென்று அருளாசி வழங்கும் பட்டினப்பிரவேசம் நடக்கும். இதில் பல்லக்கில் ஆதினத்தை அமர வைத்து பக்தர்கள் சுமந்து செல்வர். நுாற்றாண்டுகளை தாண்டி நடந்து வரும் இந்நிகழ்வுக்கு, ‘மனிதர்களே மனிதர்களை சுமக்கலாமா’ என திராவிடர் கழகம் உட்பட தி.மு.க., கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. தி.மு.க., ஆட்சி நடப்பதால் இதை காரணமாக வைத்து மாவட்ட நிர்வாகம் பட்டினப்பிரவேசத்திற்கு தடை விதித்தது.

இந்நிலையில் இந்து தமிழர் கட்சி தலைவர் இராம. இரவிக்குமார் கண்டனம் தமிழக அரசிற்கு தெரிவித்து உள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:- தருமபுரம் ஆதீனம் பட்டிணப்பிரவேசம் செய்வதற்கு மயிலாடுதுறை மாவட்ட வருவாய்த்துறை தடைவிதித்து இருப்பதாக செய்தி வருகிறது.

“இந்திய அரசியலமைப்பு சட்டம் கொடுத்த மத சுதந்திரம், மத நம்பிக்கை என்பது தனிநபர்கள் அல்லது சமூகங்கள் எந்த ஒரு சமயம் தொடர்பாகவும் பொதுவிலும் தனிப்பட்ட முறையிலும் நம்பிக்கைகளை வைத்திருப்பதற்கும் வழிபடுவதற்கும் சடங்குகளை நடத்துவதற்குமான சுதந்திரமாகும். இந்த அடிப்படை மத உரிமையை தகர்க்கும் வண்ணம் திராவிடர் கழகத்தவர்கள் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டு வருகிறார்கள்.

இந்து கோவில்கள், இந்து மத துறவிகள், இந்து மத நிறுவனங்கள், இந்துமத நம்பிக்கைகள் மீது காழ்ப்புணர்ச்சியோடு, பண்பாட்டு உடைப்பு சிந்தனையோடு தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டு வருகிறார்கள். தமிழ்நாட்டில் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டு வரும் சைவ ஆதீனங்கள் திருக்கோவில்கள் தமிழ்மொழி வளர்ச்சி மற்றும் அனைத்து தரப்பு மக்களுக்கும் அன்பு சார்ந்த தொண்டுகளை செய்து வரும் ஒரு மரபு கூடம். பட்டின பிரவேசம் என்பது பக்தர்கள் தங்கள் குருநாதரை பல்லக்கில் அமர வைத்து எவ்வித கட்டாயப்படுத்துதல் இல்லாமல் மனமுவந்து மகிழ்ச்சிக் கொண்டாட்டத்தில் சுமந்துவரும் ஒரு ஆன்மீக நிகழ்வு பக்தி திருவிழா.

ஆதீன குருமார்களை மனிதர்கள் என்று நினைக்காமல் மாதா பிதா குரு தெய்வம் என்று பக்தர்கள் உயர்ந்த நிலையில் வைத்திருக்கிறார்கள். ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில் கூட பட்டினப் பிரவேசம் போன்ற பக்தி சம்பிரதாய நெறிமுறைகளுக்கு தடை விதிக்கவில்லை.

ஆனால் திமுக அரசு பதவியேற்ற பிறகு , ஆன்மீக அரசு என்று தங்களுக்குத் தாங்களே சொல்லிக் கொண்டவர்கள், தமிழ்நாட்டில் ஆதீனகர்த்தர்கள் அனைவரையும் கட்டாயப்படுத்தி சென்னை தலைமைச் செயலகத்திற்கு வரவைத்து, ஆதீனங்கள் மூலமாகவும் ஆன்மீக அரசு என்று சொல்ல வைத்த ஆட்சியாளர்கள்; அப்படி பாராட்டு பத்திரம் கொடுத்த தருமபுரம் ஆதீனத்திற்கு செய்யும் மரியாதை இதுதான் போலும்!

மயிலாடுதுறை மாவட்டம் பிரிக்கப்பட்டு ஆட்சியர் அலுவலகம் கட்ட இடம் வேண்டும் என்று திமுக சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் வந்து கேட்டவுடனேயே 21ஏக்கர் நிலம் அரசுக்கு தானமாக வாரி வழங்கிய வள்ளல் தருமபுர ஆதீனம். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை காணொளி வாயிலாக முதல்வர் திறந்து வைக்கக் கூடிய நிகழ்விற்கு ஆதினம்பெருமகனை
அழைத்தார்களா? என்று தெரியவில்லை.

திமுக அரசின் நன்றிகெட்ட தனத்தை என்ன சொல்வது?

மதசார்பற்ற அரசு என்று சொல்லி பதவியேற்ற திமுகவினர் மத சுதந்திரத்தில் அரசு தலையிடக் கூடாது என்று அரசியல் சாசன விதிமுறைகள் இருந்தாலும் அதையெல்லாம் உடைத்து, “இந்து மத அழித்தொழிப்பு தொடக்கத்தை” தொடர்ந்து செய்வது எப்படி மதசார்பற்ற அரசாக இருக்க முடியும்.

