குடும்ப அரசியலே ஜனநாயகத்தின் மிகப்பெரிய எதிரி – பாஜக ஆண்டு தின உரையில் பிரதமர் மோடி பேச்சு..!

அரசியல்இந்தியா

குடும்ப அரசியலே ஜனநாயகத்தின் மிகப்பெரிய எதிரி – பாஜக ஆண்டு தின உரையில் பிரதமர் மோடி பேச்சு..!

குடும்ப அரசியலே ஜனநாயகத்தின் மிகப்பெரிய எதிரி  – பாஜக ஆண்டு தின உரையில் பிரதமர் மோடி பேச்சு..!

நாடு முழுவதும் பாஜக நிறுவன நாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி 14 நாள் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஏப்.7ம் தேதி முதல் ஏப்.14 வரை “இருவார கால சமூக நீதி கொண்டாட்டம்” என்ற பெயரில் இந்த நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

அந்தவகையில், நேற்று காலை டெல்லியில் உள்ள பாஜக அலுவலகத்தில் கொடியேற்றத்துடன் நிகழ்வு தொடங்கியது. தொடர்ந்து கட்சித் தொண்டர்களுக்கு காணொலி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.

அப்போது அவர் கூறியதாவது, கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலுள்ள பாஜக தொண்டர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தாண்டு நிறுவன நாள் மிகவும் முக்கியமானது. இதற்கு மூன்று காரணங்கள் உள்ளன.

முதலாவது, 75-வது சுதந்திர ஆண்டுக் கொண்டாட்டம், இரண்டாவது, வேகமாக மாறிவரும் உலகளாவிய நிலைமையில் இந்தியாவுக்கு தொடர்ந்து புதிய வாய்ப்புகள் வருகின்றன. இறுதியாக, இந்தாண்டு நடைபெற்ற தேர்தலில் மேலும் 4 மாநிலங்களில் வெற்றி பெற்றுள்ளோம். மேலும், 30 ஆண்டுகளுக்கு பிறகு மாநிலங்களவையில் நமது கட்சியின் எண்ணிக்கை 100-ஐ தொட்டுள்ளது.

சில கட்சிகள் பல தசாப்தங்களாக வாக்கு வங்கி அரசியல் மட்டுமே செய்தன. ஒரு சிலருக்கு மட்டும் வாக்குறுதிகளை அளித்து பெரும்பாலான மக்களை ஏங்க வைத்தன. பாரபட்சம் மற்றும் ஊழல் ஆகியவை வாக்கு வங்கி அரசியலின் பக்க விளைவு. பாஜக இதை கேள்வி கேட்டதோடு மட்டுமல்லாமல், அதன் தீமையை மக்களுக்கு புரிய வைப்பதிலும் வெற்றி பெற்றது.

குடும்ப அரசியலே ஜனநாயகத்தின் மிகப்பெரிய எதிரி. இதுபோன்று குடும்ப அரசியல் செய்யும் கட்சிகள் இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்காமல் துரோகம் செய்துள்ளன. பாஜக மட்டுமே அதற்கு மாற்றாக செயல்பட்டு வருகின்றது. நம்முடைய அரசாங்கம் மக்களுக்காக பாடுபடுகிறது. நம்மிடம் கொள்கைகள், நல்ல நோக்கங்கள், முடிவெடுக்கும் அதிகாரங்கள் மற்றும் உறுதிப்பாடு உள்ளது. நாங்கள் எங்கள் வாக்குறுதிகளை நிறைவேற்றுகிறோம், எங்கள் இலக்குகளை நிறைவேற்றுகிறோம் என்று அவர் கூறினார். அரசாங்கத்தின் ஒவ்வொரு திட்டத்தையும் மக்களிடம் கொண்டு செல்லுமாறு தொண்டர்களை வலியுறுத்தினார்.

மத்திய அரசின் சலுகைகள் கடைக்கோடியில் உள்ள மக்களுக்கும் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும் என்றார். தற்போது சுதந்திர தின அம்ருத் மகோத்சவ் திருவிழா நடைபெறும் இடங்களில் பாஜக உறுப்பினர்கள் தங்கள் பகுதி குளங்களை சீரமைக்குமாறு பிரதமர் மோடி இந்நிகழ்ச்சி தொடக்கத்தின்போது கேட்டுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

Leave your comments here...