கிரிப்டோ கரன்சி லாபத்துக்கு ஏப்ரல் 1-ந் தேதி முதல் வரி வரிவிதிப்பு – மத்திய அரசு தகவல்

இந்தியா

கிரிப்டோ கரன்சி லாபத்துக்கு ஏப்ரல் 1-ந் தேதி முதல் வரி வரிவிதிப்பு – மத்திய அரசு தகவல்

கிரிப்டோ கரன்சி லாபத்துக்கு ஏப்ரல் 1-ந் தேதி முதல் வரி  வரிவிதிப்பு – மத்திய அரசு தகவல்

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அடுத்த நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் தாக்கல் செய்து பேசினார். அவர் அப்போது 2 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.முதல் அறிவிப்பு, பாரத ரிசர்வ் வங்கி டிஜிட்டல் பணத்தை வெளியிடும் என்பதாகும். அடுத்த அறிவிப்பு, கிரிப்டோ கரன்சி முதலீடுகளுக்கு 30 சதவீத வரி விதிக்கப்படும் என்பதாகும்.

இதையொட்டி மத்திய அரசின் சார்பில், நிதித்துறையின் கீழ்வரும் வருவாய்த்துறை செயலாளர் தருண் பஜாஜ் விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- கிரிப்டோகரன்சிகள் மீதான லாபங்கள் எப்போதுமே வரி விதிப்புக்கு உட்பட்டவைதான். பட்ஜெட்டில் முன்மொழிந்திருப்பது புதிய வரி அல்ல. ஆனால் இது தொடர்பான நிச்சயத்தை வழங்குவதுதான். அடுத்த ஆண்டு முதல் வருமான வரி கணக்கு தாக்கல் படிவத்தில் கிரிப்டோகரன்சிக்கென்று தனியாக ஒரு ‘காலம்’ இடம்பெறும். அதில் பொதுமக்கள் தெரிவிக்க வேண்டும்.

கிரிப்டோகரன்சி மீது வரும் வருமானத்துக்கு வரி விதிக்க வேண்டும் என்பதில் அரசு தெளிவாக இருந்தது. எனவே நாங்கள் அதிகபட்ச விதி விகிதத்தை கொண்டுவந்துள்ளோம். உரிய மேல்கட்டணத்துடன் (சர்சார்ஜ்), 30 சதவீதம் வரி விதிக்கப்படும்.

இதை டி.டி.எஸ்.சிலும் (மூலத்தில் இருந்து வரிகழிப்பு) கொண்டு வந்துள்ளோம். எனவே நாங்கள் இப்போது பரிமாற்றங்களை கண்காணிக்கிறோம்.பட்ஜெட்டில் ஒரு வருடத்தில் ரூ.10 ஆயிரத்துக்கு மேல் கிரிப்டோ கரன்சிகளுக்கு 1 சதவீத டி.டி.எஸ். மற்றும் பெறுனர் கைகளில் அத்தகைய பரிசுக்கும் வரி விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட நபர்களுக்கு டி.டி.எஸ். மீதான வரம்பு ஆண்டுக்கு ரூ.50 ஆயிரமாக இருக்கும்.

1 சதவீத டி.டி.எஸ். தொடர்பான விதிமுறைகள் ஜூலை 1-ந் தேதி முதல் நடைமுறைக்கு வரும். கிரிப்டோகரன்சி ஆதாயங்களுக்கு ஏப்ரல் 1 முதல் வரி விதிக்கப்படும்.கிரிப்டோகரன்சிகள், டிஜிட்டல் சொத்துக்கள் எந்தவொரு பொருளாதார மதிப்பையும் கொண்டிருக்கவில்லை என்பதால் எந்த விலக்கும் அனுமதிக்கப்படவில்லை.

இந்தியாவில் கிரிப்டோ கரன்சி சந்தை கடந்த ஆண்டு ஜூன் வரையில் 641 சதவீதம்(6 மடங்கு) வளர்ச்சி அடைந்துள்ளது. தற்போதும்கூட கிரிப்டோகரன்சி மீதான ஆதாயம் வரிவிதிப்புக்குரியதுதான். இது நீண்டகால மூலதன ஆதாய வரி (எல்.டி.சி.ஜி.) என்று யாரேனும் சொன்னால், அது எல்.டி.சி.ஜி. அல்ல, அது வணிக வருமானம், எனவே 30 சதவீத வரி விதிக்கப்படும்.

2022, ஏப்ரல் 1-ந் தேதிக்கு முந்தைய காலத்துக்கு கிரிப்டோகரன்சி மீது வரிவிதிப்பது குறித்து, ஏப்ரல் 1-ந் தேதிக்கு முந்தைய பரிமாற்றங்களுக்கு உங்கள் வருமான வரி கணக்கு படிவத்தில் ஒரு தலைப்பை பார்ப்பீர்கள். உங்கள் மதிப்பீட்டு அதிகாரி, உங்களுக்கான மதிப்பீட்டை செய்வார்.

தற்போதும் சிலர் கிரிப்டோகரன்சி மீதான ஆதாயங்களை காட்டி வரி செலுத்துகிறார்கள். ஆனால் சிலர் அதைச் செய்வதில்லை. டி.டி.எஸ். முறையின் கீழ் இப்போது கொண்டுவந்துவிட்டதால், ஒவ்வொரு பரிமாற்றமும் தானாகவே வருமான வரித்துறைக்கு வந்து விடும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave your comments here...