அரசுமுறை பயணமாக ஐரோப்பியா நாடுகளுக்கு புறப்பட்டுச் சென்றார் பிரதமர் மோடி – முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்பு..!

இந்தியாஉலகம்

அரசுமுறை பயணமாக ஐரோப்பியா நாடுகளுக்கு புறப்பட்டுச் சென்றார் பிரதமர் மோடி – முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்பு..!

அரசுமுறை பயணமாக ஐரோப்பியா நாடுகளுக்கு புறப்பட்டுச் சென்றார் பிரதமர் மோடி – முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்பு..!

கொரோனாவின் தாக்கம் குறைந்துள்ள நிலையில் பல்வேறு நாடுகளுடன் வர்த்தக உறவுகளை மேம்படுத்த இந்தியா முயற்சி மேற்கொண்டு வருகிறது. உக்ரைன்-ரஷிய போர் காரணமாக ஐரோப்பிய பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி ஐரோப்பாவுக்கு செல்கிறார்.

பிரதமர் மோடி ஜெர்மனி, டென்மார்க், பிரான்ஸ் ஆகிய 3 ஐரோப்பிய நாடுகளுக்கு இன்று (திங்கட்கிழமை) சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார்.இது 3 நாள் பயணம். மொத்தம் 25 நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொள்கிறார். மொத்தம் 65 மணி நேரம் தங்கி இருக்கிறார்.இந்த பயணத்தையொட்டி பிரதமர் மோடி நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:- ஐரோப்பா பல்வேறு சவால்களை சந்தித்து வரும் நிலையில் எனது ஐரோப்பிய பயணம் அமைந்துள்ளது. அங்கு பங்கேற்கும் நிகழ்ச்சிகள் மூலம் ஐரோப்பிய நாடுகளுடன் ஒத்துழைப்பு உணர்வை வலுப்படுத்த விரும்புகிறேன். அமைதி மற்றும் வளமைக்கான இந்தியாவின் தேடலில் ஐரோப்பிய நாடுகள் இந்தியாவின் முக்கியமான கூட்டாளிகள் ஆவர்.

முதலில் ஜெர்மன் பிரதமர் ஓலப் ஸ்கால்சின் அழைப்பின் பேரில் மே 2-ந் தேதி (இன்று) ஜெர்மன் தலைநகர் பெர்லினுக்கு செல்கிறேன். இரு நாடுகளும் தூதரக உறவை தொடங்கி 70 ஆண்டுகள் ஆகின்றன.பிரதமர் ஓலப் ஸ்கால்சுடன் இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபடுகிறேன். 6-வது இந்தியா-ஜெர்மன் அரசுகளுக்கிடையிலான ஆலோசனைக்கு நாங்கள் இருவரும் தலைமை வகிக்கிறோம். இந்திய மந்திரிகள் பலரும் ஜெர்மனிக்கு வந்து தங்கள் இலாகா மந்திரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவார்கள்.

பாதுகாப்பு, பிராந்திய, சர்வதேச விவகாரங்கள் குறித்து ஓலப் ஸ்கால்சுடன் கருத்து பரிமாற்றம் செய்து கொள்ள விரும்புகிறேன். இருவரும் இணைந்து வர்த்தக வட்டமேஜை மாநாட்டில் கலந்து கொள்வோம். கொரோனாவுக்கு பிறகு பொருளாதாரத்தை மீளச்செய்யும் நோக்கத்தில் இதை நடத்துகிறோம்.

ஐரோப்பாவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த 10 லட்சம் பேர் வாழ்ந்து வருகிறார்கள். அவர்களில் கணிசமானோர் ஜெர்மனியில் இருக்கிறார்கள். அந்த சகோதர, சகோதரிகளை பார்க்கவும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்வேன்.

ஜெர்மனிக்கு பிறகு டென்மார்க் நாட்டின் கோபன்ஹேகனுக்கு 3-ந் தேதி செல்கிறேன். டென்மார்க் பிரதமர் மெட்டே பிரெட்ரிக்சன் அழைப்பின் பேரில் அங்கு செல்கிறேன். அவருடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்த உள்ளேன்.இந்தியா-டென்மார்க் வர்த்தக வட்டமேஜை கூட்டத்திலும் பங்கேற்கிறேன். அங்குள்ள இந்திய வம்சாவளியினரை சந்தித்து பேசுகிறேன். 2-வது இந்தியா-நார்டிக் உச்சி மாநாட்டில் பங்கேற்கிறேன். அதில் டென்மார்க், ஐஸ்லாந்து, பின்லாந்து, சுவீடன், நார்வே ஆகிய நாடுகளின் பிரதமர்களும் கலந்து கொள்கிறார்கள்.

மாநாட்டில் பொருளாதார மீட்பு, பருவநிலை மாற்றம், கண்டுபிடிப்பு, தொழில்நுட்பம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, உலகளாவிய பாதுகாப்பு சூழ்நிலை ஆகிய அம்சங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்படுகிறது. இதர 4 நார்டிக் நாடுகளின் தலைவர்களையும் சந்தித்து பேசுகிறேன்.

இரு நாட்டு பயணத்தை முடித்துக்கொண்டு திரும்பி வரும் வழியில் 4-ந் தேதி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் இறங்குகிறேன். அந்நாட்டு அதிபராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள என் நண்பர் இம்மானுவேல் மேக்ரானை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிக்கிறேன். இது, இரு நாடுகளுக்கிடையிலான நெருங்கிய நட்புறவை உறுதி செய்வதாக அமையும். உலக பிரச்சினைகளில் ஒரே நிலைப்பாட்டை மேற்கொள்ளும் இரு நாடுகளும் நெருங்கிய ஒத்துழைப்புடன் செயல்பட வேண்டும் என்பது எனது உறுதியான கருத்து. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

பிரதமர் மோடியின் இந்த 3 நாள் பயணத்தில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave your comments here...