தருமபுரம் ஆதீனம் அவர்கள் ஆன்மீக யாத்திரை தொடக்க விழாவில் கலந்து கொள்ள தமிழக ஆளுநரை அழைத்து விட்டார் என்கின்ற ஒரே ஒரு காரணத்திற்காக,பாரம்பரிய இறைநம்பிக்கை குருவழி மரபு சைவ ஆதீனங்களை அச்சுறுத்தி மிரட்டிப் பார்ப்பது என்பது இறை சாபத்திற்கு ஆட்சியாளர்கள் ஆளாக கூடிய நிலையை உருவாக்கிவிடும்.

அந்நிய மத சக்திகள் நேரடியாக இந்து மதத்தை அழிக்காமல் நாம் செயல்பட முடியாது என்பதற்காக அரசில் பதவியில் இருக்கக்கூடிய ஒரு சில நபர்கள் மூலமாக, மறைமுக செயல்திட்டத்தை அரசு அதிகாரிகள் மூலமாக செய்கிறதோ என்ற சந்தேகம் எங்களுக்கு எழுகிறது.

கடந்த ஒரு சில மாதங்களுக்கு முன்பு இதேபோன்று பட்டணப் பிரவேசம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருவாவடுதுறை ஆதீன பெருமகனுக்கு மிரட்டல் வந்தபோது பக்தர்கள், சிவனடியார்கள், மற்றும் அனைத்து சமுதாய மக்களும் ஒருங்கிணைந்து எதிர்கொண்டு தடைகளை உடைத்து கம்பீரமாக பட்டிணப்பிரவேசம் நடத்தியதை நாடே அறியும். அரசுக்கு ஆதரவாக செயல்பட வேண்டும் என்று தன் முனைப்பாக ஒரு சில ஆதீனங்கள் திமுக கரை வேட்டி கட்டாமல் காவி உடை தரித்து செயல்படுகிறார்கள் என்பதை நாடே அறியும்.

தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்துஆதீன பெருமக்களும் இந்த பட்டிண பிரவேசத்திற்கு தடைவிதித்த திமுக அரசுக்கு தங்களது கண்டனங்களை தெரிவிக்க வேண்டும். சைவ ஆதீனங்கள் தங்களுக்குள் இருக்கும் ஒரு சில கருத்து வேறுபாடுகளை களைந்து சுயநல முனைப்புகளை ஒழித்து ஒரு வலிமைமிக்க அமைப்பாக திரண்டு தர்மத்தை காத்திட முன்வர வேண்டிய காலகட்டம் தற்போது வந்திருக்கிறது.

தருமபுரம் ஆதீனம் பெருமகன் பட்டிண பிரவேசத்திற்கு தமிழகத்தில் உள்ள அனைத்து ஆதீனங்களும் வருகை தர வேண்டும் என்ற வேண்டுகோளை, பிரார்த்தனையை இந்து தமிழர் கட்சியின் சார்பில் முன்வைக்கிறோம். சைவஆதீன பெருமக்களை தந்திட்ட சமுதாயத்தவர்கள் ஆன்மிக விழாக்களில் அரசின் தலையீட்டை எதிர்க்க ஓரணியில் திரள வேண்டும்.

ஒரு செய்திக்காக சொல்கிறேன். தமிழக டிஜிபி அவர்கள் பணி ஓய்வு பெற்ற பிறகு அவரை காரில் அமர வைத்து கயிறு கட்டி காவலர்கள் இழுத்துச் செல்வது பாரம்பரிய சம்பிரதாயம் மரபு என்று சொல்லக்கூடிய அரசு, பக்தர்கள் குருமார்களை பட்டிணப்பிரவேசம் பக்தி திருவிழாவில் ஆதீன குருமார்களை பல்லக்கில் அமர வைத்து பக்தர்கள் தூக்கிச் செல்வதற்கு தடை விதிப்பது இரட்டை நிலைப்பாடு இல்லையா!

நீதிமன்றங்களில் மனிதராக இருந்து நீதி வழங்கும் நீதிபதிகளை ” மை லார்டு” கடவுளுக்கு இணையாக அழைப்பது சம்பிரதாயம் தானே! தேர்தல்களில், போட்டிகளில் மற்றும் வெற்றி பெற்றவர்களை தோளில் தூக்கி சுமந்து கொண்டாடுவது மரபு தானே!
சமீபத்தில் பட்டிமன்ற பேச்சாளர் சாலமன்பாப்பையா அவர்களுக்கு பாராட்டு தெரிவித்து அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் அமர வைத்து தூக்கி சுமந்ததை அரசு மறந்துவிட்டதா? தடை விதித்ததா?

மனிதனை மனிதன் தூக்கி சுமப்பது அடிமைத்தனம் என்று சொல்லக்கூடிய இவர்கள் நாளை பகுத்தறிவின் உச்சத்தில் ஏறிக்கொண்டு பெற்றோர்கள் சுமப்பது கூட சட்டவிரோதம் என்று தடை கேட்டு மனு கொடுப்பார்கள். தருமபுர ஆதீனம் பட்டினப்பிரவேசம் தடை விதிக்க முடியாது. சட்டம் கொடுத்த விதிகளுக்கு முரணாக செயல்படும் தமிழக அரசை மத்திய அரசு கண்டிக்க வேண்டும். இதற்காக தமிழக ஆளுநர் அவர்களை நேரில் சந்தித்து மனு கொடுக்க இந்து தமிழர் கட்சி தலைமையிலான குழு செயல்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம், என தெரிவித்துள்ளார்.

Special Correspondent H.TharnesH

Leave your comments here...