ஸ்ரீராம ஷோபா யாத்திரையில் பக்தர்கள் மீது கல்வீச்சு – கர்நாடகாவில் 144 தடை உத்தரவு.!

இந்தியா

ஸ்ரீராம ஷோபா யாத்திரையில் பக்தர்கள் மீது கல்வீச்சு – கர்நாடகாவில் 144 தடை உத்தரவு.!

ஸ்ரீராம ஷோபா யாத்திரையில் பக்தர்கள் மீது கல்வீச்சு – கர்நாடகாவில்  144 தடை உத்தரவு.!

கர்நாடகாவில் உள்ள முல்பாகலில் ஸ்ரீராம ஷோபா யாத்திரையின்போது பக்தர்கள் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டதால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.


கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் உள்ள முல்பாகலில் ராம நவமியை முன்னிட்டு வெள்ளிக்கிழமை இரவு ஸ்ரீராம ஷோபா யாத்திரை நடைபெற்றது. சிவகேசவ நகரில் இருந்து தொடங்கி, இரவு 9.40 மணியளவில் ஜஹாங்கீர் மொஹல்லா அருகே சென்றபோது ​​மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மர்ம நபர்கள் சிலை மீது கற்களை வீசித் தாக்கியதில் 10-க்கும் மேற்பட்டோர் காய மடைந்தனர்.

இதைத்தொடர்ந்து ஏற்பட்ட மோதலில் சாலையில் சென்ற 2 கார்கள், 5 இரு சக்கர வாகனங்கள் தாக்கப்பட்டன. இதனால் பெரும் பதற்றம் ஏற்பட்டதால் போலீஸார் லேசான‌ தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். மேலும் முல்பாகலில் ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிவரை த‌டை உத்தரவு அமல்படுத்தப்பட்டது.

இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள முல்பாகல் போலீஸார் சிசிடிவி கேமிரா காட்சிகளைக் கொண்டு குற்றவாளிகளை தேடிவருகின்றனர். முதல் கட்டமாக 5 பேரை கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.

இது குறித்து கோலார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டி தேவராஜ் கூறுகையில், ‘‘ஸ்ரீராமஷோபா யாத்திரையில் திட்டமிட்டு விஷமிகள் சிலர், மின்சாரத்தை துண்டித்து வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. 144 தடை உத்தரவு போடப்பட்டு, நகரின் நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. கர்நாடக ரிசர்வ் போலீஸாரின் இரண்டு படைப் பிரிவுகளும், கோலார் மாவட்ட ஆயுதப் பாதுகாப்புப் படையின் ஆறு படைப் பிரிவுகளும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்”என்று தெரிவித்தார்.

இந்த சம்பவத்தால் கோலார் மாவட்டத்தில் பதற்றமான சூழல் நிலவுகிறது. ஏற்கெனவே கர்நாடக மாநில கல்வி நிலையங்களில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வந்த விவகாரம் பெரும் பிரச்சினையை ஏற்படுத்தியது.

அதன்பின்னர், கோயில்கள் இருக்கும் இடத்தில் முஸ்லிம்கள் கடை வைக்க அனுமதிக்க முடியாது என்று இந்து அமைப்புகள் அறிவித்தன. இதற்கு முஸ்லிம் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அதன்பின் ஹலால் விவகாரமும் கிளம்பியது. இந்நிலையில் ராம ஷோபா யாத்திரையில் கல்வீச்சு நடந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Leave your comments here...