ரோப் கார்கள் செயல்படுத்தும் வழிகாட்டு நெறிமுறைகள்: மத்திய அரசு வெளியீடு..!

இந்தியா

ரோப் கார்கள் செயல்படுத்தும் வழிகாட்டு நெறிமுறைகள்: மத்திய அரசு வெளியீடு..!

ரோப் கார்கள் செயல்படுத்தும் வழிகாட்டு நெறிமுறைகள்: மத்திய அரசு வெளியீடு..!

மலைப்பகுதிகளில் சுற்றுலா பயணிகளை கவரும் முக்கிய அம்சங்களில் ஒன்றாக ரோப் கார்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இவற்றில் பயணித்தவாறு மலைகளின் இயற்கை அழகை ரசிக்கும் அதே நேரம் இதில் ஆபத்தும் உள்ளது என்பதை உணர்த்தும் விதமாக அவ்வபோது விபத்துகள் நிகழ்ந்து விடுகின்றன.

அந்த வகையில் ஜார்க்கண்ட் மாநிலத்தின் தியோகர் மாவட்டத்தில் உள்ள திரிகுத் மலைப் பகுதியில் பாபா வைத்தியநாத் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு செல்வதற்காக 766 மீட்டர் தூரத்துக்கு ரோப் கார் வசதி செய்யப்பட்டுள்ளது. இதில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக 2 ரோப் கார்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை மோதிக் கொண்டன. இதில் ஒருவர் உயிரிழந்தார். பலர் காயமடைந்தனர். 12 ரோப் கார்களில் 40-க்கும் மேற்பட்டோர் அந்தரத்தில் சிக்கித் தவித்தனர்.இதையடுத்து விமானப் படையின் 2 ஹெலிகாப்டர்கள் மூலம் அவர்களை மீட்கும் பணி தொடங்கியது.

சவாலான இப்பணியில் நேற்று முன்தினம் சுமார் 30 பேர் மீட்கப்பட்டனர். மாலையில் மீட்புப் பணி நிறுத்தப்பட்டு, நேற்று காலையில் மீண்டும் தொடங்கியது. இதில் மற்றவர்களும் மீட்கப்பட்டனர். தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த விபத்து நிகழ்ந்ததாக கூறப்படும் நிலையில், இது குறித்து ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து, இந்த விபத்தை நேற்று வழக்காக எடுத்துக் கொண்டது. விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள நீதிமன்றம், வழக்கை மீண்டும் ஏப்ரல் 26-ம் தேதி விசாரிப்பதாக தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் ரோப் கார்களை செயல்படுத்துவது தொடர்பான விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில் ரோப் கார்கள் செயல்படுத்துவதில் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றினால், வருங்காலத்தில் இது போன்ற விபத்துக்களை தவிர்க்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. மாநில அரசு ரோப் கார் திட்டப்பணிகள், ரோப் கார் சேவை ஆகியவை முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அதே போல், ஒரு உயர் அதிகாரியை நியமித்து அவ்வபோது ரோப் கார் செயல்பாடுகளை ஆய்வு செய்து கொள்ளலாம் என்றும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave your comments here...